தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அக்டோபர் 13ஆம் தேதி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தொகுதியில் இருந்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான மரியம் பிச்சை கார் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து தான் திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக பரஞ்சோதி அறிவிக்கப்பட்டு, அவர் மனு தாக்கல் செய்துவிட்டார்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். கே.என்.நேரு சிறையில் இருப்பதால், அவரது சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதவிர சுயேட்சையாக 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அப்போது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலேயே அதிமுக தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவித்தது.
இதையடுத்து தேமுதிக அலுவலகம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்தும், அதிமுகவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் தேமுதிக தனக்கு வேண்டிய தொகுதிகளை வாங்கியது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், சட்டசபையில் எதிர்க்கட்சி என்பதையும் மறந்து, அதிமுக உறுப்பினர்களாகவே தங்களை நினைத்து, முதல் அமைச்சருக்கு அதிமுக உறுப்பினர்களைவிட அதிக அளவுக்கு பாராட்டி மழை நடத்தியது தேமுதிக.
ஆனால், உள்ளாட்சி தேர்தலில் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அழைப்பு விடுக்கவில்லை. சட்டசபை தேர்தலில் உருவபொம்மையை எரித்து, மிரட்டியதைப் போல தற்போது தனது பாச்சா வேலையை காண்பிக்க முடியாது என்பதை உணர்ந்து, காத்திருந்து காந்திருந்து நொந்துபோன தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்றும், அந்த அறிவிப்பிலேயே 9 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களையும் அதிரடியாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் படிப்படியாக அறிவித்தார்.
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகளுக்கிடையே நிலவி வருகிறது. வேட்பாளரை விஜயகாந்த அறிவிப்பாரா என்று அக்கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதைப்போலவே, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்பது திருச்சி தேமுதிகவினரின் கோரிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து கட்சி தலைமைக்கும் திருச்சி தேமுதிகவினர் கடிதம் எழுதியுள்ளனர்.
இதையடுத்து திருச்சி தேமுதிகவினரின் கோரிக்கையை ஏற்று, விஜயகாந்த் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே தேமுதிக வேட்பாளரை நிறுத்தப் போகிறதா? இல்லையா என்பது திங்கள் கிழமை தெரிந்துவிடும். ஏனென்றால், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற நிலைப்பாடு வந்ததும், அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது, அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு வருவதை சமாளிப்பது போன்றவைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதைப்போலவே திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் குறித்தும் தீவிர ஆலோசனையில் உள்ளோம் என்றும் தேமுதிக உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல்! குழப்பத்தில் விஜயகாந்த்!