சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கை எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஒன்றிணைந்து மேற்கொள்ளும் கூட்டு மே தின நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில், குருநகர் சென். றோக்ஸ் மைதானத்தில் ஆரம்பாகியது.
வழமையாக பெரும்பான்மைக் கட்சிகள் மே தின நிகழ்வுகளை தலைநகரிலேயே நடத்துவது வழக்கம் இம்முறை அதற்கு மாறாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வுகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து பெரும்பான்மைக் கட்சிகள் நடத்தவுள்ளன.
அரசின் அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று ஒன்று திரண்டுள்ள இந்த கூட்டு மே தின நிகழ்வில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இந்தக் கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சிகல உறுமய உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த பதின்நான்கு அமைப்புக்கள் கலந்துகொண்டுள்ளன.
இன்று பிற்பகல் 1 மணியளவில் நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோயில் முன்றிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு கோவில் வீதி வழியாக குருநகர் சென்.றோக் விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
அதனையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில். பொதுக் கூட்டம் ஆரம்பமானது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவ சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, ஐக்கிய சோஷலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெசூரிய, நவசிகல உறுமைய கட்சித் தலைவர் சரத் மன்மேந்திரா உட்பட தென்னிலங்கை எதிர்க்கட்சிகனைச் சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற் சங்கத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.



0 Responses to தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மே தினம்