Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடைய தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களிற்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் விதித்த காலவரையறை ஒக்டோபர் மாதம் 25ம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் சார்பாக வாதிட்ட சட்டத்தரணிகளின் வாதத்திற்கான பதில் மனுவை மத்திய உள்ளக அமைச்சு அனுப்ப வேண்டும். உள்ளக அமைச்சே ஜனாதிபதியின் செயலகம் சார்பிலான பதிலை வழமையாக அனுப்பும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் பதிலில் தூக்குத் தண்டனைக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டது நியாயம் எனக் காரணம் காட்டப்பட்டால் அதற்கடுத்த நடவடிக்கை எத்தகையது என்பதை யாராலும் அனுமானம் கூறமுடியாததொரு சூழ்நிலையே தற்போதுள்ளது.

அத்தோடு ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்த பிற்பாடு ஒரு சட்டசபை மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் படி செய்த பரிந்துரையும் இந்திய வரலாற்றிலேயே முதற்தடவையாக இந்த வழக்குச் சார்ந்து தமிழக சட்டசபையில் இடம்பெற்றிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட வழக்கு மனு நிராகரிக்கப்பட்டாலும், ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிப்பின் பின் அதனை ஆயுள்தண்டனையாகக் குறைக்க சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது கூட வழக்காடு மன்றம் செல்லக்கூடிய ஒரு விடயமாக மாறும் சாத்தியம் இருக்கிறது.

ஆனால் முன்னுதாரணங்களே இவ்வாறான பாரிய வழக்குக்களின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறையுள்ள பொழுதில் முன்னுதாரணம் இல்லாத விடயங்களை சட்டநுணுக்கங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே வழக்குக்களாக எடுக்க முடியும்.

இந்திய ஆட்சியலகின் உச்சநிலையாளரான ஜனாதிபதியின் கருணை மனு மீதான முடிவு, அதற்கு அவர் எடுத்த 11 வருட காலம் என்பனவற்றை மையமாக வைத்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அது சாதாரண நடைமுறைக்குட்பட்டதே என்று நிருபிக்க தன்னால் இயன்ற ஆதாரங்களையடுக்கி இந்திய அரசு முயற்சிக்கும்.

இவ்வாறு அது தனது அரசு சார்ந்த நலனை முதன்மைப்படுத்தி சட்டங்களைத் துணைக்கழைத்து சமர்ப்பிக்கப் போகும் பதில் நீதிமன்று விதித்த எட்டுவாரக் காலக்கெடுவின் இறுதிப்பகுதியில் அதாவது ஒக்டோபர் 24ம் திகதிக்கு ஒரு நாளோ அல்லது இரு நாளோ முன்னர் சமர்ப்பிக்கப்பட்டால் அது வழக்காடு மன்றிற்கு ஒரு நெருக்கடியைக் கூடக் கொடுக்கலாம்.

இந்த மூவரின் சார்பிலான வழக்கு வெற்றியடையும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சட்டங்களின் துணையிருந்து வேறு விதமான முடிவிற்கு வழக்கை மத்திய அரசு இட்டுச் சென்றால் அவ்வாறான ஒரு கட்டத்தில் தூக்குத் தண்டனை குறித்த எதிர்காலக் காலக்கெடு, நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் காலவரையறை என்பனவே முக்கியமானதாகும்.

நாங்கள் எட்டு வாரங்களை எங்களிற்கான வெற்றியாக, இந்த மூன்று தங்கத் தமிழர்களின் வாழ்விற்கான வெற்றியாகக் கருதினாலும் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சட்டங்களின் துணையுடன் முன்னிலைப்படுத்தினால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றிய ஒரு விவாதத்தை இப்போதே தமிழக உறவுகளும் அவர்களது தலைமைகளும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

குறிப்பாக சட்டவாளர்களின் நியாய – மறுகோண ஆய்வுகள் மக்களின் மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற முடிவு சாதகமாக இல்லையெனில் அதற்குப் பிறகு சட்டசபையும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் வரையறைப்படுத்தப்பட வேண்டும்.

அட்டவணைப் படுத்தப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படக்கூடிய “தயார் நிலையில்” எப்போதும் வைத்திருக்கப்பட வேண்டும். இல்லையேல் நாமும் தூக்கை எதிர்நோக்கும் அந்த மூவரும் எதிர்பாராத முடிவுகளையே சந்திக்க வேண்டிவரும்.

0 Responses to மூவரின் தூக்குத் தண்டனை விவகாரம்: அடுத்த நடவடிக்கை என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com