நேற்று ஆப்கான் காபுல் நகரின் கண்களுக்குள் சுமார் 18 மணி நேரம் விரலை விட்டு குடைந்தெடுத்த தலபான் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ஆப்கான் போலீசாரும், அரசும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆப்கான் தலைநகருக்குள் நுழைந்த தலபான் தற்கொலைப் படையினர், அந் நாட்டின் பாராளுமன்றம், வெளிநாட்டு தூதராலயங்கள் உட்பட மேலை நாடுகளின் அத்தனை இலக்குகளையும் தாக்கி அழிக்கும் பணிகளை முன்னெடுத்தன. தாக்குதல் ஆரம்பித்தபோதே சுமார் 16 பேர்வரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் மேலை நாடுகளில் வெளியான செய்திகள் தாக்குதல்களைத் தெரிவித்தாலும் சேத விபரங்களை வெளியிடாது அடக்கி வாசித்துக் கொண்டிருந்தன. இன்று காலையில் அனைத்து தலபான்களும் கொல்லப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியிட்டன.
சேத விபரங்களை வெளியிட்டால் மேலை நாடுகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பும், ஆப்கான் போர் பற்றிய விமர்சனங்கள் இரட்டிப்பாகும் என்பது தெரிந்ததே. அதே நேரம் இந்தத் தாக்குதலை முறியடிக்க நேட்டோவின் வான் படைகளும் துணைக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை மட்டும் பிரலாபித்து பேசப்படுகிறது.
மேலை நாடுகளின் முக்கிய வல்லரசுகள் அனைத்தினதும் தூதராலயங்கள் சேதமடைந்துள்ளன. அத்தோடு தலபான்களின் பழைய விரோதியான ரஸ்ய தூதராலயமும் தாக்குலுக்குள்ளானது. முன்னர் தற்கொலைப் படையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குள் நுழைந்து நடாத்திய தாக்குதல் போல இதனுடைய வியூகம் இருந்தது கவனிக்கத்தக்கது.
ஆப்கானில் நுழைந்த மேலை நாடுகள் வரும் 2014ல் அங்கிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்த பேச்சுக்கள் சென்ற வாரம் நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுக்கும், ஆப்கான் அதிபர் ஹர்மீட் கார்சாய்க்கும் இடையில் நடந்துள்ளன. வரும் 2014 ல் ஆப்கானுக்கு புதிய அதிபர் வரவிருக்கிறார், அவரால் பதவிக்கு வந்தவுடன் தலபான்களை எதிர் கொள்ள முடியாது ஆகவே நேட்டோ படைகள் மேலும் சில காலம் நிலை கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
நேற்று சிறிய ரக இயந்திரத் துப்பாக்கியை தூக்கி ஆப்கான் போலீசார் போர் நடாத்தும் இலட்சணத்தை மேலை நாட்டு ஊடகங்கள் காட்டின. அவர்களுடைய திறமை சிரிப்பார் சிரிக்கும்படியாக இருந்தது. பழைய தேவர்; பிலிம்ஸ் படங்களில் ; எம்.ஜி.ஆரை சுடப்போகும் நம்பியார் அவரைச் சுடாமல் மண் சட்டிக்கு சுடுவதுபோல ஆப்கான் போலீசாரின் உடல் மொழி இருந்தது.
இந்த நிலையை அவதானித்துத்தான் தலபான்கள் சரியான தருணத்தில் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலானது மேலை நாடுகளுக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்த வகுக்கப்பட்ட வியூகமாக இருக்கிறது. ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறினால் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அது பலத்த சிக்கலாக மாறும். எனவே நேட்டோவை ஆப்கான் சகதிக்குள் சிக்கவைக்க வேண்டிய தேவை எதிரணிக்கு இருக்கிறது. மேலை நாடுகளை மேலும் பொருளாதார மந்தத்திற்குள் சிக்குப்பட வைக்க அது அவசியமாகவும் உள்ளது. இந்த விவகாரத்தின் சூத்திரதாரி பின்லேடனோ, ஓமர் முல்லாவோ அல்ல, அதற்கு அப்பால் மறைந்துள்ளது தெரிகிறது.
தலபான்களின் தாக்குதல் மிகப்பெரிய இராஜதந்திரப் பின்னணியில் நடந்துள்ளதாகவே மேலை நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேட்டோ அமைதிக்காக எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் தகர்ப்பதற்கு தலபான்கள் எடுத்த முயற்சியே இந்தத் தாக்குதல் என்று டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் கூறியுள்ளதை இங்கு அவதானிக்க வேண்டும்.
கேள்விகள்…
ரஸ்ய தூதராலயத்தை ஏன் அவர்கள் தாக்கினார்கள்… இது முதல் கேள்வி..
அதுபோல சீன தூதராயத்தை ஏன் தாக்கவில்லை.. இது இரண்டாவது கேள்வி.
நேற்றய 18 மணி நேர தலபான்களின் தாக்குதல்களின் மர்ம முடிச்சு இந்த இரண்டு கேள்விகளுக்குள்ளும் முயங்கி நிற்கிறது அம்ம.. என்க..
அலைகள்



0 Responses to தாக்குதல் நடாத்திய தலபான்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்