Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது பகரின் நாட்டின் இராணுவ சிறையில் வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமைப் போராட்டக்காரர் அல் காவ்யாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மறுபடியும் விசாரிக்கும்படி பகரின் நீதிமன்று அறிவித்துள்ளது. முன்பு இவர் என்ன அடிப்படையில் விசாரிக்கப்பட்டார், இவரை விசாரித்து ஆயுள் தண்டனை வழங்கிய இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு சரியானதுதானா..? என்ற கோணத்தில் புதிய விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

அதேவேளை நாட்டில் நாளுக்கு நாள் பெருகும் ஆர்பாட்டங்கள் ரூனிசியாவில் நடந்தது போன்ற ஆட்சி மாற்ற ஆபத்தை பகரினிலும் ஏற்படுத்திவிடும் என்ற கிலி சிறுபான்மை சன்னி முஸ்லீம் மன்னருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய விசாரணைகள் அல் காவ்யாவை விடுதலை செய்யும் என்று மேலை நாடுகளில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இரகசியமாக நடந்த பேரம் பேசல்களுக்கு பின் இந்த விசாரணை நடைபறுவதால் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பகரின் தலைநகர் சனாவில் கடந்த ஆண்டு மாசி மாதம் 14ம் திகதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றே இவருடைய தாடைகளை அடித்து நொருக்கிய இராணுவம் மனித உரிமைக்கு புறம்பான அடாவடித்தனங்களை புரிந்தது. அது போதாதென்று மன்னர் ஆட்சிக்கு விரோதமாக செயற்பட்டார் என்று இவருடன் மொத்தம் 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆர்பாட்டங்களை நடாத்திய ஒரு சாதாரண சிவிலியனை இராணுவ நீதிமன்றில் விசாரித்து ஆயுள் தண்டனை வழங்கியது சர்வதேச குற்றச் செயல் என்று பல நிபுணர்கள் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த கொதி நிலையின் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்யுமா இல்லை ஒருவரை மட்டும் விடுதலை செய்யுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அல் காவ்யா ஏற்கெனவே டென்மார்க்கில் 12 வருடங்கள் வாழ்ந்து, டேனிஸ் குடியுரிமை பெற்று, பின்னர் சொந்த நாட்டுக்கு ஜனநாயகப் போராட்டங்களை நடாத்த புறப்பட்டு சென்றவராகும்.

இப்போது சுமார் 80 தினங்களையும் தாண்டி இவருடைய உண்ணாவிரதம் தொடர்கிறது. முறைப்படி பார்த்தால் இதுவரை இவர் மரணமடைந்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்தும் அவர் உயிர் வாழ்வதால் மூக்கின் வழியாக கட்டாயமாக உணவு ஏற்றப்படுகிறது என்று அவருடைய மகள் மர்யம் அல் காவ்யா தன்னுரைய ரிவிட்டரில் எழுதியுள்ளார். அங்கு ஆட்சி நடாத்தும் சிறுபான்மை சன்னி முஸ்லீம் அரசர் தனது குடும்பத்தவரை மட்டும் அதி உயர் பதவிகளில் நியமித்து, நாட்டின் வளங்களை எல்லாம் சூறையாடி ஏறத்தாழ சிரியா, சிறீலங்கா போன்ற நாடுகளில் நடப்பதைப் போன்ற குடும்ப ஆட்சி நடாத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் உலகில் நடைபெறும் அநீதிகளுக்கெல்லாம் துணை போகும் உக்ரேன் நாட்டில் இந்த ஆண்டு கோடையில் நடைபெறப்போகும் ஐரோப்பா கிண்ண உதைபந்தாட்டத்தை பகிஷ்கரிக்க வேண்டுமென்று டென்மார்க் கொன்ஸ்சவேட்டிவ் கட்சி கேட்டுள்ளது. அதேபோல வரும் யூன் 8ம் திகதிக்குள் சிறைப்படுத்தி வைத்துள்ள முன்னாள் உக்ரேன் அதிபர் யூலியா ரிமோசன்கோவை விடுதலை செய்யாவிட்டால் ஜேர்மனியும் அதிரடி முடிவை எடுக்க வாய்ப்புள்ளாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் செல்வாக்கு மிக்க இப் பெண்மணி சிறையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களை சந்தித்துள்ளார். மேலும் அவருடைய முள்ளந்தண்டு சில்லும் விலகியுள்ளது. அதிபராக இருந்த காலத்தில் ரஸ்யாவுடன் செய்த எரிவாயு ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சொந்த எரிபோருள் நிறுவனத்தில் அதிபராக இருந்தபோது 1990 களில் நடாத்திய ஊழலுக்காக மேலும் 12 வருடங்கள் சிறையில் போட உக்ரேன் அரசு கங்கணம்கட்டி வருகிறது.

ஊழலாகவும், பொய்யான முறையிலும், காழ்ப்புணர்ச்சியுடனும் இந்தப் பெண்மணியை சிறையில் போட்டு சித்திரவதை செய்து வருகிறது உக்ரேன் அரசு. நயவஞ்சக ஆட்சி நடாத்தும் விக்டர் ஜனுக்கோவ்ரெக்கின் சித்திரவதைக்கு எதிராக அவர் சிறையில் உண்ணாவிரதமிருக்கிறார். உக்ரேன் சர்வதேச அழுத்தத்திற்கு அடி பணியாவிட்டால் அங்கு நடைபெறப் போகும் ஐரோப்பா கிண்ண ஆட்டத்தில் தமது எதிர்ப்பு பிரதிபலிக்கும் என்று பல ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. அடிபணிய மறுத்தால் பெருமளவு ஸ்பொன்சரை இழக்க வேண்டிய அபாயமும் வரலாம்.

நைஜீரியாவில் உள்ள ஆயுதம் தரித்த கடும்போக்குவாதிகள் அங்குள்ள கிறீத்தவர்களை கொல்வதை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள். நேற்று ஞாயிறு தொழுகையில் ஈடுபட்டிருந்த கிறீத்தவ மக்கள் மீது, ஒரு காரிலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் வந்தவர்கள் சகட்டுமேனிக்கு தாக்குதலை நடாத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 20 பேர் பரிதாப மரணமடைந்தார்கள். வீட்டில் செய்யப்பட்ட வெடி குண்டுகளை நிராயுதபாணிகள் மீது வீசி, துப்பாக்கியால் சுட்டு இவர்கள் அடைய முற்படும் இலக்கு என்னவென்பது தெரியாமலே வன் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்த அதிரடிகளில் நாம் சிரியாவை மறந்துவிட முடியாது. அங்கு சென்றுள்ள கண்காணிப்பு குழுவின் தலைவராக நோஸ்க் ஜெனரல் றொபேட் மூட் தம்மிடமிருக்கும் கண்காணிப்பாளர் தொகை போதவே போதாதென்று அறிவித்துள்ளார். மேலும் சிரியா போன்ற நாட்டில் வெறும் 300 கண்காணிப்பாளரை வைத்து நிலவரத்தை துல்லியமாக எடைபோட முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அதேவேளை சிரியாவில் நடைபெற்ற தாக்குதல்களில் மெல்லிய தளர்வு காணப்படுவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன. கண்காணிப்புக் குழுவுக்கு தலைமைதாங்கி நோர்வே போயுள்ளது கவனிக்கத்தக்கது. நோர்வே போனால் என்ன நடக்கும் என்பதற்கு சிறீலங்கா நல்ல உதாரணமாக உள்ளது.

தற்போது நோர்வேயில் விசாரணையை சந்தித்திருக்கும் 77 பேரை கொன்ற கொலையாளி ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் தனக்கு ரஸ்யாவிலும் பல தொடர்புகள் இருந்துள்ளதாக கூறுகிறார். இஸ்லாத்திற்கு எதிர் போக்குடையோரின் வழிகாட்டல் இருந்ததாக கூறுகிறார்.

அலைகள் 30.04.2012

0 Responses to பகரின் | சிரியா | உக்ரேன் | நைஜீரியா… நெருப்பெரியும் செய்திகள்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com