Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருநெல்வேலிப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் நுளைய முயன்ற ஆயுதந்தரித்த சில நபர்களை துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நேற்றிரவு மோதல் உருவாகியுள்ளது.

மர்ம நபர் என்ற போர்வையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுளைய முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது, மக்களைத் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனையடுத்து படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு இராணுவத்தினரை பொதுமக்கள் சிலர் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்களை இராணுவத்தினர் தாக்க முற்பட்டவேளை அவ்விடத்தில் மின்சாரம் துண்டிக்கப்படதால், அங்கே இருந்த சில இளைஞர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தினர் சிலரை நையப்புடைந்துள்ளனர். மின்னல் வேகத்தில் நடந்த இத் தாக்குதலை அடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி பாரதிபுரத்தில் நேற்றைய தினம் மாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலிருந்து பொது மக்கள் தகவல் தருகையில்:

மதியம் சுமார் 12 மணியளவில் முகமூடியுடன் கறுப்பு உடை அணிந்தவர்களாக ஆயுதங்களோடு 3 மர்ம நபர்கள் பொதுமக்களது வீடுகளுக்குள் பிரவேசிப்பதற்காக வீட்டின் பின் பற்றைகளுக்கூடாக முன்னேறினர். இதன்போது ஆண்கள் யாரும் அங்கே இல்லாததாதல் பெண்கள் கூச்சலிட்ட போது அவர்கள் திரும்பி ஒடினார்கள்.

இதன்போது அங்கிருந்த குடும்பஸ்தர் ஒருவர் அவர்கள் மூவரையும் கலைத்துச் சென்றபோது மர்ம நபர்கள் போர்வையில் சென்றவர்கள் ஆயுதங்களைக்காட்டி மக்களைக் கலைத்துள்ளனர். பின்னர் பொது மக்கள் ஒன்று திரண்டதும் அவர்கள் ஒடி மறைந்தனர்.

இதன் பின்னர் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் வழமைக்கு மாறாக மர்ம நபர்கள் நடமாடிய பகுதிகளில் இராணுவத்தினர் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை இரவு 7.30 மணியளவில் திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதேநேரம் பெண்கள் தனிமையாக வசிக்கும் வீடுகளுக்குள் மீண்டும் மர்ம மனிதர்கள் உட்புக முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் கூச்சலிட்டு கத்திய போது அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மர்ம நபர்களை கலைத்துச் சென்றுள்ளனர். மர்ம மனிதர்கள் ஒடிய திசையில் பொது மக்கள் அவர்களை கலைத்துச் சென்ற போது அதே திசையில் நின்ற இராணுவத்தினர் பொதுமக்கள் கைகளில் இருந்த தடி, பொல்லுகள் என்பவற்றைப் பறித்து அவர்களைத் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே பொதுமக்களுக்கும் படையினருக்கும் மோதல் போக்கு உருவானது.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதிலும் இராணுத்தினர் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக பொது மக்களது வீடுகளுக்கு முன்னால் இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு இராணுவத்தினரை தாக்கியவர்கள் யார்? என்று பொது மக்களிடம் இராணுவத்தினர் விசாரணை செய்ததாகவும் ஒரு சில வீடுகளின் கதவுகளை அவர்கள் தட்டி திறந்ததாகவும் தாக்கியவர்களை அடையாளம் காட்டாது விட்டால் நாளை அனைவரையும் சுற்றி வளைத்து தேடுதல் செய்து தாக்கியவர்களை பிடித்துக்கொண்டு செல்வோம் என்று இராணுவத்தினர் பயமுறுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதன் காரணமாக நேற்று இரவு முழுவதும் நித்திரை இன்றி கடும் அச்சத்துடனேயே பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் எனவும் அதிர்வின் செய்தியாளர் தெரிவித்தார்.

அதிர்வு

0 Responses to யாழில் பொதுமக்களிடம் வாங்கிக்கட்டிய இராணுவத்தினர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com