Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் காலூன்றும் பௌத்தம்

பதிந்தவர்: ஈழப்பிரியா 20 May 2011

சில மாதங்களுக்கு முன்னர் நூற்றுக்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வந்து தங்கியிருந்து கொண்டு, தமக்கு குடியிருக்க காணிகளை ஒதுக்கித் தர வேண்டும் என்றனர்.

முன்னர் யாழ்ப்பாணத்தில் குடியிருந்ததாகக் கூறிய அவர்கள், தாம் மீளக்குடியமர்வதற்கு காணிகள் தருமாறு கேட்டனர்.

அதற்கு யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் என்று தமிழ் ஊடகங்கள் எழுதித் தள்ளின. அரசியல்வாதிகளும் முழங்கித் தள்ளினர்.

இந்த இழுபறி நடந்து கொண்டிருக்க, ஒருநாள் இரவோடு இரவாக அவர்களை இராணுவப் பின்னணியுடன் ஏற்றிச் சென்று நாவற்குழியில் குடியமர்த்தியது அரசாங்கம்.

தாமாகவே போய்க் குடியேறியது போல அவர்கள் காட்டிக் கொண்டனர்.

அரசாங்கக் காணியில் குடியேறிய அவர்களை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை.

இப்போது அவர்கள் நாவற்குழியில் நிரந்தரமாகக் குடியேறி விட்டார்கள்.

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராகப் பேசியவர்களும், எழுதியவர்களும் அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டு போகின்றனர்.

அது ஒருபுறமிருக்க, இப்போது சிங்களவர்கள் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்துக்கு வேறொரு வடிவத்தில் உள்நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளை விலை கொடுத்து வாங்கித் தமது தொழில்களை அவர்கள் விரிவுபடுத்துகின்றனர்.

இந்தக் குடியேற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரியவராது.

ஆனால் யாழ்ப்பாணத்திற்குள் சிங்களக் குடிப்பரம்பலை அதிகரிப்பதே இதன் நோக்கம்.

அரசாங்கத்தின் துணையுடன் தான் இதெல்லாம் நடந்தேறுகிறது.

இதைக் கேட்கப் போனால் தமிழர்கள் கொழும்பில் வீடுகளை வாங்கவில்லையா என்று கேட்கிறார்கள்.

அது போதாதென்று கொழும்பில் சிங்களவர்களை சிறுபான்மையினராக்கி விட்டனர் என்று புலம்புகிறார் மகிந்த ராஜபக்ஸ.

என்னதான் இருந்தாலும் கொழும்பில் தமிழர்களின் குடித்தொகை அதிகரிப்பால் அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

ஆனால் சிங்களவர்களின் குடித்தொகையை சிங்கள அரசு யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பதற்கு ஒரு உள்நோக்கம் உள்ளது.

கொழும்பிலுள்ள தமிழர்கள் ஒருபோதும் அதைத் தமது பாரம்பரிய நிலம் என்று கூற முடியாது.

ஆனால் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வடக்கு, கிழக்கு தமிழரின் பாரம்பரிய நிலம்.

அதற்குள் விரிவடைந்து வரும் சிங்களக் குடியேற்றங்கள் இந்தப் பாரம்பரிய நிலத்தின் மீதான தமிழரின் உரிமையை கேள்விக்குள்ளாக்கக் கூடியது.

அதனால் தான் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து அச்சத்துடன் நோக்க வேண்டியுள்ளது.

இப்போது அரசாங்கம் வெளிப்படையான சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்த்துக் கொண்டுள்ளது.

அது பூதாகரமான பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதால்,வேறு வடிவத்தில் யாழ்ப்பாணத்துக்குள் ஊடுருவத் தொடங்கியது.

அதன் ஒரு வடிவம் தான் யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள பௌத்த தமிழ்ச் சங்கம்.

இந்தச் சங்கத்தை உயிர்ப்பித்தது வேறு யாரும் அல்ல-அரசாங்கம் தான்.

அதற்கான நிதியுதவிகள் அனைத்தையும் வழங்குவது யாழ்.படைகளின் தலைமையகமும், நாகவிகாரையும் தான்.

அங்கிருந்து தான் எல்லா உத்தரவுகளும் போகின்றன. அதன்படி பௌத்த தமிழ்ச் சங்கம் இயங்குகிறது.

பௌத்த தமிழ்ச் சங்கம் என்றால் எதற்காக அச்சத்துடன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

நாம் சிங்களக் குடியேற்றங்களை, சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்கிறோமா அல்லது பௌத்த மதத்தை எதிர்க்கிறோமா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் சிறிலங்காவில் பௌத்தம் என்பது தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு மதம் என்று கூற முடியாது.

அது ஒரு ஆக்கிரமிப்பின் சின்னமாகவே தமிழர்களுக்கு அமைந்துள்ளது.

புத்தர் போதித்த முறையின் கீழ் சிறிலங்காவில் பௌத்தர்கள் செயற்படுவதில்லை.

பௌத்த மதத்துக்கு எந்த வழிகளில் எல்லாம் முரணாகச் செயற்பட முடியுமோ அந்த முறைகளில் தான் சிறிலங்காவில் உள்ள பௌத்தர்கள் செயற்படுகின்றனர்.

பௌத்தம் என்பது சிங்கள இனவாதத்துடன் ஊறிப் போனதொரு விடயமாக மாறிவிட்டது.

அதனால் தான் இது சிங்கள பௌத்த பேரினவாதமாகத் தோற்றம் பெற்றுள்ளது.

தமிழரின் ஆயுதப் போராட்டம் தமிழரின் நிலங்களில் இடம்பெற்று வந்த சிங்களக் குடியேற்றங்களையும், பௌத்த விரிவாக்கத்தையும் பெரிதும் தடைப்படுத்தி விட்டது.

அதன் காரணமாக அவர்கள் வடக்கு, கிழக்கை உரிமைகோர முடியாத நிலை இருந்தது.

ஆனால் இப்போது போரில் வென்று விட்ட சிங்கள தேசம் முதலில் செய்த காரியம்- பௌத்த விகாரைகளைக் கட்டியது தான்.

இப்போது வடக்கு கிழக்கெங்கும் பௌத்த விகாரைகள் முளைத்து விட்டன.

புதிது புதிதாக பௌத்த சின்னங்கள் முளைக்கின்றன.

அதுபோதாதென்று அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தமிழர் நிலங்களில் பௌத்த சின்னங்கள் மீட்கப்படுவதாகவும் கதை கட்டப்படுகிறது.

சிங்கள அரசுடன் இணைந்ததாக பௌத்த பீடங்கள் இதையே செய்கின்றன.

எனவே பௌத்த விரிவாக்கத்தை எதிர்ப்பது ஒரு மதம் மீதான எதிர்ப்பாகவோ, மதவெறியாகவோ கருத இடமில்லை.

சிங்களமும், பௌத்தமும் இணைந்து விட்ட ஒரு பேரினவாதப் பூதமே சிறிலங்காவை ஆட்டிப் படைக்கிறது.

குறிப்பாக தமிழர்களுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இப்போது சிங்கள குடியேற்றங்களுக்குப் பதிலாக பௌத்த மயப்படுத்தல் என்ற புதிய வடிவிலான ஆக்கிரமிப்புத் தொடங்கியுள்ளது.

பௌத்த தமிழ்ச் சங்கம் தான் அதற்கு அடிக்கல்.

இந்த பௌத்த தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டவுடன் ஐந்து இடங்களில் தம்ம பாடசாலைகளை அமைக்கப் போவதாகவும் அறிவித்தது.

அந்த ஐந்து இடங்களில் ஆளுக்கு ஒருவர் கூட பௌத்தர்கள் கிடையாது.

பௌத்தர்கள் இல்லாத இடத்தில் தம்ம பாடசாலைகள் எதற்கு, விகாரைகள் எதற்கு?

இப்போது என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் விகாரைகள் கட்ட காணிகளை வழங்குவோருக்கு வீடுகள் கட்ட பௌத்த தமிழ்ச் சங்கம் நிதிஉதவி வழங்கப் போகிறதாம்.

வறியவர்களை வளைத்துப் போட்டு நிதியை வழங்கி, பௌத்தத்தைப் பரப்ப எடுக்கப்படும் முயற்சியே இது.

தமிழரின் பலவீனங்களைப் பார்த்து குறிவைத்து அடிக்கத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம்.

முன்னர் யாழ்ப்பாணத்தில் விகாரை என்றால் யாழ்.நாகவிகாரை, நயினாதீவு நாகவிகாரை என்றிருந்த நிலை மாறி இப்போது மாதகல், காங்கேசன்துறை, என்று ஏராளம் விகாரைகள் முளைத்து விட்டன.

ஒவ்வொரு படைத்தளங்களுக்குள்ளேயும் முளைத்திருக்கின்ற விகாரைகள் பலருக்கும் தெரியாது.

இது போதாதென்று இப்போது வீடு கட்டித் தருகிறோம் என்று மயக்கி காணிகளைப் பெற்று விகாரைகள் அமைக்கும் சதித்திட்டங்களும் அரங்கேறத் தொடங்கி விட்டன.

உடுவில் கிழக்கில் ஒரு விகாரைக்கான பணிகள் தொடங்கப் போகிறது.

வரணியில் மற்றொருவர் கொடுத்துள்ள காணியில் விகாரையா அல்லது தம்ம பாடசாலையா அமைப்பது என்று ஆலோசனை நடக்கிறது.

இப்போது என்னவென்றால் யாழ்.பல்கலைக் கழகத்துக்குள் கூட பௌத்தம் புகுந்து விட்டது.

அங்கு பௌத்த சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது யாழ்ப்பாணத்தை எந்தளவுக்கு வேகமாக சிங்கள அரசு பௌத்த மயப்படுத்துகிறது என்பதற்கான அடையாளங்கள்.

இந்த பௌத்த மயப்படுத்தலுக்கு மெல்ல, மெல்ல யாழ்ப்பாண மக்களும் பழகிப் போகத் தொடங்கி விட்டனர்.

வேறு வழியில்லை,அனுசரித்துப் போக வேண்டும் என்ற நிலை ஒருபுறம்.

கிடைக்கின்ற சலுகைகளுக்காகவும், சுகபோகங்களுக்காகவும் சகித்துக் கொள்வது மற்றொரு புறம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் பெரியளவில் விரிவாக்கம் பெற்ற வருகிறது.

இந்த பௌத்த பேரினவாத விருட்சம் வடக்கு கிழக்கெங்கும் விரைவிலேயே படர்ந்து விடும் ஆபத்து உள்ளது.

பௌத்தத்தின் பெயரால் சிங்களப் பேரினவாதம் யாழ்ப்பாணத்துக்குள் எடுத்து வைத்திருக்கும் காலடியை முறித்துப் போட வேண்டிய பொறுப்பு அங்குள்ள மக்களுக்கே உள்ளது.

இதை முளையிலேயே செய்யத் தவறினால் ஊருக்கு ஊர் கோயில் இருந்த நிலை மாறி விகாரைகள் தான் உருப்பெற்று விடும்.

முகிலன்
ஈழநேசன்

0 Responses to யாழ்ப்பாணத்தில் காலூன்றும் பௌத்தம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com