ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த பயிற்சியை தொடர்ந்து இலங்கை கடற்படைக்கு பல்வேறு உதவிகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்ததற்காக உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கையுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வரும் நிலையில் அந்நாட்டு கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல. எனவே தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும். இலங்கையுடனான ராணுவ உறவுகளை முறித்துக் கொண்டு அந்நாட்டு அரசுக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to இலங்கை கடற்படையுடன் இந்தியா கூட்டு பயிற்சி ராமதாஸ் கண்டனம்