அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போன்று சிறிலங்கா விமானப்படையின் கட்டளை அமைப்பில் இப்போது மாற்றங்கள் இடம்பெறப் போகின்றன.
ஆனால், யாழ்ப்பாணத் தமிழன் ஒருவருக்கு வரவேண்டிய சிறிலங்கா விமானப்படையின் தளபதி சிங்கள அரசினால் பதவி தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு திட்டமிட்டு நிகழ்த்தியுள்ள சதி இது.
தமிழன் ஒருவர் சிறிலங்காவின் வான்படைக்குத் தலைமையேற்கக் கூடாதென்ற நோக்கில் அவர் திட்டமிட்டே ஓய்வுபெறச் செய்யப்பட்டுள்ளார்.
இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்று பார்க்கலாமா?
சிறிலங்கா வான்படையின் தளபதியாக இருப்பவர் எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக.
இவருக்கு எதிர்வரும் 28ம் திகதியுடன் 55வயது நிறைவடைகிறது.
சிறிலங்காப் படைகளின் தளபதிகள் 55வயதுடன் ஓய்வுபெற வேண்டும் என்ற நியதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏற்கனவே சேவைநீடிப்பில் உள்ள இவர் இப்போது ஓய்வுபெற வேண்டிய நிலையில் உள்ளார்.
சிறிலங்கா வான்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் அடுத்த மாதம் 2ம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
அதை முன்னிட்டு சில தினங்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுகளில் இந்திய வான்படையின் துணைத்தளபதி ‘சுகோய்‘ போர் விமானங்களின் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளார்.
வேறு பல நாடுகளின் வான்படை அதிகாரிகளும் சிறிலங்கா வரவுள்ளனர்.
இந்தநிலையில் சிறிலங்கா வான்படைகுப் புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
போர்க்காலத்தில் சிறிலங்கா அரசுடன் நெருக்கமாக ஒத்துழைத்து செயற்பட்ட எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலகவே பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எயர் சீவ் மார்ஷல் றொசான் குணதிலக ஓய்வு பெறுகின்ற நிலையில் அடுத்த வான்படைத் தளபதி யார் என்ற கேள்வி முன்னர் எழுந்தது.
சிறிலங்கா வான்படைக்கு அடுத்த தளபதியாகக் கூடிய நிலையில் இருந்தவர் எயர் மார்ஷல் பி.பி.பிறேமச்சந்திரா.
பாலசுந்தரம் பிறேமச்சந்திரா என்ற யாழ்ப்பாணத் தமிழர் இவர்.
சிறிலங்கா வான்படையின் இரண்டாவது நிலைத் தளபதியாக- வான்படையின் தலைமை அதிகாரியாக பதவியில் இருந்தவர்.

இவருக்கே அடுத்த வாய்ப்பு என்று கருதப்பட்ட போதிலும் சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசு அவரைப் புறந்தள்ளி விட்டு சிங்களவர் ஒருவரை இந்தப் பதவியில் நியமித்துள்ளது.
இதற்காக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ, வான்படைத் தலைமை அதிகாரியாக இருந்த எயர் வைஸ் மார்ஷல் பி.பி பிறேமச்சந்திராவை பதவியில் இருந்து ஓய்வுபெற வைத்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி இவர் நிர்ப்பந்தத்தின் பேரில் ஓய்வுபெறச் செய்யப்பட்டார்.
ஆனாலும் அவர் வேறெங்கும் சென்று விடாமல் இருப்பதற்காக- அவரைக் கண்காணிப்பில் வைத்திருப்பதற்காக பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவி ஒன்றைக் கொடுத்துள்ளார் கோத்தாபய ராஜபக்ஸ.
சிறிலங்கா வான்படையின் முக்கிய பதவிகள் அனைத்தையும் வகித்துள்ள எயர் மார்சல் பி.பி. பிறேமச்சந்திரா இப்போது ஓய்வுபெற வைக்கப்பட்டதற்கு ஒரே காரணம்- அவர் தமிழர் என்பது தான்.
பொதுவாக சிறிலங்கா படைகளைப் பொறுத்தவரையில் இரண்டு வழிகளில் ஓய்வு பெறலாம்.
முதலாவது நிரந்தரப் படைப்பிரிவில் உள்ள எவரும் 22 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் தாமாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறலாம்.
அல்லது 55 வயதில் ஓய்வு பெறலாம்.
எயர் மார்ஷல் பி.பி.பிறேமச்சந்திரா விருப்ப ஓய்வில் செல்பவராக இருந்திருந்தால் - 1979இல் வான்படையில் சேர்ந்து பயிற்சியை முடித்து 1981இல் அதிகாரியான அவர் கடந்த 30 வருடங்களாக சிறிலங்கா வான்படையில் சேவையாற்றியிருக்க மாட்டார்.
22 வருடங்களிலேயே ஓய்வு பெற்றுச் சென்றிருப்பார்.
எனவே அவர் விருப்ப ஓய்வில் சென்றிருக்க- அதுவும் தளபதி பதவியே கைகூடி வரும்போது அதிலிருந்து விலகிச் செல்ல விரும்பியிருக்கமாட்டார்.
அடுத்து இவருக்கு 55வயது கூட ஆகவில்லை.
இவர் 1957 மே 1ம் திகதி பிறந்தவர். அவருக்கு இன்னமும் 54 வயது கூட நிறைவடையவில்லை.
ஆனால் இவரை விட வயதில் மூத்தவரான - 1956 பெப்ரவரி 28ம் திகதி பிறந்த எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலகவை 55வயது வரை பதவியில் வைத்திருந்த சிறிலங்கா அரசாங்கம் - அவரை விடவும் சுமார் ஒரு வயது இளையவரான எயர் மார்ஷல் பி.பி.பிறேமச்சந்திராவை துரத்தி விட்டது.
இவருக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்கு தமிழர் என்பதை விட வேறு காரணங்கள் இல்லை.
சிறிலங்காவில் தமிழர் ஒருவர் ஆயுதப் படைகளுக்குத் தலைமையேற்க முடியாது என்ற எழுதப்படாத விதியை இது காட்டுகிறது.
சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது தளபதியாக இருந்தவர் ஒரு தமிழர்.
சிறிலங்கா கடற்படைக்கும் பின்னர் ஒரு தமிழர் தளபதியாக இருந்தார்.
ஆனால் வான்படைக்கு ஒரு தமிழர் தலைமையேற்பதை சிங்கள அரசு விரும்பவில்லை.
அதனால் தான் எயர் வைஸ் மார்சல் பிறேமச்சந்திரா ஓரம் கட்டப்பட்டு அவருக்கு கீழ்நிலையில் உள்ள எயர் வைஸ் மார்சல் ஹர்ஷ அபேவிக்கிரமவுக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது.
சிறிலங்கா அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக கூறுவதும் பொய்.
சிங்களப் படைகளிலும், காவல்துறையிலும் தமிழர்களை சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதும் போலி.
அப்படிச் சேர்க்கப்பட்டவர்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியாது என்பதும், சிங்கள அரசின் சேவகர்களாக கடைசி வரை அவர்களின் காலடியில் தான் கிடந்தேயாக வேண்டும் என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.
இதுவரை காலமும் சிங்கள அரசின் விருப்பங்களை நிறைவேற்ற- தமிழ் மக்களின் மீது சிங்கள வான்படை நடத்திய தாக்குதல்களுக்கு ஒரு வகையில் பொறுப்பாக இருந்த எயர் மார்சல் பி.பி.பிறேமச்சந்திராவுக்கு கடைசியில் சிங்கள அரசே ஆப்பு வைத்து விட்டது.
இது கோடரிக் காம்பாக இருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம்.
முகிலன்
ஈழநேசன்



0 Responses to வான்படைத் தளபதி பதவியை பறிகொடுத்த தமிழன்!