தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை முன்னறிவித்தல் ஏதுமின்றி இலங்கை அரசு இடை நிறுத்தியுள்ள நிலையிலும் அந்தப் பேச்சின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஒன்று எட்டப்படும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
“நடந்து கொண்டிருக்கும் பேச்சின் ஊடாக, 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதியை உருவாக்கி, அதன் மூலம் நாட்டின் அரசியல் தீர்வுக்குத் தேவையானதொரு சூழலை உருவாக்கும் என்பது நம்பிக்கை” என்று யாழ். நகரில் நேற்று உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.
பேச்சு மூலம் தீர்வு காண்பதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா செய்யும் என்றும் அவர் கூறினார். அதேவேளை, “இலங்கை அரசும், வடமாகாண மக்களும் மேற்கொள்ளும் சகல மீள்கட்டமைப்பு முயற்சிகளிலும் இந்திய அரசும் இந்திய மக்களும் தோளோடு தோள்கொடுத்து நிற்பர்” என்றார் கிருஷ்ணா.
அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
நேற்று அமைச்சர் பீரிஸும் நானும் 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 49,000 வீடுகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம். இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் வரும் மிகுதி வீடுகள் இவை.
ஐந்து மாவட்டங்களிலும் 10,000 சைக்கிள்களை விநியோகிப்பதற்கான செயற்றிட்டம் இடம்பெயர்ந்தோரின் வருகையைத் தீவிரப்படுத்தும்.வடமாகாண மக்களுக்கும் முக்கியமாக யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
காங்கேசன்துறைத் துறைமுகத்தில் கப்பற் சிதைவுகளை அகற்றும் பணிகள் 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளமையை நான் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கடல் வாணிபம் அபிவிருத்தி அடைவதோடு பொருளாதாரச் செயற்பாடுகளும் புத்துயிர் பெறும். அடுத்த கட்ட வேலைகளுக்காகத் தேவையான உதவியை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையைப் புனரமைக்கும் பணிகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவதோடு யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் அபிவிருத்தியும் ஏற்படும். பலாலி விமான நிலையத்தை இலங்கை அரசு சிவில் போக்குவரத்து விமான நிலையமாக அவிருத்தி செய்து இலங்கையினுள்ளும் இந்தியாவுடனும் தொடர்புகளை புத்துயிர் பெறச் செய்யும் என்று நம்புகிறோம்.
இது இரு நாடுகளின் பொருளாதாரத்துக்குப் பெரியதொரு செயலூக்கத்தை அளிக்கும்.
யாழ்ப்பாணத்தின் விளையாட்டுக் கட்டமைப்புகளை மீளபிவிருத்தி செய்வதற்காக துரையப்பா விளையாட்டரங்கைச் செப்பனிடும் பணியை நாம் ஏற்றுள்ளோம்.
பொது நூலகத்துக்கு அருகில் யாழ்ப்பாணக் கலாசார நிலையம் ஒன்றை நிறுவவும் நாம் உத்தேசித்துள்ளோம். உத்தேச நிலையமானது கலாசாரத்தின் உருவமாகப் பரிணமித்து கலாசார நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்குமென நம்புகின்றேன்.
மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் இருந்து இலங்கை மீண்டெழுந்துள்ளது. இப்போது சமாதானம் மலர்ந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தில் இருந்து இலங்கையை மீட்ட அதே மதி நுட்பமுள்ள தலைமை, இலங்கையிலுள்ள சகல சமூகத்தினரிடையேயும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரப் பரவலாக்கத்தினூடான ஒரு உண்மையான அரசியல் தீர்வை நாடுவதிலும் ஈடுபடுவர் என்பது எமது உள்ளார்ந்த நம்பிக்கையாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம். அவற்றின் நடைமுறைப்படுத்தலை நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை, அரசு பேச்சுக்கு வரும் என்று காத்திருந்த கூட்டமைப்பு பேச்சுக் குழுவினர் நேற்றும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த மாதம் 17, 18, 19 ஆம் திகதிகளில் பேச்சு என்று அறிவித்தபோதும் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி கடந்த இரு நாள்களும் அரச பிரதிநிதிகள் பேச்சில் கலந்துகொள்ளவில்லை.
“நேற்றுமுன்திமும் நேற்றும் அரச தரப்பினர் பேச்சுக்கு வரவில்லை. அதற்கான காரணம் எமக்கு அறிவிக்கப்படவும் இல்லை. எனவே இன்று நாம் பேச்சுக்குச் செல்லமாட்டோம்” என்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இந்த நிலையில் பேச்சு மூலம் தீர்வு காணப்படும் என்று கிருஷ்ணா நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறித்துக் கருத்துக் கூறிய சுரேஷ், ஜனாதிபதி மஹிந்தவின் இரட்டை வேடத்தையும் கபடத் தனத்தையும் இந்திய அரசு புரிந்துகொள்ளும் என்று கூட்டமைப்பு நம்புகிறது என்று குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு, ஜனாதிபதி மஹிந்த 13+ தீர்வுக்கு சம்மதித்திருக்கிறார். அதே மஹிந்த தான் இந்திய பத்திரிகைக்கு அண்மையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அடித்துக் கூறி இருந்தார். அதுமட்டுமல்ல இலங்கை ஜனாதிபதி மீண்டும் தனது இரட்டை வேடத்தை காட்டியுள்ளார். இந்திய அரசு அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
13+ தீர்வுக்கு இந்தியாவுக்கு சம்மதம் தெரிவித்த அன்றே இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகள் பேச்சில் கலந்துகொள்ளவில்லை. இதன் மூலம் இலங்கை அரசின் கபடத்தனத்தை இந்தியா புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம்” என்றார் சுரேஷ்.



0 Responses to தீர்வு வரும் என நம்பும் இந்தியா