வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொனவட்டம் நகரில் இன்று (30.04.2012) மதியம் அரசின் விலையில்லா பொருட்களான மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை வேலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், சுகாதாரத்துறை அமைச்சருமான வி.எஸ்.விஜய், பொதுமக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது மேடைக்கு வந்த வேலூர் மாநகர மேயர் கார்த்திகாயினி, யாரைக் கேட்டு இந்த விழாவை நடத்துகிறீர்கள். நான் இந்த மாநகராட்சியின் மேயர். என் மாநராட்சியில் நடக்கிற ஒரு விழாவுக்கு எனக்கு தகவல் சொல்லாமல், என்னை அழைக்காமல் விழா நடத்துவது எந்த விதத்தில் நியாயம். இந்த விழாவில் அமைச்சரான நீங்கள் எப்படி கலந்துகொள்ளலாம் என்று கேள்வி கேட்டார்.
இதை ஏம்மா என்கிட்ட கேட்கிற என அமைச்சர் வி.எஸ்.விஜய் பதில் கூற, நீங்க விழாவில் கலந்துகொண்டதாலதான் கேட்கிறேன் என்று கோபமாக பேசினார் மேயர். மேயரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் திணறியதைப் பார்த்த கட்சியினர், மேயரை சமாதானப்படுத்தி விழாவை அவசர அவசரமாக முடித்தனர்.
பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலேயே அதிமுக மேயருக்கும், அதிமுக அமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகாயினிக்கு மேயருக்கான சீட்டை பரிந்துரைத்தவர் அமைச்சர் வி.எஸ்.விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to அரசு நிகழ்ச்சியில் வேலூர் மேயர் - சுகாதாரத்துறை அமைச்சர் மோதல்!