லிபியாவில் கடாபி ஆட்சி முடிந்தாலும், அந்த இருள் ஆட்சியின் மர்மங்களை தோண்டிப் புதைக்கும் காரியங்கள் ஒரு புறமும், அதை வெளிக் கொண்டு வரும் காரியங்கள் மறுபுறமும் ஏட்டிக்கு போட்டியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான பிரான்ஸ் செய்திகள் லிபிய அதிபர் கடாபி பிரான்சிய அதிபர் ஸார்கோஸிக்கு 50 மில்லியன் யூரோவை வழங்கியதாக தெரிவித்திருந்தன. இன்று அதிகாலை வெளியான ஐரோப்பிய செய்திகளில் லிபியாவின் எரிபொருள் துறை அமைச்சராக இருந்து, கடைசி நேரத்தில் கடாபியை விட்டு விலகிய சுக்ரி கானத்தின் ( 69 வயது ) சடலம் ஆஸ்திரியாவில் உள்ள டொன்யூ நதியில் மிதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அதற்கு முன்னர் இவர் வீட்டில் இறந்து காணப்பட்டதாக தெரிவித்த தகவல்கள் இப்போது ஆஸ்திரிய டொன்யூ நதிவரை கதையை இழுத்துப் போயுள்ளன.
கடாபி என்ற பயங்கரவாத நபரை சதாம் உசேனை முடிக்கும்வரை வாழவிட்ட சர்வதேச சமுதாயம் அவரிடமிருந்து பெருமளவு பணத்தையும், எண்ணெயையும் கப்பமாக உவிந்து இழுத்துள்ளது. பசுவின் மடியில் பால் முடிந்து இரத்தத்தை இழுப்பது போல மேலை நாடுகள் உவிந்து முடித்துள்ளன. மேலும் அவருடைய எரிபொருள் விற்ற பணத்தை மேலை நாட்டு வங்கிகளில் வைப்பிட செய்து, சரியான நேரத்தில் உறைய வைத்து அப்பணத்தையும் சூறையாடி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை பிடுங்கியுள்ளன.
முன்பு..
கடாபியை அவருடைய இல்லத்தில் வைத்து முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் சந்தித்து பேசிய பின்னர், பெருமளவு பிரிட்டன் நிறுவனங்கள் லிபியாவில் கால்பதித்ன. பல இலட்சம் பீப்பாய்களில் எரிபொருளை காவு கொண்டன. இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி ஏறத்தாழ ஒரு தனிமனித பொருளாதார ஆட்சியையே தனது நாட்டில் நடாத்தியிருக்கிறார். இத்தாலிக்கு கிடைத்த எரிபொருளில் 22 வீதம் லிபியாவில் இருந்து கிடைத்துள்ளது. பலர்ஸ்கோனியின் சொத்து பட்டியலை எழுதினால் தனி நூலே எழுத வேண்டும்.
இதுபோல லிபிய எண்ணெயில் பிரான்சும் குளித்துள்ளது, கடைசி நேரத்தில் பிரான்ஸ் பல்டியடித்தபோது கடாபியின் மகன் பிரான்ஸ் ஒரு நன்றி கெட்ட நாடு என்று கூறிவிட்டு திரிப்போலியை விட்டு வெளியேறினார். அவருடைய உள்ளத்தில் இருந்து வெளியேறிய வலியில் பிரான்சிற்கு கொடுத்த பணத்தின் அளவை நிறுக்க முடிந்தது.
மேலும்…
கடாபியின் ஆட்சி கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்க மத்தியதரைக் கடலில் பெரிய நாடகம் ஒன்று அரங்கேறியது. ஏறத்தாழ அடிமாட்டு விலையில் லிபிய எண்ணெய் சேமிப்புக்கள் கப்பல் கப்பலாக ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இதில் முக்கிய இடம் பெற்றவை இந்திய, சீன கப்பல்களாகும். ஆட்சி கவிழ்வதற்கு முன்னர் ஏற்றக்கூடிய எண்ணெயை ஏற்றியபடி இவர்கள் எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்றளவில் ஓடினார்கள்.
இப்படி..
அனைத்து சுரண்டல்களுக்கும் துணைபோன கடாபியின் ஓயில் வள அமைச்சர் காரியம் முடிந்ததும் அந்தர் பல்டி அடித்து கடாபியை விட்டு ஓட்டமெடுத்தார். அற்ற நீர்க் குளத்தின் அறு நீர் பறவையாக இவர் ஓடினாலும், அனைத்து மர்மங்களையும் சுமந்தபடி ஓடியது மாபெரும் தவறு. இவர் யாருடைய புத்திமதி கேட்டு ஓடினார் என்பது முதலாவது கேள்வி. ஓடியவருக்கு யார் பாதுகாப்பு என்பது அடுத்த கேள்வி.
இவருக்கு இரண்டு தரப்பிலும் ஆபத்து இருந்தது ஒன்று கடாபி ஆதரவாளரால் இருந்த ஆபத்து, இரண்டு எரிபொருளை சுரண்டிய நாடுகளின் ஆபத்து.. இந்த நாடுகள் உண்மைகள் வெளிவருவதை விரும்பமாட்டா… எனவே இரு தரப்பு ஆபத்தில் இருந்த இவருடைய மரணச் செய்தி அதிர்ச்சி தராவிட்டாலும்… அதிர்ச்சியான உண்மை வெளிவரப் போவதில்லை என்பதையே உரைக்கிறது..
மேலை நாடுகளுக்கு எண்ணெயை இலவசமாக வழங்கி, அந்த நாட்டு தலைவர்களின் தேர்தலுக்கு ஸ்பொன்சர் பண்ணியபடியே அணு குண்டை உருவாக்கி தனது சாம்ராஜ்யத்தை காக்க முயன்ற ஒருவர் கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்டார். உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதற்காகவே அந்தத் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன என்ற சந்தேகம் முன்னர் நிலவியது. இப்போது கடாபியின் எரிபொருள் அமைச்சர் சுக்ரி கானத்தின் மரணமும் அதே வரலாற்றையே எழுதியிருக்கிறது..
டான்யு நதி அவருடைய சடலத்தை கரையில் ஒதுக்கியிருக்கிறது.. வரலாற்று நதி ஒரு நாள் உண்மைகளை கரை சேர்க்கும்… வன்னியில் மே 17 இரவு நடந்த நிகழ்வுகள் அம்பலத்திற்கு ஒருநாள் வரலாம் அதுபோல இதுவும் வரலாம்.. அப்போது அதன் சுவாரஸ்யம் குன்றியிருக்கும்..
அலைகள்



0 Responses to லிபியாவின் எண்ணெய் அமைச்சர் சடலம் தண்ணியில் மிதக்கிறது..