Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:

ஈழப் போர் தொடங்குவதற்கு முன்பு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, என் தாய் ஈழம், தமிழ் ஈழ மண்ணில் இருந்து, என் தலைவனை சந்தித்துவிட்டு வந்த தாயக தமிழன் நான் ஒருவன் மட்டுமே என்பதாலும், எத்தனையோ பேர் வேலூர் சிறையில் என் தம்பிகளோடு இருந்திருக்கலாம். ஆனால் இறுதியாக 5 மாதங்கள் தம்பிகளோடு இருந்துவிட்டு வந்தவன் என்பதாலும், உங்கள் முன்னாள் நிற்கிற உங்கள் பிள்ளை சீமானுக்கு வலியும், பொறுப்புகளும் மிக அதிகம்.

எல்லாவற்றையும், எல்லா நேரங்களிலும் மேடையிலோ, ஊடங்களிலோ பதிவு செய்துவிட முடியாது. மிக நிதானமாக, மிக கவனமாக பயணிக்க வேண்டிய பொறுப்பு எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. தமிழ் ஈழ மண்ணில் என் தலைவன் பிரபாகரன் அவர்களை நான் சந்தித்தப்போது, களத்தில் போர்க் களத்தில் எப்படி நின்று சண்டை போடுவது என்று தமிழிலே மொழி பெயர்த்து வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் கட்டுக்கட்டாக கொடுத்து, இந்த புத்தகங்களை படித்து பார் என்றார். ஒரு புத்தகத்தை புரட்டினேன். சண்டையில் எப்படியெல்லாம் கால் எடுத்து வைத்து நகருவது என்பதற்கு மட்டுமே பத்து புத்தகம் வைத்திருந்தார். அவ்வளவு கவனமாக நடந்த தலைவன்.

நமது தம்பிமார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எத்தனையோ போராட்டங்களை நாம் நடத்தினாலும், சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம்தான் 3 பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறது. இதற்காக நாம் நன்றி தெரிவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டாமல் வேறு யாரை பாராட்டுவது.

3 தமிழர்களின் உயிரை பறிக்க காங்கிரசார் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரை அதில் பங்கேற்க வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி பலியானது போல ஒரு காங்கிரசார் கூட அருகில் இல்லையே அது ஏன் என்று இந்த குடும்பத்தினர் கேட்க வேண்டும். வரலாறு தெரியாமல் காங்கிரசார் பேசுகிறார்கள் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவசரம் அவசரமாக தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் தூக்கு தண்டனை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வேலூர் சிறையில் வாடும் 3 தம்பிகளையும் சாக விட மாட்டோம். அவர்கள் மீது தூசு கூட விழ அனுமதிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தூக்கில் போட முடியாது எனது பிணத்தின் மீது நின்றுதான் 3 பேரையும் தூக்கில் போட முடியும். இவர்களை காப்பாற்றுவது எப்படி என்று எங்களுக்கு தெரியும்.

தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் இட மில்லை 3 பேரையும் தூக்கில் போட தூக்கு கயிறு தயாராகி விட்டது என்ற மமதையில் காங்கிரஸ் காரர்கள் இருக்கிறார்கள்.

காங்கிரசுக்கான தூக்கு கயிறு எங்களிடம் தயாராக உள்ளது. வேரோடு, வேராக மண்ணில் காங்கிரசை சாய்ப்பதே எங்கள் லட்சியம் இதனை நிச்சயம் செய்து காட்டுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை அனைத்து தொகுதிகளிலும் தமிழர்கள் தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இதற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தமிழர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

0 Responses to 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com