தமிழ் நாட்டிலுள்ள மிகத் தொன்மைவாய்ந்த சைவ மடாலயங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 293 ஆவது மடாதிபதியாக அண்மையில் பாலியல் சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நித்தியானந்தா (34 வயது) நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரம் இந்தியா, இலங்கை உட்பட சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதியான அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தியான பீடத்தில் வைத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சுவாமி நித்தியானத்தாவை 293 ஆவது ஆதீனகர்த்தாவாக நியமிப்பதாக அறிவித்திருந்தார். 293 ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமகம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்று புனிதருக்கு நாங்கள் முடிசூட்டுகிறோம்‘ என நிருபர்கள் மத்தியில் அவர் அறிவித்திருந்தார்.
அத்துடன் மதுரை ஆதீனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் சட்டரீதியான வாரிசு எனவும் நித்தியானந்தாவை அவர் பிரகடனப்படுத்தியிருந்தார். 1250 ஏக்கர் காணி பல்வேறு ஆலயங்கள் சொத்துக்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்த ஆதீனத்திற்கு உரித்தாக உள்ளன. இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட நித்தியானந்தா ஆதீனத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதாக உறுதிமொழியளித்ததுடன், சைவ பாரம்பரியத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தப்போவதாகவும் ஆதீனத்தை சர்வதேச சமய அமைப்பாக உருவாக்கப்போவதாகவும் சூளுரைத்திருந்தார்.
சங்கத்தமிழையும் சைவ சித்தாந்த கோட்பாட்டையும் பாரம்பரியத்தையும் பல நூறு வருடங்களாகப் பேணி பாதுகாத்து வந்த மதுரைக்கு ஆதீனகர்த்தாவாக சர்ச்சைக்குரிய நித்தியானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றமை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் விசனத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர் ஆதீனம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தென்னிந்திய சைவ சிந்தாந்த தத்துவத்தின் முன்னோடிகளான சமய குரவர்களினால் பேணிப் பராமரிக்கப்பட்ட இந்த சங்கக் காலத்தின் தொன்மை கொண்டதாகும். சிவபெருமான் உமா தேவியாரின் மறு அவதாரங்களான சொக்கநாதரும் மீனாட்சியும் மதுரை மீனாட்சிசுந்தரேஷ்வரர் ஆலயத்தில் குடிகொண்டிருப்பதாக சைவ சிந்தாந்த கோட்பாட்டைப் பேணுபவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேவேளை, இத்தகைய பாரம்பரியம் மிக்க மதுரை ஆதீனத்தின் பீடாதிபதியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நித்தியானந்தா பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.
நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்பாக 2010 ஏப்ரல் 21 இல் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் 2010 ஜூன் 11 இல் கர்நாடக நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சுவாமி பரமகம்ச நித்தியானந்தா சற்றும் எதிர்பாராத விதத்தில் மதுரை ஆதீனத் தலைவராக முடிசூட்டப்பட்டமை குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றன.
சர்ச்சைக்குரிய ஒளிநாடா மர்மச் சர்ச்சையில் சிக்கியிருக்கும் நித்தியானந்தா இரு வாரங்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்திருந்தார். இவர் சைவ வேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவராகும். சைவ வேளாளர் பரம்பரையே மதுரை ஆதீனத்தை நிர்வகித்து வருகிறது. அந்த ஆதீனத்திற்கு அவர் நடிகை ரஞ்சிதாவுடன் வருகை தந்திருந்தார். அந்த வருகையின் போது மதுரை ஆதீனத் தலைவர் அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிகர் அவருக்கு தங்க முலாமிடப்பட்ட வெள்ளிக் கோலை நித்தியானந்தாவுக்கு வழங்கியிருந்தார்.
அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமிக்க இருந்தமைக்கான சமிக்ஞையாக அது கருதப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பெங்களூரில் வைத்து நித்தியானந்தாவுக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. மதுரை ஆதீன கர்த்தாவால் நித்தியானந்தாவுக்கு மூடிசூட்டப்பட்டதை அவரைப் பின்பற்றுவோர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை அந்நிகழ்வில் கலந்துகொண்டோருடன் கேள்வி எழுப்பியபோது அவர்கள் சிரித்தவாறு பதிலொன்றும் தெரிவிக்காமல் சென்றதாக அப்பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ஆனால், சைவ சிந்தாந்த துறை சார்ந்த கல்விமான்கள் இந்த விடயத்தையிட்டு கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.
சைவ மடாலயங்களின் பாரம்பரியத்திற்கு முற்றிலும் எதிர்மாறான விதத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சைவ மடாலயம் ஒன்றின் தலைவராக தம்பிரான் ஒருவரை நியமிப்பது எமது நடைமுறையாகும். உரிய முறையில் தம்பிரான்களுக்கு சிவதீட்சை அளித்த பின்னர் நியமனங்கள் வழங்கப்படும். அதேவேளை, ஆலயங்களுக்கு தம்பிரான்களாக நியமிக்கப்படுவோர் சைவ சிந்தாந்தத் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் தமிழ் இலக்கியம் சைவ பாரம்பரியங்கள் நடைமுறைகள் பற்றிய பூரண அறிவைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்று புகழ்பெற்ற சைவ கல்விமான் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், மடாலயத் தலைவராக இருப்பவர் தமது அடுத்த வாரிசைத் தெரிவு செய்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் உயிருடன் இருக்கும் போது அடுத்த வாரிசைப் பற்றி பகிரங்கமாக அறிவிப்பது நடைமுறையல்ல. ஆதீனங்களின் தலைவர்கள் தமக்கு அடுத்த வாரிசை தம்பிரான்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்வார்கள். திருவுளச்சீட்டு ஒன்றில் பெயரைக் குறிப்பிட்டு அதனை ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் போட்டு மூடிவிடுவார்கள்.
சம்பந்தப்பட்ட மடாலயத் தலைவர் காலமானதும் பெட்டகம் திறக்கப்படும் அதற்குள் உள்ள வாரிசின் பெயர் வாசிக்கப்பட்டு அவர் நியமிக்கப்படுவார். இதுவே நடைமுறையாகும். ஆனால், 2004 இல் தற்போதைய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 293 ஆவது மடாதிபதியாக ஆறாம் வகுப்பு மாணவன் சுவாமி நாதனை அறிவித்திருந்தார். ஆனால் 2007 இல் அந்த மாணவனை அருணகிரிநாதர் வெளியே அனுப்பிவிட்டார். சுவாமி நாதனின் நடத்தையில் அதிருப்தி கொண்டு அவரை அனுப்பி விட்டதாக மடாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய மடாதிபதி அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் மதுரையிலுள்ள மாலை தமிழ்த் தினசரியொன்றில் நிருபராகப் பணியாற்றியவர். அதன் பின்னரே தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக இணைந்துகொண்டார். மத நடவடிக்கைகளுக்கப்பால் தமிழ்த் தேசிய வாத அரசியலிலும் இவர் பங்கேற்பதுண்டு. அண்மையில் முல்லைப்பெரியார் அணை விவகாம் தொடர்பாக கம்பம் நோக்கி பேரணி இடம்பெற்ற போது அந்தப் பேரணியை அருணகிரிநாதர் ஏற்பாடு செய்திருந்தார்.
பெங்களூர் : 1500 ஆண்டு பழைமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின் 293 ஆவது குரு மகா சந்நிதானமாக , சாமியார் நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். இதை நடிகை ரஞ்சிதா முதல் வரிசையில் இருந்து பார்த்து இரசித்தார்.
பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர். 292 ஆவது மதுரை ஆதீனமாக சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975 இல் நியமிக்கப்பட்டார். தற்போது 293 ஆவது மதுரை ஆதீனமாக நித்தியானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தற்போதைய மதுரை ஆதீனம், நித்யானந்தாவிடம் செங்கோல் கொடுத்து மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு என்று அறிவித்து வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டு கொடுத்தார். இருவரும் தங்கக் கிரீடத்துடன் காட்சியளித்தனர். பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். நடிகை ரஞ்சிதா ,பு ன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பேசியதாவது; மதுரை ஆதீனத்துக்கு நல்ல மனிதரை நியமிக்க வேண்டும். என்று சிவபெருமான் கனவில் கூறினார். நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உ ட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
பலகோடிக்கு சொத்து: மதுரை ஆதீனத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதைப் பாதுகாத்து ஆதீனத்தை வளர்க்க நித்யானந்தாவைவிட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்றுவிடலாம். பக்குவப்பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தைச் சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிக்கும் விழா நடக்கும். கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நித்யானந்தா கூறியதாவது ; தற்போதைய மதுரை ஆதீனத்தின் பதவிக் காலம் கூட என் வயதில்லை. நான் பிறந்தது, 1978 ஆம் ஆண்டு தான். மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான பல கட்டிடங்களை அவர் தான் உருவாக்கினார். மதுரை ஆதீனம், அகில உலக ஆன்மீக இயக்கமாக தரம் உயர்த்தப்படும். முதல் கட்டமாக 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5 ஆம் திகதி மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சந்நிதானத்திற்கு தங்க சிம்மாசனம் , தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும். மதுரை ஆதீனத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் என்றார்.



0 Responses to மதுரை ஆதீனத்தின் 293 ஆவது மடாதிபதியாக நித்தியானந்தா