மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை திரும்பப்பெறக் கோரி நெல்லை டவுன் பார்வதி சேஷ மகாலில் நேற்று கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
இந்த பிரார்த்தனையை அறுபத்து மூவர் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆதிசிவஞானம் நடத்தினார் இதில் ஆன்மிக சான்றோர் பேரவை நிர்வாகி இசக்கிராஜ், சைவ வேளாளர் பேரவை தலைவர் முத்துசெல்வம், கந்தசாமி, அருணா சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அறுபத்து மூவர் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆதிசிவஞானம் செய்தியாளர்களிடம்,
’’திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்திற்கு பல பெருமைகள் உள்ளது. இந்த ஆதீனத்தின் தற்போதைய ஆதீனம் விதிமுறைக்கு மாறாக அடுத்த ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்து உள்ளார்.
பெருமட விதிகளின்படி ஓலை சுவடியில் குறிப்பிடப் பட்டுள்ள நபரை தேடி சென்று நியமிக்கவேண்டும். அதுவும் 12 வயதுக்கு உட்பட்ட நபரைத்தான் நியமிக்க வேண்டும்.
நித்தியானந்தாவை நியமித்து இருப்பதை உடனே திரும்ப பெறவேண்டும். இல்லை எனில் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.
மதுரை ஆதீன மீட்புக்குழு ஒன்று அமைத்து உள்ளோம். அந்த அமைப்பின் மூலம் நித்தியானந்தாவை நியமித்ததை மாற்ற கோரி வருகிற 20-ந்தேதி சிவ ஆலயங்களில் உண்ணாவிரதம் இருப்போம். 27-ந்தேதி மதுரை ஆதீன மடத்தின் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். அதிலும் மதுரை ஆதீனம் மனம் மாறவில்லை எனில் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்று கூறினார்.



சற்று ஆறுதலாக இருக்கிறது ,,,, ஆன்மீகத்தை வியாபாரமாக்கி தொழில் செய்யும்
ஆசாடபூதிகளின் அடாவடித்தனங்களை தட்டிக்கேட்க யாரும் இல்லையோ என்று
பயந்திருந்தேன். மத புனிதத்தையும் , கலாசார விழுமியங்களையும் துஸ்பிரயோகம்
செய்யும் காவி உடுத்தும் கயவர்களை அப்புறப்படுத்தி தூய்மையை நிலைநாட்ட
முன்வந்திருக்கும் தூய உள்ளங்களுக்கு கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள்
புனிதப் போராட்டம்.