Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளதும், தமிழர்களதும் வரலாற்றுச் சின்னங்களை அழித்துக்கொண்டுவரும் சிங்கள இராணுவம் கார்த்திகை செடிகளையும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தமிழீழத்தின் தேசிய மலர் கார்த்திகைப் பூ.

இக் கார்த்திகைப் பூவானது கார்த்திகை மாதத்திலேயே பூக்கும் என்பது விசேட அம்சம்.

தாய் மண்ணுக்காக தம்மையே அர்ப்பணித்த புனிதர்களான மாவீரர்களைப் போற்றும் இக்கார்த்திகை மாதத்தில், மாவீரர்களுக்கெனவே பூக்கும் கார்த்திகை மலர் தமிழீழத்தின் தேசிய மலராக உருவெடுத்தது.

மாவீரர் துயிலுமில்லங்கள், சிலைகள் போன்றவற்றை இடித்தழித்த இராணுவம், நேற்று முந்தினம் யாழ் மாவட்டத்தில் மாவீரர் நாளை மக்கள் கொண்டாடி விடுவார்களோ என்ற அச்சத்தில் கோயில்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகம் என பொது இடங்களில் முற்றுகை இட்டதுடன், மக்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வடமராட்சிக் கிழக்கு காட்டுப் பிரதேசங்களில் எங்கெல்லாம் கார்த்திகை மரங்கள் இருந்தனவோ, அங்கெல்லாம் கார்த்திகை செடிகளை வெட்டி, மரத்தை வேரோடு தகர்த்துள்ளது சிங்கள இராணுவம்.

இதையறிந்த மக்கள், வருட வருடமாக மாவீரர்களை நினைத்து தம் வீடுகளில் நட்டுவைத்திருந்து, மாவீரர்களை பூஜிக்கும் கார்த்திகை மரங்கள் மீது உடைகள் காயவிடுவது போல போட்டு மரத்தை மறைத்துள்ளனர் என வடமராட்சிக் கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக அடைமழை கொட்டிய போதும், தேசிய மாவீரர் நாளான நவம்பர் 27 அன்று மழை ஓய்ந்தது தமிழீழ மாவீரர்களை ஆசீர்வதித்தது போன்ற நிகழ்வென மேலும் மக்கள் கருதுகின்றனர்.

மேலும், சுண்டிக்குளத்திற்கு அண்டிய குக்கிராமமான கல்லாறு பகுதியில் புலிக்கொடி ஏற்றி இருந்ததனால் அப்பகுதி மக்களும், இராணுவமும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விசுவமடு காட்டுப்பகுதிக்குள்ளாலும் இச் சிறிய கிராமத்திற்குள் நுழையும் பாதை உள்ளதால், விசுவமடு காட்டுப்பகுதியில் சிங்கள இராணுவம் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழத் தேசிய பூவான கார்த்திகை மலர் பூக்கும் மரத்தை அழிக்கும் இராணுவம், தமிழீழ தேசியப் பறவையான செண்பகத்தையும் அழிக்குமா? அழிக்கத்தான் முடியுமா? என மக்கள் ஒருவருக்கொருவர் கேள்வியெழுப்புகின்றனர்.

0 Responses to கார்த்திகை செடிகளை வெட்டியழித்த இராணுவத்தினர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com