ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் பிரதிநிதியாக இலங்கையின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஐ.நா.வுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியூயோர்க்கில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர் முடிவுக்கு வந்த பின்னர் கடுமையான சர்ச்சைகளுக்குள்ளான ஒருவராவார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த அவர் போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருப்பவர்.
சரணடைய முன்வந்த விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்ட விவகாரத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 வது டிவிஷன் படையினரே பொறுப்பு பாரிய குற்றச்சாட்டுள்ளது.
அதேவேளை போரின் இறுதியில் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு இவருக்கே உத்தரவிட்டதாக கூறப்பட்ட சர்ச்சை நீதிமன்றம் வரை சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
போரின் இறுதிக்கட்டத்தில் எந்தக் குற்றங்களோ, மீறல்களோ இடம்பெறவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், சரணடைந்த புலிகளில் பலர் காணாமல் போயுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
வண பிதா. பிரான்சிஸ் ஜோசப்பின் ஏற்பாட்டில் சரணடைந்த 50 ற்கும் அதிகமான புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அதன் பின்னர் என்னவாயினர் என்று எவருக்கும் தெரியாது.
இவர்கள் சரணடைந்ததற்கு சாட்சியங்கள் இருந்தபோதும் நல்லிணக்க ஆணைக்குழு அவர்கள் பற்றி தடுப்பு முகாம்களில் தரவுகளைத் திரட்டியபோதும் அதுபற்றிய தெளிவான எந்தக் கருத்தையும் அறிக்கையில் முன்வைக்கவில்லை.
சரணடைந்தவர்கள் சிலர் காணாமற் போயுள்ள சம்பவங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று பொதுவாகவே அது கூறியுள்ளது.
இந்த நிலையில் இது பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமானால் அதில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் சாட்சியமளிக்கவோ அல்லது விசாரணைக்காகவோ அழைக்கப்பட வேண்டிய ஒருவராகவே இருப்பார்.
ஏனென்றால் அவர் தான் போரை முடித்து வைத்த 58 வது டிவிஷனுக்கு தலைமை தாங்கியவர்.
இந்த வகையில் அவரைத் தவிர்த்து விட்டு ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியாதிருக்கும்.
இவருக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் ஐ.நா. வுக்கான தூதுவராகப் பணியாற்றும் இராஜதந்திரி என்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி அவர் அதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள ஒருவராக அவர் இருந்தபோதும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நா. வின் முக்கிய பதவியொன்றில் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஐ.நா. அமைதிப்படையின் நடவடிக்கைகள், அதில் பங்கேற்கும் நாடுகளின் படையினர் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்க இந்த ஆலோசனைக்குழுவுக்கு அதிகாரங்கள் உள்ளன.
இத்தகையதொரு ஆலோசனைக் குழுவில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
இது இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டு விதங்களில் நன்மை தரக்கூடிய விடயமாக கருதப்படுகின்றது.
முதலாவது சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஐ.நா. அதுபற்றிக் கணக்கில் எடுக்காமல் அமைதிகாப்புப் படையின் ஆலோசனைக் குழுவில் சோ்த்துக் கொண்டுள்ளது.
ஏற்கனவே இவரை ஐ.நா.வுக்கான பிரதிததூதுவர் பதவியில் இருந்து நிராகரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டு ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவில் சோ்த்துக்கொண்டிருப்பது, போர்ககுற்றங்கள் தொடர்பாக நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு உண்மையிலேயே மிகப்பெரிய நிம்மதியான செயற்பாடாகும்.
இது இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோர் மீதான விசாரணைகள் விடயத்தில் ஐ.நா. மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கிறது என்ற பொருளையும்' கொடுக்கக்கூடும்.
இது இலங்கை அரசுக்கு ஒரு சாதகமான நிலையாகும்.
இதைவிட இலங்கை அரசாங்கம் வீங்கிப் பெருத்த படையை வைத்துக்கொண்டு அதைக் கலைக்கவும் முடியாமல் பேணிப் பாதுகாக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
படைக்குறைப்பைச் செய்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. அது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதற்கு உள்ளது.
அதேவேளை இந்தப் பாரிய படைக்குப் போதிய வசதிகளை செய்து கொடுப்பதற்மே வரவு செலவுத் திட்டத்தின் பெரும்பகுதி நிதி கரைந்து போகிறது என்ற வெளியக அழுத்தங்களும் அதற்கு இருக்கத்தான் செய்கிறது.
இதனால் தான் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட தொழில்சார் நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்தி வருகிறது அரசாங்கம்.
அதேவேளை படையினரை அதே தொழிற்திறனுடன் வைத்திருக்கவும் நாட்டுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஐ.நா. அமைதிப்படை தான் சிறந்ததொரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் படையினர் ஒருவருக்கு மாதம் ஆயிரம் டொலர் வரை ஊதியமாகக் கிடைக்கிறது.
ஏற்கனவே இலங்கை ஐ.நா. அமைதிப்படைக்கு சுமார் 1167 படையினரை அனுப்பி வைத்துள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் மேலும் 5000 படையினரை அனுப்பத் தயார் என்று பலமுறை ஐ.நா. விடம் கூறிவிட்ட போதும் அங்கிருந்து அதற்கு சாதகமான பதில் வரவில்லை.
போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
இந்தநிலையில் அமைதிகாப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைக் குழுவில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இடம் கிடைத்திருப்பதால் அமைதிப்படைக்கு மேலதிக படையினரை அனுப்புவதற்கு இருந்த வந்த தடைகளை உடைக்கும் வாய்ப்பும் இலங்கைக்கு கிடைக்கலாம்.
ஐ.நா. பொதுச்செயலரின் இந்த நியமனம் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான மிரட்டல்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு சற்று ஆறுதலையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு உயர் பதவி கொடுத்திருப்பதன் மூலம் இந்த விடயத்தில் ஐ.நா. பொிதாக அக்கறைப்படவில்லை என்ற சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருதிக்கொள்ளமுடியும்.
சுபத்ரா
இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபை கண்டுகொள்ளாமல் விடுகிறதா?
பதிந்தவர்:
தம்பியன்
29 January 2012



0 Responses to இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபை கண்டுகொள்ளாமல் விடுகிறதா?