Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியாவில் தலைமறைவாகி வாழும் தலைவர் கேணல் மும்மர் கடாபியின் மகன்களில் ஒருவரான சாடி கடாபி அயல் நாடான நைகரை தஞ்சமடைந்துள்ளார். அவரது வாகனத் தொடரணியானது நைகரின் தலைநகர் நியாமேயை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு நீதி அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் கடாபி தற்போது எங்குள்ளார் என்பது எவருக்கும் தெரியாத இரகசியமாக உள்ளது. லிபியாவில் இருந்தவாறு தொடர்ந்து போரிட்டு அங்கேயே உயிர் விடப் போவதாக கடாபி ஏற்கனவே சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தலைநகர் திரிபோலி உள்ளடங்கலான லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் தற்போது கடாபிக்கு எதிரான படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அப்படையினர் கடாபிக்கு விசுவாசமான படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பானி வலீட் மற்றும் சிர்ட் நகர்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் நேட்டோ படையினர் ஞாயிற்றுக்கிழமை பானி வலீட் நகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அண்மைக் காலங்களில் கடாபியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவரது ஆதரவாளர்கள் பலரும் வாகனங்களில் நைகரை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாடி கடாபி ஏனைய 8 பேருடன் வாகன தொடரணியொன்றில் நைகரை வந்தடைந்துள்ளதாக நைகரின் அரசாங்கப் பேச்சாளரும் நீதி அமைச்சருமான மரோயு அமாடோயு தெரிவித்தார். முன்னாள் உதைபந்தாட்டவீரரான சாடி கடாபி இத்தாலியில் சிறிது காலம் பணியாற்றினார். அவர் உதைபந்தாட்ட விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் லிபிய உதைபந்தாட்ட அமைப்பொன்றை செயற்படுத்தி வந்தார். அவர் திரைப்படத் தொழிற்றுறையில் ஈடுபட்டு அத்துறையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் லிபிய தேசிய அதிகார மாற்று சபையின் அமைச்சரவை தலைவர் மஹ்மூத் ஜிப்றில் 10 நாட்களுக்குள் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தியும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அதே சமயம் கேணல் கடாபியின் வெளிநாட்டுப் புலனாய்வுத் தலைவர் அபுஸெயிட் டொர்டா கைது செய்யப்பட்டுள்ளதாக திரிபோலியிலுள்ள இராணுவ சபையின் பேச்சாளர் அனெஸ் ஷரீப் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக கடாபியுடன் இணைந்து பணியாற்றிய டொர்டா, 1990 களில் பிரதமராக சேவையாற்றினார். 2003 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் லிபிய தூதுவராக பணியாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டு புலனாய்வு தலைவராக நியமனம் பெற்றார்.

0 Responses to கடாபியின் மகன் சாடி நைகரில் தஞ்சம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com