புதுக்கோட்டை தொகுதியின் சி.பி.ஐ சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் விபத்தில் இறந்ததை யடுத்து இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது தொகுதி.
இந்த நிலையில் அ.தி.மு.க மட்டும் வேட்பாளராக நகர்மன்ற தலைவராக உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டமனை அறிவித்து பிரச்சார பணிகளை தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் கட்சியின் மாவட்ட நிர்வாகம் மற்ற கட்சி நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என்றும், புதுக்கோட்டை நகரத்தின் நூற்றாண்டு விழாவிற்காக முதல்வர் அறிவித்துள்ள ரூ 50 கோடி மற்றும் புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கறம்பக்குடி ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதிகளை அ.தி.மு.க. ஒன்றிய சேர்மன்களுக்கும் மற்ற கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் வேலைகளை தங்களுக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுத்து கமிஷன் பெற்று வருகின்றனர்.
இந்த தகவல்களை கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு புகார் மனுவாக அனுப்பியும் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கட்சியின் மாஜிக்கள் சிலர் கோயிலில் மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனு பற்றி அ.தி.மு.க நிர்வாகிகள் பேசும் போது கூறியதாவது.. கட்சியின் மாவட்ட தலைமை கட்சியின் மற்ற நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை.
இப்போது வந்துள்ள சிறப்பு நிதியில் கூட ஒரு சிலர் மட்டுமே கமிஷன் பெற்று கொண்டுவிட்டனர். கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு எதுவும் கிடைக்கல.
கட்சி தலைமைக்கு மனு கொடுத்தும் அவங்க அதை கண்டுக்கல. அதனால தான் திருச்சி சமயபுரம் பக்கத்தில் திருப்பட்டூர் கிராமத்துல இருக்கிற “தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த பிரம்மா” கிட்ட (திருச்சி சமயபுரத்திலிருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ளது ‘திருப்பட்டூர்’ எனும் கிராமம். இங்கு கோயில் கொண்டுள்ள தெய்வம் பிரம்மபுரீசுவரர். இங்கு முக்கிய அபிஷேகப் பொருள் கற்கண்டு. வெண்ணிற கற்கண்டால் பிரம்மாவை அலங்கரித்திருப்பார்கள். அருகில் சரஸ்வதிக்கு தனிக்கோயில் உள்ளது.
புதிதாக கதை, கட்டுரை எழுதும் நூலாசிரியர்கள், திரைப்படத் துறைக்கு கதை, வசனம் எழுதுவோரும் பிரம்மனுக்கு எதிரே அமர்ந்து எழுதத் தொடங்குகிறார்கள். படைப்புக் கடவுள் பிரம்மாவுக்கு முன், புதிய படைப்பாளிகள் திருப்பட்டூரில் உருவாகிறார்கள்.)
மனு கொடுத்துட்டு அப்பவே உள்ளுர்ல இருக்கிற குலதெய்வத்துகிட்டயும் வந்து மனு கொடுக்கனும். அந்த மனு பற்றியும் அந்த மனுவுக்கு நடவடிக்கை எடுக்கவான்னு பிரம்மா குலதெய்வத்துகிட்ட கேட்பார். அதுக்கு குலதெய்வம் என் புள்ளை கொடுத்த மனுவுக்கு நடவடிக்கை எடுன்னு சொல்லும். அது போல செஞ்சா மனுவுல கொடுத்த படி நடக்குமாம். அதான் மனு கொடுத்திட்டோம்.
மா.செ விஜயபாஸ்கர் மேல மாஜி மா.செ கருப்பையா அம்மாவுக்கு புகார் கொடுத்துட்டார். அவர் சொல்லி இருக்கிறது உண்மை. அதுபோல மா.செ விஜயபாஸ்கர் கட்சிகாரங்களுக்கு விரோதமா நடந்துகிறார். இப்படியே தொடர்ந்தால் இடைத்தேர்தல்ல இடைஞ்சல்களை சந்திக்க வேண்டி வரும் அதனால அம்மா உடனே நடவடிக்கை எடுக்கனும்.
இல்லைன்னா எங்களைப் போன்ற மாஜி க்களை சந்திக்க அம்மா எங்களை அழைக்கனும். அதுக்கு அம்மாவுக்கு நல்ல புத்திய கொடுன்னு தான் அந்த மனுவுல சொல்லி இருக்கு. கொஞ்ச நாள்ல அது நடக்கும் பாருங்க என்று சொல்லிக் கொண்டே போனார்கள் ர.ர க்கள்.
உள்கட்சிக்குள்ளயே இப்படி ஒரு விசித்திர மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
- செம்பருத்தி
அம்மாவுக்கு நல்ல புத்திய கொடு : கடவுள் பிரம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்த அதிமுகவினர்
பதிந்தவர்:
தம்பியன்
02 May 2012



0 Responses to அம்மாவுக்கு நல்ல புத்திய கொடு : கடவுள் பிரம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்த அதிமுகவினர்