Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணைக்கு அனுமதிக்காது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட திரு.பேரறிவாளன் திரு.முருகன் திரு.சாந்தன் அவர்களுக்கு கருணை காட்டித் தூக்குத் தண்டனையிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு இந்திய நடுவண் அரசையும் தமிழக அரசையும் தமிழகத் தலைவர்களையும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களையும் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கின்றது.

தூக்குத் தண்டனைக் கைதிகளான திரு.பேரறிவாளன் திரு. முருகன் திரு.சாந்தன் ஆகிய மூவரும் ஏற்கனவே 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் தங்களது இளமைப் பருவத்தைக் கழித்தவர்களாவர். உலகிலே 130ற்கு மேற்பட்ட நாடுகளில் தூக்கு தண்டனையை இல்லாது ஒழித்திருக்கிறார்கள். 40ற்கு மேற்பட்ட நாடுகளில் தூக்குத்தண்டனை என்பது வெறும் எழுத்து வடிவிலேயே மட்டுமுள்ளது. அது நிறைவேற்றப்படுவதில்லை.

ஆகவே தாயுள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சரான செல்வி.ஜெயலலிதா ஏற்கனவே சொல்லணாத் துன்பத்தை அனுபவிக்கும் தமிழ் மக்களுக்காக சட்ட சபையில் துணிச்சலாகத் தீர்மானத்தை நிறைவேற்றி உலகத் தமிழர்களின் அன்பைப்பெற்றுள்ளீர்கள்;. ஆகவே நீங்கள் இத்தூக்குத் தண்டனைக்கெதிராகவும் துணிச்சலான முடிவெடுக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கின்றது.

தமிழக அரசியல் தலைவர்கள் மனித நேய அமைப்புக்கள் சட்ட நிபுணர்கள் அரச ஊழியர்கள் தொழிலாளர்கள் மாணவர்கள் திரைப்படத் துறையினர் மற்றும் அனைத்துத் தமிழக தொப்புள் கொடி உறவுகளும் இம்மூவரின் தண்டனையை நிறுத்தக்கோரி இந்திய நடுவன் அரசை வற்புறுத்தி ஜனநாயக வழியில் சட்ட விழுமியங்களுக்குட்பட்டு தொடர்ச்சியாக மூவரும் விடுதலை பெறும்வரை போராடவேண்டுமென்றும் அதற்குக் கனடியத் தமிழர் தேசிய அவை முழு ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்துக்கொள்கிறது.

இம்மூவரின் விடுதலை வேண்டி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ் மீதும், தமிழர் மீதும் தீராத பற்றுக்கொண்டு முன்னின்று செயற்படும் வீரத் தமிழிச்சி 22 வயது நிரம்பிய வீரநங்கை செல்வி.செங்கொடி அவர்கள் தன் இன்னுயிரை ஈகம் செய்துள்ளார். வீரநங்கை செங்கொடிக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் வீரவணக்கம். ஆனால் அன்பான தமிழக தொப்புள் கொடி உறவுகளே உயரீகம் என்பது இனியும் வேண்டாம்.

இலங்கையில்தான் தமிழரின் உயிர்ப்பெறுமதி சிங்களப் பேரினவாதத்திற்குப் புரிவதில்லை. ஆனால் தங்களைப் போன்ற வீரமறவர்களின் உயிர் என்பது விலை மதிப்பற்றது. தமிழினம் விடுதலை பெறுவதற்காக நாம் நீண்ட தூரம் பயணிகக்வேண்டியவர்கள். ஆகவே உயிரீகத்தைத் தவிர்த்து எதையும் சாதிக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை அனைத்துத் தமிழ் உறவுகளையும் வேண்டி நிற்கின்றது.

இம்மூவரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணா நோன்பிருக்கும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான ஈழத்தமிழரின் சொல்லொணாத்துயரைக் காண்பதற்காக துணிச்சலுடன் ஈழம் சென்று திரும்பிய கயல்விழி தமிழரின் விடுலைக்காகப் போராடும் அங்கயற்கண்ணி ஈழத்தமிழர் மீதும் ஈழப்போராட்டம் மீதும் தீராத பற்றுக்கொண்ட வடிவாம்பாள் ஆகிய மூவரும் தொடர்ந்து உண்ணா நோன்பிருந்து தங்களின் போராட்ட வலிமையை நடுவண் அரசிற்குத் தெரிவிப்பதோடு தங்களின் போராட்ட வலிமையினால் தமிழகமெங்கும் அறவழிப் போராட்டத்திற்கும் உந்து சக்தியாக திகழ்ந்துள்ளீர்கள். தங்களுக்கும் தொடர்ந்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையின் மனமார்ந்த நன்றிகள்.

தமிழகத் தொப்புள் கொடி உறவுகளே மரணத்தின் விழிம்பில் நிற்கும் திரு.பேரறிவாளன் திரு.முருகன் திரு.சாந்தன் ஆகியோர் விடுதலை பெறும்வரை ஓயாது ஜனநாயக வழிகளில் போராட வேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கின்றுது.

தொடர்புகளுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை

0 Responses to உலகத் தமிழ் உறவுகளுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் வேண்டுகோள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com