Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டாண்டுகள் உருண்டோடிவிட்டாலும், ஈழப்போரின் நான்காம் கட்ட இறுதிக் காலங்களில் இடம்பெற்ற படுமோசமான மனிதகுலத்திற்கே எதிரான போர்க்குற்ற செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் உலகை வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு புறத்தில் சில நாடுகள் இக் கொலைகாரர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். மறுபுறத்தில், ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையோ போர்க்குற்றம் புரிந்தவர்களை இனங்கண்டு தண்டனை பெற்றுத்தர சிறிலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறது. சிறிலங்காவின் நட்பு நாடுகள் என்கிற சீனா மற்றும் ரஷ்யா கூட சிறிலங்காவை கைகழுவி விடும் நிலைக்கு வந்துள்ளன.

அரச பயங்கரவாதம் என்கிற கருவியினால் ஈழத்தமிழர்களை பல தசாப்தங்களாக அழிக்க சிங்கள இனவெறி அரசுகள் முற்பட்டது. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை கொலை செய்ததுடன், பல்லாயிரம் கோடி பெறுமதியான தமிழர்களின் சொத்துக்களை அழித்து, பல லட்சம் மக்களுக்கு சொல்லெனாத் துயரை கொடுத்தது சிங்கள அரசுகள். ஐநாவும் சிங்கள அரசின் பக்கமே இருந்து வந்துள்ளது. விடுதலைப்புலிகள் ஏதோ இராணுவ இலக்குகளை குறிவைத்து கொழும்பிலோ அல்லது பிற பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினாலும், உடனே கண்டன அறிக்கைகளை விட்டது ஐநா. ஆனால், சிங்கள அரசு மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள், சிறுவர், முதியோர் மற்றும் அநாதை இல்லங்கள் என பல பொது இடங்கள் மீது வான் தாக்குதல் மூலமாகவும், எறிகணை வீச்சுக்கள் மூலமாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது மௌனியாக இருந்தது ஐநா.

மே 2009-இல் முடிவடைந்ததாகக் கூறப்படும் நான்காம் கட்ட ஈழப்போருக்குப் பின்னர் ஐநாவின் நிலைப்பாட்டில் சில மாறுதல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. பல மேற்கத்தைய நாடுகள் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களைப் பார்த்து அனுதாபங்களை தெரிவித்திருந்தாலும், இவ் நாடுகள்கூட தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை. மாறாக, விடுதலைப்புலிகளை தமது நாடுகளில் தடை செய்தன. இப்படியாக உலக அரசியல் நிலைப்பாடுகள் இருந்த வேளையில்தான் புலிகளின் தலைமை உலக வரைமுறையின் நுணுக்கங்களை நன்கே அறிந்து செயற்பட்டது.

உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ள முடியாத போர்க்குற்றம்

விடுதலைப்புலிகளின் தலைமை மீது உலக நாடுகள் சமாதானத்திற்கு செல்லுமாறு அழுத்தங்களை பல தடைவைகள் கொடுத்தபோது, விடுதலைப்புலிகளும் அவர்களின் அழுத்தங்களுக்கு செவிசாய்த்தார்கள். விடுதலைப்புலிகள் பல தியாகங்களை உலக நாடுகளுக்காக செய்தார்கள். இதனை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள் உலக நாடுகள். தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேறு வழி தெரியாத விடுதலைப்புலிகளின் தலைமை, மே 2009-இல் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தது. சிங்கள அரசோ அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டது சிறிலங்கா அரசு.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டிருந்தவேளையில், சிங்கள அரச படைகள் செய்த அநியாயங்கள் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாதவை. சர்வதேச விதிமுறைகளுக்கு மாறான பல செயற்பாடுகள் நடந்தன. அப்பாவி மக்கள் மீது கொத்துக் குண்டுகள் குறிப்பாக வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இதில் காயமடைந்து சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உடம்பில் இருந்த தீக்காயங்களைப் பார்க்கும்போது, அவை ரசாயனக் குண்டுத் தாக்குதல் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது என்று பல அவதானிகள் கூறினார்கள். ஆனால், தாம் இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தவே இல்லை என்று சிங்கள இராணுவம் வழமைபோலவே மறுப்புத் தெரிவித்தது.

படுமோசமான இனப்படுகொலைகளை மேற்கொண்டு நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்களில் குறிப்பாக இந்த வருடம் மே 10-ஆம் நாளன்று முதல் தடவையாக ஐநாவின் பாதுகாப்புச் சபை கூடி போரின்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவின் நிபுணர் குழு தெரிவித்துள்ளதாக பாதுகாப்புச் சபை அமர்வில் உரையாற்றிய ஐநாவின் மனிதாபிமான உதவிச்செயலாளர் வெலரி எமோஸ் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், இந்தப்போரின் போது இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர். எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று எமொஸ் கோரிக்கை விடுத்தார்.

அமர்வின்போது, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சார்பில் பங்கேற்ற, ஐநாவின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் உதவி செயலாளர் இவான் சிமோனோவிக் அரசியல், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சனைகளே வன்முறைகளுக்கான பிரதான காரணங்கள் என்று குறிப்பிட்டார். வன்முறைகள் இடம்பெற்ற சிறிலங்கா, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் ஐநா சபை சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சிமோனோவிக் கூறினார். இந்த நிலையில் போரில் ஈடுபட்டுள்ளோர் தமது இராணுவ நோக்கங்கள் தொடர்பில் தெளிவான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐநா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுஇ அதனடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என சிமோனோவிக் கேட்டுக்கொண்டார்.

அமர்வின் முடிவில், சிறிலங்கா அரசு உடனடியாக போர்க்குற்ற விசாரணைக்குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பாதுகாப்புச் சபை கேட்டுக்கொண்டது. பல தடவைகள் சிறிலங்கா விடயம் குறித்து பாதுகாப்புச் சபையில் குரல் எழுப்ப பல நாடுகள் முற்பட்ட வேளையில், சில நாடுகள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளினால் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புச் சபையில் முதல் முதலாக இப்பிரச்சனை முன் வைக்கப்பட்டுள்ளதானது, உலகத்தமிழருக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றியாகவே கருதப்படுகிறது.

வன்முறையை தொடர்ந்தும் ஏவ முனையும் சிங்கள ஏகாதிபத்தியம்

குறித்த ஐநாவின் பாதுகாப்புச் சபை அமர்வில் கலந்துகொண்ட ஐநாவின் சிறிலங்காவிற்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹன, சிறிலங்காவில் 25 வருடங்களாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், சிறிலங்கா அரசாங்கம் போரின் போது பொதுமக்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டினர். இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தோல்வியடையும் கட்டத்திலேயே போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக கோஹன தெரிவித்தார்.

இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் பல கேள்விகளை பாலித கோஹனவிடம் பாதுகாப்புச் சபையில் வைத்து கேட்டார். குறித்த செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறிய பாலித கோஹன சபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையில், ஐநாவுக்கான சிறிலங்காவின் பிரதிநிதிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வழமைபோலவே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு கைவந்த சூழ்ச்சிகளை செய்து ஐநாவை தனது வலைக்குள் சிக்கவக்கலாமென்று மனப்பால் குடிக்கிறார். ஐநாவின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு விளக்கமளிப்பதை விடுத்து, தனது அரசாங்கம் குறித்த அறிக்கைக்கு ஒருபோதும் செவிசாய்க்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் ராஜபக்ச. ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு மட்டுமே தனது அரசு விளக்கமளிக்கும் என்று கூறினார் ராஜபக்ச. ஆகவே, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தருஸ்மன் அறிக்கையை தனது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ச தொடர்ந்தும் கூறுகையில், “எனது அரசு ஒரு பொதுமகன் கூட மோதல்களில் கொல்லப்படக் கூடாது என்பதற்காக படையினருக்கு மனித உரிமைகள் குறித்து பாடம் எடுக்கப்பட்டது.” உண்மை நிலவரங்களை நட்பு நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ஏற்கனவே, ஐநாவையை தனது வன்முறை கலாச்சாரத்தின் மூலமாக அடிபணிய வைக்கலாம் என்று கருதினார் மகிந்த ராஜபக்ச. இவருக்கு ஆதரவாக பல சிங்கள ஏகாதிபத்திய அரசியல் கட்சிகள் மற்றும் பௌத்த மத தலைவர்கள் ஐநாவுக்கு எதிராகப் பேசிவந்தார்கள்.

மகிந்த ராஜபக்ச அரசில் முக்கிய அமைச்சராக இருக்கும் மேர்வின் சில்வா நேரடியாகவே ஐநா மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு எதிராகப் பேசுகிறார். பான் கீ மூன் அல்லது வேறு எந்தவொரு சர்வதேச சக்திகளும் சிறிலங்காவின் உள்நாட்டு விடயத்தில் தலையிட முயன்றால் அவர்களைக் கொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். ஐநாவின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையொப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை கண்டியில் சமீபத்தில் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே குறித்த எச்சரிக்கையை அமைச்சர் மேர்வின் சில்வா விடுத்தார்.

அவர் மேலும் பேசுகையில்: “ஐநாவின் பொதுச் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சிறிலங்காவின் உள்நாட்டு விடயங்களில் தலையிட முற்படாதீர்கள். அவ்வாறு தலையிட முற்பட்டால் அது எந்த சர்வதேச விசாரணைக்குழுவாக இருந்தாலும் அவர்களைப் படுகொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக்குண்டுதாரிகள் தற்போதைக்குக் களனியில் தயாராக இருக்கின்றனர். நிபுணர்குழுவின் தலைவர் தருஸ்மான் தாயொருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்க முடியாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராகத் தான் இருக்க வேண்டும்."

நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுற்று இரண்டாண்டுகள் நிறைவுபெறும் இவ்வேளையில், உலக நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் நடவடிக்கைகள் உலகத்தமிழருக்கு ஆறுதலாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. சிறிலங்காவின் நட்பு நாடுகள் என்று கூறப்படும் சீனா மற்றும் ரஷ்யா தர்மத்தின் பக்கம் திரும்பி அரக்கர்களுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென்பதே நூறு கோடி உலகத்தமிழரின் அவா. சீனா மற்றும் ரஷ்யா சமீபத்தில் சிறிலங்காவை எச்சரித்து அறிக்கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களுடன் சேர்ந்து ரஷ்யா மற்றும் சீனா சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒத்தாசை வழங்கினால், பல்லாயிரம் பொதுமக்களை அழித்த பகைவர்களை கூண்டிலேற்றும் காலம் வெகு தொலைவிலில்லை. அதற்காக போராட சபதமெடுக்கும் மாதமே மே.

nithiskumaaran@yahoo.com

0 Responses to பல்லாயிரம் மக்களை அழித்த பகைவர்களை கூண்டிலேற்ற சபதமெடுக்கும் நேரமிது - அனலை நிதிஸ் ச. குமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com