பிரான்சில் நேற்று நடைபெற்ற பிரான்சிய அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்களிப்பில் தற்போதய அதிபர் ஸார்கோஸி தோல்வியடைந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவருடன் போட்டியிட்ட சோசலிச கட்சி வேட்பாளர் பிரான்சியோஸ் கொலன இவரை வீழ்த்தி முதலிடத்தைப் பெற்றார். இது அதிபரைத் தேர்வு செய்யும் இறுதித் தேர்தல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெறப் போகும் இறுதிச் சுற்றுக்கு முதலிடம் பெற்ற பிரான்சியோஸ் கொலனவும் இரண்டாமிடம் பெற்ற ஸார்கோஸியும் தேர்வாகியுள்ளனர். சுமார் 99 வீதம் வாக்குகள் எண்ணப்பட்ட போது முடிவுகள் இருந்த நிலை வருமாறு :
01. பிரான்சியோஸ் கொலன 28. 6 வீதம்
02. நிக்கொலாய் ஸார்கோஸி 27.1 வீதம்
————————
03. மரீனா லீபென் 18 வீதம்
04. ஜென் லுக் மெலன் சொன் 11.1 வீதம்
05. பிரான்சிஸ் பேயரு 9.1 வீதம்.
முதல் இருவரைத்தவிர மற்ற எவரும் இறுதிச் சுற்றுக்கு போட்டியிட முடியாது. இறுதிச் சுற்று தேர்தல் வரும் மே 6ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலிலும் தற்போதைய அதிபர் ஸார்கோஸி தோல்வியடைவார் என்றே இன்றைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன. இன்றுள்ள நிலையிலேயே இறுதித் தேர்தலும் தொடருமானால் பிரான்சியோஸ் கொலன 54 வீதமும், ஸார்கோஸி 46 வீதமும் வாக்கை பெறுவார்கள் என்று இன்றைய ஆய்வு தெரிவிக்கிறது.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் யார் சரியாக சொல்கிறார்… யாரால் சொன்னதை செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்கு மூன்று தடவைகள் தொலைக்காட்சி விவாதம் வைக்கப்பட வேண்டும் என்று தோல்வியடைந்த ஸார்கோஸி சவால் விட்டார். ஆனால் ஸார்கோஸியுடன் தொலைக்காட்சியில் தோன்றி மூன்று தடவைகள் அலம்பிக் கொண்டிருக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்று பிரான்சியோஸ் கொலன மறுப்பு தெரிவித்துள்ளார். ஸார்கோஸி நிலை தடுமாறி அவதூறுகளை பேசுவதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
மேலும் கருத்துக் கணிப்புக்கள் ஸார்கோஸிக்கு தோல்வியை வழங்க பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் முதலாவது காரணம் இவ்வளவு காலமும் வலதுசாரிகள் நடாத்திய நீண்ட ஆட்சியில் மக்கள் களைப்படைந்துவிட்டார்கள். ஏற்கெனவே அரசியல் அரங்கில் முக்கியம் பெற்று, சகல சூதுவாதுகளையும் அறிந்த ஸார்கோஸியை மீண்டும் அதிபராக்கி பழைய துயரங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் பிரான்சிய மக்கள் சுமக்க விரும்பவில்லை. அடிநிலையில் இருந்து வரும் ஒரு புதியவரை அதிபராக்குவது சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
தற்போதைய பிரான்சிய அதிபர் ஸார்கோஸி ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் இணைந்து முன்னெடுத்த பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் பாரிய வெற்றியைப் பெறவில்லை. கடும் வலதுசாரிப்போக்கு, போர் போன்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஸ் டபிள்யூ புஸ் பாணியிலான அரசியல், இத்தாலிய பிரதமர் பலர்ஸ்கோனி போல மாடல் அழகியை மணமுடித்து வலம் வருதல் போன்ற ஸார்கோஸியின் கூத்தாட்டங்களை மேலும் சகிக்கும் நிலையில் பிரான்சிய மக்கள் இல்லை என்பதை பிரான்சிய அரசியல் போக்கு காட்டுகிறது.
அதேவேளை தற்போது மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்கா, பர்மா போன்ற நாடுகளில் நடக்கும் மாற்றங்களுக்கு பிரான்சே தலைமை தாங்கும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா அறிவித்திருந்தது. இது குறித்த மேலை நாட்டு தலைவர்களின் இரகசிய சந்திப்பொன்றும் பாரீசில் நடைபெற்றுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், ரஸ்யா முதற் கொண்டு சிறீலங்காவரை நடைபெறப்போகும் 21ம் நூற்றாண்டு மாற்றங்களுக்கு பாரிய துணை போனவர் ஸார்கோஸி. ஆனால் இவரைப்போல பிரான்சியோஸ் கொலனவும் அடுத்து உலகில் வரவுள்ள வன்போக்கு மாற்றங்களை புரிந்து நடப்பாரா இல்லை பிரான்சின் மாற்றங்களையே கவனத்தில் கொள்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இது இவ்விதமிருக்க கொலன்ட் நாட்டின் பிரதமர் மார்க் றூற் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலை நடாத்தும்படி அவர் மகாராணிக்கு தகவல் வழங்கியுள்ளார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பொருளாதார மீதம் பிடித்தல் விவகாரத்தில் உடன்பாடு காண முடியாது முறிவு நிலை ஏற்பட்டதால் இவர் மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளார். 14 முதல் 16 பில்லியன் யூரோவை வரவு செலவுத்திட்டத்தில் மீதம் பிடிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டாயமான அழுத்தத்தை அங்குள்ள அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்து ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் அவர் தேர்தலுக்குள் நுழைகிறார். கடந்த 2010 அக்டோபரில் இருந்து இவர் கூட்டணி அரசின் பிரதமராக இருந்து வருகிறார்.
அலைகள்



0 Responses to ஸார்கோஸி தோல்வி கொலன்ட் பிரதமர் ராஜினாமா..