அயர்லாந்து தலைநகர் டப்ளின் ( Dublin) இல், வன்னியில் இலங்கை பேரினவாத அரசின் முப்படைகளினால் திட்டமிட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் போராளிகளையும் நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
முதலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரினை சதீஸ் அவர்கள் ஏற்றிவைத்தார், அவரைத் தொடர்ந்து நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவரும் கைகளில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் மலர் வணக்கத்தையும் செலுத்தினர்.
தொடர்ந்து டப்ளின் ரினிற்றி கல்லூரி(Trinity College, Dublin) விரிவுரையாளர் உரை நிகழ்த்தினார். இவர் தனது உரையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையை தமது மனங்களில் நினைவு கூருகின்றார்கள் என்றும், இலங்கை அரசானது வன்னியில் இடம் பெற்ற இந்த படுகொலையை மூடி மறைக்க A-9 வீதிகளில் புத்தர் சிலைகளையும் புத்தமத கொடிகளையும் பறக்க விட்டுள்ளார்கள் எனவும், உலக நாடுகளில் உள்ளவர்களின் அழுத்தங்களினால் தான் தற்பொழுது ஐ.நா அறிக்கை வெளிவந்துள்ளது எனவும், வன்னியில் இறுதிவரை இருந்த மக்களின் தியாகம் அழப்பெரியது எனவும் கூறியதுடன், தமிழ் மொழியில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் எனவும் கூறி தனது உரையை முடித்தார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையை விபரிக்கும் உணர்வுமிக்க கவிதைகள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து அயர்லாந்தில் இருந்து வன்னிக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியத் தேவைகளுக்கான உதவிகள் பற்றி விளக்கிக் கூறியதுடன் மேலும் அடுத்தகட்ட உதவிகள் பற்றியும் மற்றும் இதுவரை அனுப்பிய கணக்கு விபரங்களையும் ஒருங்கமைப்பாளர் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் கானங்கள் அரங்கத்தில் ஒலிக்கவிடப்பட்டது. இந்த அரங்கத்தில் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. இறுதியாக நன்றி உரையினை செல்வி. வதனி அவர்கள் நிகழ்த்தினார்கள். இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் ஒன்று கூடலில் பலதரப்பட்ட வயதினரும் மற்றும் பல்லின சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
அயர்லாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 2ம் ஆண்டு நினைவுநாள்
பதிந்தவர்:
தம்பியன்
19 May 2011



0 Responses to அயர்லாந்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 2ம் ஆண்டு நினைவுநாள்