சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்க்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க., உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, விலை உயர்வு குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மீண்டும் சந்திரகுமார் பேசுகையில், இந்த விலையேற்றத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், விலைஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என கூறினார்.
அப்போது பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க., டெபாசிட் இழந்தது என கூறினார்.
இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்த போது சட்டசபையில் இரு தரப்பிலும் கைநீட்டி பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் சபை காவலர்கள் அவையிலிருந்து வெளியேற்றினர்.
ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்க்கும் இடையே காரசார விவாதம்: தேமுதிகவினர் கூண்டோடு வெளியேற்றம்
பதிந்தவர்:
தம்பியன்
01 February 2012



0 Responses to ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்க்கும் இடையே காரசார விவாதம்: தேமுதிகவினர் கூண்டோடு வெளியேற்றம்