தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். தர்மபுரியில் இருந்து 50 கி.மீட்டர் அரூரில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் மலைஜாதியினர் .
இக்கிராமத்தில் உள்ளவர்கள் சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக, 1992ம் ஆண்டு வனத்துறைக்கு புகார் வந்தது. 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை ( 155 பேர்) , போலீசார் (108 பேர் ) , வருவாய் துறையினர் ( 269 பேர் ) ஆகியோர் அடங்கிய கூட்டு குழு அமைக்கப்பட்டு, இக்கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தியது.
கூட்டு குழுவில், வனத்துறையினர், 155 பேர், போலீசார், 108 பேர், வருவாய் துறையினர் ஆறு பேர் உள்ளிட்ட, 269 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்துக்கு சென்று சந்தன கட்டைகள் பதுக்கியது தொடர்பாக வீடு, வீடாக சோதனை நடத்தினர். சோதனையில், அந்த பகுதியில் உள்ள ஏரியில் பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகளை கூட்டு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த, 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் மீது வழக்கு பதிவு செய்து, 133 பேரை கைது செய்தனர்.
கைது நடவடிக்கையை தொடர்ந்து மலைக்கிராம பெண்களை கூட்டு குழுவினர் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், 18 பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கிராம மக்கள், 1992ம் ஜூன் 22ம் தேதி கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் புகார் செய்தனர். போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இப்பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் கிராமத்தில் கூட்டு குழுவினர் நடத்திய சோதனையின் போது, மலைவாழ் பெண்கள் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம், 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
உத்தரவை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு நேரடி விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தி, 1993ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 1995ம் ஆண்டு பிப்ரவரி, 24ம் தேதி வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது.
சி.பி.ஐ., விசாரணை நடத்தி கூட்டுக்குழுவில் இடம் பெற்ற, 269 பேரை கைது செய்தனர். கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல், 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர்.
2006 ஜனவரியில் சி.பி.ஐ., தரப்பில் வக்கீல் வாதம் துவங்கி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 269 பேர்களில், 54 பேர், இறந்து விட்டனர். இதில், 29 பேர் வனத்துறையினர், 24 பேர் போலீசார், ஒருவர் வருவாய் துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
18 பெண்களை கற்பழித்த வழக்கு - 19 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு
பதிந்தவர்:
தம்பியன்
29 September 2011



0 Responses to 18 பெண்களை கற்பழித்த வழக்கு - 19 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு