Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடியத் தமிழர் பேரவையின் நன்றிகள்

பதிந்தவர்: ஈழப்பிரியா 10 June 2011

சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர அதன்மீது இந்திய மத்திய அரசு ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காக கனடியத் தமிழர்களும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து எங்கள் மனமாரந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பாக கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர அதன்மீது இந்திய மத்திய அரசு ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும், அத்துடன் ஈழத்திலே போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டுமென்றும், தங்கள் தலைமையிலே தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காக உங்களுக்கும் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்துச் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிகளுக்கும் கனடியத் தமிழர்களும் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து எங்கள் மனமாரந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக மக்களின் பெரும்பான்மை ஜனநாயக ஆணையைப் பெற்றபின் தாங்கள் கொடுத்த செவ்வியில் ஈழத்திலே தமிழருக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்பேன் என்று நீங்கள் சொன்னதை இவ்வளவு விரைவிலேயே செயல் வடிவத்திற் காட்டியதை எண்ணி உலகத் தமிழராகிய எங்கள் ஒவ்வொருவரது நெஞ்சமும் உண்மையிலே மகிழ்ச்சியில் நெகிழ்ந்து பூரிக்கிறது.

சட்டமன்ற விவாதத்தின் போது சிறிலங்காவிலே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒரு தாயுள்ளத்துக்கே உரித்தான வேதனையுடனும் பரிவுடனும் நீங்கள் விபரித்துப் பேசியது எங்கள் எல்லோர் இதயங்களையும் வருடிக்கொடுத்ததோடு மட்டுமல்லாது இக்கொடுமைகளுக்கு எதிராக இன்னும் அழுத்தமாகக் குரல் கொடுக்க ஒரு புதுத் தெம்பையும் உற்சாகத்தையும் எங்களுக்கு அளித்துள்ளது.

சொல்வதெல்லாவற்றையும் செயல் வடிவிற் காட்டும் தங்கள் செயற்திறன் மிக்க தலைமையின் கீழ் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் தொலைத்து ஜனநாயக விழுமியங்களையும் இழந்து வாடும் ஈழத் தமிழர் உலகின் ஏனைய தேசிய இனத்தவர்போல் கௌரவத்துடன் பூரண அரசியற் சுதந்திரம் பெற்று விளங்க நீங்கள் வழிவகை செய்வீர்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இறுதியாக, உலகத் தமிழினத்தின் முதன்மைக் குரலாகவும் தமிழக முதல்வராகவும் நீங்கள் புரியும் அளப்பரிய சேவைகளுக்காக மீண்டுமொருமுறை எம் உளமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடைபெறுகிறோம்.

நன்றி.

உமாசுதன் சுந்தரமூர்த்தி
தலைவர், கனடியத் தமிழர் பேரவை

0 Responses to கனடியத் தமிழர் பேரவையின் நன்றிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com