சிங்கள அரசின் இனவெறிக் கரங்கள், தமிழ் மக்களின் வாழ்வை, வாழ்வாதாரங்களை, இருப்பை சிதைத்தழித்த பெரும் கொடுமையின், சர்வதேச சாட்சியமாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது.காலங்காலமாகத் தொடரும் தமிழ் இனத்துக்கு எதிரான இனஅழிப்புக் கொடுமை, சிங்கள ஆட்சியாளர்களால் உலகிற்கு மறைக்கப்பட்டு கனகச்சிதமாக மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளது.
இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் எம்மக்கள் சந்தித்த மிகக் கொடூரமான இனவதையின் கொடுமைகள், சர்வதேச சமூகத்தை அதன் மனச்சாட்சியை சிறிதளவிற்கேனும் அசைத்திருக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை, விடுதலை வேண்டிப் போராடும் எம் இனத்தின் போராட்டத்தின் நியாயத் தன்மையை ஏற்பதாய் அமையும்.
சர்வதேச அரங்கில், எமக்கு முன்னே தோன்றியிருக்கும் இச்சிறுவிளக்கை, அணையாது காத்து, அதனை எம் இனத்தின் விடுதலைக்கான பேரொளியாக்கச் செய்வது எம் முன் உள்ள கடமையாகும்.
தோன்றியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி, விடுதலை நோக்கிய அடுத்த கட்டத்தை அடையும் பணியை எல்லோரும் இணைந்து மேற்கொள்வோம்.
ஆவணமாக்கப்பட்டுள்ள சிங்கள இனவெறிக்கொடுமையை ஆதாரமாக வைத்து, அதன் மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டியது புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களே ஆகும்.
சர்வதேசத்தின் எந்தப் பரிந்துரையையும் ஏற்கமறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழித்துவரும் அச்சுறுத்திவரும் சிங்களத்துடன் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல என்ற முடிவை சர்வதேச சமூகத்தை ஏற்கச்செய்து, எம்மக்கள் சுதத்திரமாகவும் அமைதியாகவும் வாழ அவர்களின் தாயகத்தை சுதந்திரபூமியாக அங்கீகரிக்கக் கோருவதும் எமது கடமையே.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பொதுக்கடமைக்கான களம் திறக்கப்பட்டுவிட்டது.
nஐனீவாவில் ஐக்கியநாடுகள் சபை நோக்கி அணியாகச் சென்று அதனால் முன்வைக்கப்பட்ட ஆவணத்தின் மீது சர்வதேச விசாரணையைக் கோருவோம்.
தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்கு உலகப்பொது மன்றமான ஐக்கிய நாடுகள் சபை முழுப்பொறுப்பையும் ஏற்று அதற்கான வழிவகைகளைச் செய்யுமாறு வலியுறுத்துவோம்.
எதிர்வரும் 18ம் திகதி, ஜெனீவா நோக்கிய நீதிகோரும் பயணத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆதரித்து நிற்கும் தமிழர் நடுவம், இந்தப் போராட்டத்தில், வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் கடந்து அனைத்துத் தமிழ் மக்களும் ஒற்றுமையாக இணைந்து கலந்துகொள்ளவேண்டும் என்று தாழ்மையாக வேண்டி நிற்கின்றது.
ஒன்றுபட்ட ஒரே சக்தியாய் நின்று, எம் மக்களின் விடுதலையைச் சாத்தியமாக்குவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்



0 Responses to ஜெனீவா நோக்கி நீதிகோரும் தமிழர் பேரணி