Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒசாமா பின்லாடன் இறந்த பிறகு எழுந்த சாதக பாதக விளைவுகள் பற்றிய கருத்துக்களில் இறையாண்மைத் தேய்வு முக்கிய இடம் பிடிக்கிறது. அரசானது தனது கட்டுப்பாட்டிலுள்ள புவித்தரை மீதும் அதில் வாழும் குடிமக்கள் மீதும் செலுத்தும் ஆட்சி அதிகாரம் என்று இறையாண்மை பற்றிச் சர்வதேசச் சட்டம் குறிப்பிடுகிறது.

இறையாண்மை பற்றிய இத்தகைய வரையறைகள் 1648ல் நிறைவேறிய வெஸ்ற்பாலியா அமைதி உடன்படிக்கை (Peace Of Westphalia) தொடக்கம் நிலவுகின்றன. இந்த உடன்படிக்கையில் இறையாண்மை (Sovereignty) தொடர்பாக மூன்று கருப் பொருள்கள் வலியுறுத்தப்பட்டன.

தரைப்பரப்பு ஒருமைப்பாடு (Territorial Integrity), எல்லைகள் மீறப்படாமை (Border Inviolability), நாட்டின் மேலாதிக்கம் (Sovereignty Of The State) என்பன அந்த மூன்றுமாகும்.

.நா சாசனம் இறையாண்மை பெற்ற நாடுகளுக்கு உறுப்புரிமை வழங்குகிறது. ஒரு உறுப்பு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்ற கோட்பாட்டை அது வலியுறுத்துகிறது. இது மனிதநேயத் தலையீடுகளுக்குத் (Humanitarian Intervention ) தடையாக இருக்கிறது.

இலங்கைப் போர்க் குற்ற விசாரணைக் குழுவினர் இந்த நாட்டிற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை நடத்த இயலாமல் போய்விட்டது. தனது இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைக் குழுவினருக்கு உள்நுளைவு அனுமதி வழங்க இலங்கை மறுத்து விட்டது.

ஒசாமா பின்லாடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திற்கு வடக்கே 60 கி.மீ தொலைவிலுள்ள அபொட்டாபாத்தில் தலைமறைவாக வாழ்ந்தார். அவரை உயிருடன் அல்லது சடலமாகக் கைப்பற்றுவதற்கு பாகிஸ்தானின் தரைப்பரப்பிற்குள் வான்வழியாக ஊடுருவிய அமெரிக்கர்கள் அவரைக் கொன்று உடலையும் கைப்பற்றிச் சென்றனர்.

இந்த நடவடிக்கை பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமல் மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டது. பாகிஸ்தான் அரசின் பாதுகாப்புடன் அந்த நாட்டில் ஒசாமா ஏழரை வருட காலம் வாழ்ந்தற்கான ஆதாரத்தை அமெரிக்கர்கள் பெற்றுள்ளனர். கடந்த பத்து வருடமாகத் தேடப்பட்ட சர்வதேசப் பயங்கரவாதியை மறைத்து வைத்திருந்த பாகிஸ்தானை அமெரிக்கா நம்பத் தயாரில்லை.

அமெரிக்கப் படையினரின் ஊடுருவல் பாகிஸ்தான் அரசின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பாகிஸ்தான் அரசு குற்றஞ் சுமத்துகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இது போன்ற வேறு நடவடிக்கைகளை இனிமேலும் எடுக்க வேண்டாமென்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒசாமா பின்லாடன் விவகாரம் வலுவுக்கும் (Power) இறையாண்மைக்கும் இடையில் நெடுங்காலமாக நடக்கும் போட்டியை எடுத்துக் காட்டுகிறது. இறையாண்மை ஏட்டுச் சுரைக்காய் போன்றது. அரசனின் கோழி முட்டை குடியானவனின் அம்மியை மோதி உடைக்கும் என்று சொல்வார்கள்.

அமெரிக்காவின் இராணுவ வலு வெளிக்காட்டல் (Power Projection) பாகிஸ்தானுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இராவணனின் நாட்டிற்குள் அனுமான் ஊடுருவிய வரலாற்றுச் செய்தியையும் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தெற்கு ஆசிய வரலாற்றில் ஏற்கனவே 1987ல் அதே புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுவிட்டதை அரசியல் நோக்கர்கள் வசதியாக மறந்து விட்டனர் இந்திய விமானங்கள் 1987 யூன் 4ம் நாளன்று யாழ் குடா நாட்டு வான் பரப்பில் பறந்தன. இந்த நடவடிக்கைக்குப் பூ மாலை (Garland) அல்லது கழுகுப் பயணம் 4 (Magle Mission 4) என்று இந்திய அரசு பெயரிட்டது.

பசிப்பிணியால் வாடிய யாழ் மக்களுக்கு வானில் இருந்து உணவு வழங்கலைப் செய்வதற்காக இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது. கருணைப் பறப்பாக (Mercy Mission) அது சித்தரிக்கப்பட்டது. 1987 யூன் 2ம் நாள் இந்தியக் கடற்படையினர் படகு மூலம் யாழ் குடாவுக்கு உணவளிக்க முயன்றனர்.

இலங்கைக் கடற்படையினர் அதைத் தடுத்து விட்டனர். இதற்குப் பதிலடியாக விமான மூலம் உணவளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஐந்து என் 32 அன்ரனோவ் சரக்குக் காவி விமானங்கள் ஐந்து மிராஷ் 2000 ரகப் போர் விமானங்கள் பூமாலை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

மிராஷ் போர் விமானங்களில் மற்ரா (Matra) விமான எதிர்ப்பு மிசைல்ஸ் பொருத்தப்பட்டிருந்தன. சரக்கு விமானங்களில் 25 தொன் உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்டன. 36 சர்வதேச மற்றும் இந்தியப் பத்திரிகையாளர்கள் சரக்கு விமானங்களில் சென்றனர்.

மாலை நான்கு மணியளவில் கர்நாடகாவின் பெங்களுர் விமான நிலையத்தில் இருந்து. பறப்புக்கள் தொடங்கப்பட முன் இந்திய வெளிவிவகார அசைச்சர் நட்வர் சிங் புதுடில்லிக்கான சிறிலங்காத் தூதரை வெளிவிகார அமைச்சகத்திற்கு அழைத்தார்.

உணவு வழங்கல்கள் மாலை நான்கிற்கு நடக்கும். ஏதேனும் எதிர்ப்புக்கள் எழுந்தால் மிராஷ் சண்டை விமானங்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ளும் என்றார். மிரட்டலுக்குப் பெயர் பெற்ற நட்வர் சிங் யாழ் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் வேறு இடங்களிலும் உணவுப் பொதிகள் பரசூட் மூலம் போடப்பட்டன.

மிராஷ் விமானங்கள் சாகசப் பறப்புக்களை யாழ் குடா வானில் மேற்கொண்டன. பலாலி விமான தளத்தின் மீது வட்டமடிக்கப்பட்டது. மாலை 6.13க்கு நடவடிக்கை நிறைவேறிய பிறகு விமானங்கள் திரும்பி விட்டன.

யாழ் குடா மக்கள் மனதில் மீட்பர்கள் வந்துவிட்டார்கள் என்ற எழுச்சி காணப்பட்டது. விமானங்கள் போட்ட உணவுப் பொதிகள் வெறும் குறியீடு மாத்திரமே. உலர்ந்த மரக்கறிகளும், அரிசி மூடைகளும் மொத்தம் 25 தொன்னுக்கும் குறைவாக இருந்தன. குடா மக்களின் ஒரு நாட் பசியைப் போக்க அது போதுமானதல்ல.

வரலாறு படித்தவர்கள் இந்திய மத்திய அரசின் உள்நோக்கம் பற்றி அச்சம் அடைந்தனர். சந்திவிக்கிரகப் போர்முறையில், அதாவது நண்பனாக நெருங்கி வந்து தாக்குதல் நடத்துவதில் ஆரிய வடவர்கள் வல்லவர்கள் என்பதை அவர்கள் கற்றறிந்திருந்தனர்.

கொழும்பில் சிங்கள மக்கள் கொதிப்படைத்தனர். இந்தியத் தூதரகம் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்திய தூதர் ஜே.என். டீக்சிற் இந்தியர்களுக்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் தூதரக அதிகாரிகளின் குடும்பங்களோடு தஞ்சம் அடைந்தார். இந்திய வர்த்தகர்களும் தமது பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா மேற்கு நாடுகளின் உதவியை நாடினார். அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய வல்லரசுகள் பிராந்திய வல்லரசு, இந்தியாவை மீறி உதவிக்கு வர மறுத்தன. சீனாவும் மறுத்து விட்டது. தனித்து விடப்பட்ட ஜனாதிபதி இந்திய அரசுடன் உடன்பாட்டிற்கு வந்தார்.

இலங்கை இந்திய உடன்படிக்கை 1987 கைச்சாத்திட்ட பிறகு நியூயோர்க் ரைம்ஸ், லண்டன் ரைம்ஸ் பத்திரிகைகளுக்குச் செவ்வி வழங்கிய ஜெயவர்த்தனா, நான் ஒரு வல்லரசையும் நம்ப மாட்டேன்என்றார். (I Don’t Trust A Single Power) தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்இந்தியசிறிலங்கா ஒப்பந்தத்தை ஒரு சமாதான உடன்படிக்கை என வர்ணிக்க முடியாது. அது ஒரு யுத்த உடன்பாடுஎன்று எதிர்கால உணர்வுடன் சொன்னார். (The Tamil Militants Before And After The Accord – Dagmar Hellman Rajanayagam. Pacific Affairs Vol 61. N0 4 1988-89 pp 603-619)

1987ன் இலங்கைத் தலையீட்டிற்கு முன்னர் 1971ல் கிழக்கு பாகிஸ்தானில் தலையிட்டு வங்க தேசம் உருவாக இந்தியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோல் தமக்கும் ஒரு நாட்டை இந்தியா உருவாக்கித் தரும் என்று அனேகம் ஈழத் தமிழர்கள் மனப்பால் குடித்தனர்.

இப்போதிருக்கும் இலங்கை தொடர்பான சூழலில் பங்காளிகளான இந்தியாவும் அமெரிக்காவும் மதில் மேல் பூனையாக இருக்கின்றன. இன்னொரு தலையீட்டிற்கு இடமிருக்கிறது. அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது.

ஈழத் தமிழர்களைக் கருவறுப்பார்களா அல்லது கைதூக்கி விடுவார்களா என்று சற்றுப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறையாண்மை படிப்படியாகத் தோல்வி அடைகின்றது. தலையீடுகள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளாக இல்லாமல் சர்வதேச ஒழுங்கின் முக்கிய அங்கமாக இடம் பெறுவது உறுதி.

அமெரிக்காவின் வால் ஸ்ரிற் ஜேர்னல் (Wall Street Journal) சென்ற வாரம் ஒரு முக்கிய செய்திக் குறிப்பை வெளியிட்டது. ஒரு தலையீட்டு நாடுகளின் இறையாண்மை முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இனப் படுகொலைக்கு முகங் கொடுக்கும் பொது மக்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் உயர்வடைகிறது.

ஹாவாட் பல்கலைக் கழகப் பேராசிரியை சாரா சேவால் (Sarah Sewall) தலையீட்டு வெளிவிவகாரக் கொள்கையை (Interventionist Foreign Policy) முன்னெடுக்கும் மூலோபாய வகுப்பாளர்க்குத் தலைமை தாங்குகிறார். அவருடைய முயற்சியால் லிபியத் தலையீடு சாத்தியமானதாகச் சமகால அரசியல் ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.

.நா மட்டத்தில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்களில் இறையாண்மை பற்றிய சாதகமான நிலைப்பாடுகள் குறைந்தளவில் காணப்படுகின்றன. பாரிய மாற்றங்கள் நடக்கும் காலகட்டத்தில் நாம் பார்வையளர்களாக இல்லாமல் பங்காளிகளாக இருக்கிறோம்.

0 Responses to பின்லாடன் படுகொலையும் இறையாண்மைத் தேய்வும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com