ஆயுதபலத்தால் தமிழீழதேசத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அரசும், அதன் கொலைகார சிங்கள ராணுவமும் தமிழ் மக்களை கொலை அச்சுறுத்தலுக்குள் வைத்துகொண்டு அவர்களின் தினசரி வாழ்வை சீரழிக்கின்றது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் சாவகச்சேரி உதயசூரியன் கிராமம்.
யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி நகரில் இருந்து கூப்பிடும் தூரத்தில், மிக அண்மையாக இருக்கின்றது உதயசூரியன் கிராமம். இங்குள்ள மக்களில், அதிலும் ஆண்களில் அநேகமானோர் நகரசபையில் வேலை செய்பவர்கள். அன்றாட தேவைகளுக்கே சிரமமானது அவர்களின் வாழ்க்கை. களிமண்ணாலும், சீமேந்தாலும் கட்டப்பட்ட சிறு சிறு குடிசைகள். மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் அநேகர்.
வறுமையால் சிறுவர்களும் மாடு வெட்டும் தொழிலை செய்வது இங்கு அதிகம். இப்படியான ஏழ்மை நிறைந்த கிராமம் இரவு ஆனதும் பயத்துடனும் பீதியுடனும் தினசரி நாட்களை கடத்துகின்றனர். இரவானதும் இந்த கிராமத்தின் வெளிகளிலும், மாடு வெட்டப்படும் இடத்திலும் விபச்சாரம் படுமும்மரமாக நடாத்தப்படுகின்றது. இரவு முழுதும் பெண்களின் நடமாட்டமும் அவர்களை நாடிவரும் ஆண்களின் நடமாட்டமும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றது. வரும் ஆண்கள் தங்களை ‘ஆமி’ என்றே கிராமத்து மக்களுக்கு தம்மை அறிமுகப்படுத்தி இந்த தொழிலுக்கு பாதுகாப்பாக நிற்கின்றனர்.
சில வேளைகளில் குடிபோதையில் வருபவர்கள் கிராமமக்களின் குடிசைகளுக்குள் புகுந்து சிங்கள மொழியில் பேசியபடி பெண்களை பலவந்தப்படுத்த முயன்ற சம்பவங்களும் நடப்பதுண்டு. இந்த கிராமத்து சற்று தள்ளியே இருக்கும் சிங்கள ராணுவமுகாமில் இருப்பவர்களின் முழு பாதுகாப்புடனும், அனுசரணையுடனுமே இந்த சம்பவங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன. இதனால் அச்சமடைந்திருக்கும் இந்த சாவகச்சேரி உதயசூரியன் கிராம மக்கள் இதனை யாரிடமும் சொல்லாமல் கலக்கத்துடன் இருக்கிறார்கள்.
கட்டத்தினுள்ளும் அதனை அண்டிய திறந்த வெளியிலும் இரவு முழுதும் விபச்சாரதொழில் சிங்கள படைகளால் நடாத்தப்படுகின்றது. இதனால் அந்த கிராமத்து மக்களின் அன்றாடவாழ்வு பாதிக்கபடுவதோடு சிறுவர்களும் மனரீதியாக மிகவும் சிதைவடைந்து வருகின்றனர். மிகவும் திட்டமிடலுடன் சிங்களபடை நடாத்தும் இத்தகைய செயற்பாடுகள் இன்னும் பலநூறு வருடத்துக்கு தமிழினத்தை அடிமைகளாக வைத்திருப்பதற்கான முன்னேற்பாடுகளாகும்.
இந்தியாவுக்கு பயணம் போவதையே தமது பாரளுமன்ற சேவையாக நினைத்துக்கொண்டு செயற்படும் பா.உ களுக்கு இந்த கிராமம் கண்ணுக்கு தெரியாமல்போன மர்மம் என்ன?
சிங்கள ராணுவம் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருக்கும் வரையிலும் புனர்வாழ்வு முயற்சிகளும், உதவிவழங்கும் செயற்பாடுகளும், தேர்தல் வெற்றிகளும் எதுவுமே இங்கு நிரந்தரமான பலனை தரப்போவதில்லை. இங்கிருக்கும் அனைத்து சீரழிவுகளுக்கும் சிங்கள ராணுவமே காரணமாக இருக்கின்றது. அவர்கள் வெளியேற்றப்படும்போதுதான் உதயசூரியன் கிராமம் போன்ற தமிழ் கிராமத்து மக்கள் தமது நிம்மதியான வாழ்வுக்குள் வருவார்கள்.
பதிவு
இராணுவஅடக்குமுறையின் இன்னொரு குரூரவடிவம் - தாயகத்திலிருந்து கபிலன்
பதிந்தவர்:
தம்பியன்
10 September 2011



0 Responses to இராணுவஅடக்குமுறையின் இன்னொரு குரூரவடிவம் - தாயகத்திலிருந்து கபிலன்