சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் ராஜபக்ஷே நேற்று உறுதியளித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு ராஜபக்ஷே நேற்று தனது உரையில் கூறியது:
"பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு தற்போது ஒன்றுபடுத்தப்பட்டு, அனைத்து இன மக்களும் சமமாக வாழ வழிவகுத்ததற்காக இந்த யுத்த வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. போரில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரசியல் அமைப்புக்குள் மனித உரிமைகளை உள்ளடக்கி, சர்வதேசத்திடம் சமர்பிப்பதன் மூலம் நாட்டின் மனித உரிமையை பாதுகாக்க முடியாது. மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.
வெளிநாடுகளில் வாழும் பழைய பயங்கரவாதிகள் மீண்டும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் அவர்கள், அந்நாடுகளிலுள்ள ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மையே.
அதேநேரத்தில், உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலமே ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிலைமையே எமது நாட்டிலும் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே போரை முடிவுக்கு கொண்டுவந்த எமது போர் வீரர்களுக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு கையில் துப்பாக்கியும் மறு கையில் மனிதாபிமானத்தையும் வைத்துக்கொண்டே எமது படையினர் யுத்த களத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி, மதம் என்பவற்றைப் பார்க்கவில்லை.
ஆனால், எமது படையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது மிகவும் தவறு.
படையினரே... யுத்த காலத்தில் நாம் உங்களுடன் இருந்தோம். எமது இதயங்களில் நீங்கள் குடிகொண்டிருக்கின்றீர்கள். இந்நிலையில், உங்களை நாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை.
எமது உள்நாட்டு பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் எமது மக்கள் எமக்கு உதவுவர். அதில், வெளிநாட்டினர் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லை.
சர்வதேச நாடுகளைப் போன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை மீறும் சம்பவங்கள் இங்கு இல்லை. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் யுத்திமின்றி, நாட்டில் சுதந்திரக் காற்றை சுவாசித்து, இயல்பு வாழ்க்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்," என்றார் ராஜபக்ஷே.
உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: படையினரிடம் போர்க்குற்றவாளி ராஜபக்ஷே
பதிந்தவர்:
ஈழப்பிரியா
28 May 2011



0 Responses to உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம்: படையினரிடம் போர்க்குற்றவாளி ராஜபக்ஷே