Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் ஞாயிறு பிரான்சிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இறுதிச் சுற்றில் பிரான்சின் தற்போதய அதிபர் ஸார்கோஸியும் சோசலிச வேட்பாளர் பிரான்சியோ கொலன்டவும் மோதுகிறார்கள். இவர்களில் யார் அடுத்த அதிபர் என்பதை ஞாயிறன்று வாக்களிக்க தயாராகவுள்ள 20 மில்லியன் பிரான்சிய வாக்காளர் முடிவு செய்வார்கள்.

இந்த நிலையில் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிச் சுற்று தொலைக்காட்சி விவாதம் நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த விவாதம் அனல் கக்கியது. விவாதத்தில் பிரான்சியோ கொலன்டவே முன்னணி வகித்துள்ளதாக இன்றைய காலை நேர பிரான்சிய செய்திகள் தெரிவித்தன. தற்போதைய கருத்துக் கணிப்புக்களின்படி பிரான்சிய அதிபர் ஸார்கோஸி சுமார் எட்டு வீதமான வாக்குகளால் பின்னடைவு கண்டுள்ளார்.

இனி –

இருவருடைய விவாத வியூகங்களையும் தொகுத்து நோக்கினால் ஸார்கோஸி கோபமடைதல், தாக்குதல், சிறிய தலையங்கங்களை எடுத்துப் பேசும் போக்கில் நின்று கொண்டார். பரந்துபட்ட விடயங்களை எடுத்தால் இவருடைய ஆட்சி இழைத்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும். ஆகவேதான் தனது திட்டங்களை பெரிதுபடுத்துவதை விடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளரின் திட்டங்களை தவிடு பொடியாக்கும் வேலையை செய்தார்.

எதிரணி வேட்பாளரான -

பிரான்சியோ கொலன்டவின் திட்டம் ஒரு மோசமான திட்டம், பொருளாதார சந்தையை பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளுமென்று தாக்கி நிலைகுலைக்க எத்தனித்தார். நீ ஒரு பொய்யன்… உனது பொருளாதார கொள்கைகள் உன்னைவிட பொய்யானது.. பொருளாதார குளறுபடியை ஏற்படுத்தி நாட்டை பெரும் சிக்கலில் மாட்டப் போகிறாய் என்று தாக்க ஆரம்பித்தார்.

ஸார்கோஸியின் குணத்தை அறிந்த கொலன்ட நிலை குலையவில்லை..

அவர் பொருளாதாரம், கல்வி, வெளிநாட்வர் என்று பரந்துபட்ட விதத்தில் தலைப்புக்களை அடுக்கிச் சென்றார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியமும், உலகப் பொருளாதாரமுமே காரணமென்று கூறுகிறாயே.. அப்படியானால் நீர் எதற்கு பதவியில் இருக்கிறீர்.. என்று ஸார்கோஸிக்கு கடுப்பேற்றினார்.

அடுத்து அதிரடி தாக்குதலை நடாத்தினார்..

ஸார்கோஸியின் ஆட்சியில் பிரான்ஸ் பொருளாதாரம் டைட்டானிக் கப்பல் போல மோதிவிட்டது. தாழ்ந்து போன அந்தக் கப்பலில் இருந்து அன்று முதலாம் வகுப்பில் பயணித்த பயணிகள் மட்டும் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் ஏழைகளான மூன்றாம் தட்டு மக்களோ வெளியே வரமுடியாமல் சிறைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டார்கள்.

அதுதான் இன்றைய பிரான்சின் அவல நிலை..

பிரான்சின் முதலாளிகளை காப்பாற்றிவிட்டு ஏழைகளை மூழ்கடிக்கும் வேலையை உமது வலதுசாரி கட்சி செய்கிறது என்று தாக்கினார் கொலன்ட.. அவர் எய்திய நாகாஸ்திரத்தை தகர்க்கும் இன்னொரு ஆயுதம் ஸார்கோஸியிடம் இருக்கவில்லை. விவாத முடிவில் பிரான்சியோ கொலன்ட வெற்றி பெற்றதாக பல ஊடகங்களும் கருத்துரைத்தன.

வரும் ஞாயிறு ஸார்கோஸி என்ற தலைவர் வரலாற்றை நிறைவு செய்யும் காலம் வரலாம். அத்தோடு அவர் தப்பிவிட முடியாது கடந்த தேர்தலில் லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியிடன் 50 மில்லியன் யூரோவை தேர்தல் நிதியாக வாங்கிய விசாரணைகளை சந்திக்க நேரிடும்.

தேர்தலில் தோற்றால் தனது புதிய மனைவியான மாடல் அழகியுடன் உலகை சுற்றி வரப்போவதாகக் கூறிய அவருடைய கனவுகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

உண்மையாகவே..

பிரான்சிய மக்கள் களைத்துவிட்டார்கள்… புதிய ஒருவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருதுகிறார்கள். ஆகவே பிரான்சியோ கொலன்டவே வெற்றி பெறுவார் என்பதை உணர முடிகிறது.

ஆனால் வெற்றி பெற்றாலும் பிரான்சியோ கொலன்டவால் தற்போதுள்ள சிக்கலை வெற்றிபெற முடியாது. டென்மார்க் பிரதமர் கெல தொனிங் சிமித் வென்றது போலவே அவரும் வெல்லலாம்…

ஆனால் அவருடைய தகுதியும், ஆளுமையும் சர்வதேச தரத்திற்கு தாக்குப் பிடிக்கும் என்று கூறமுடியவில்லை. இது ஐரோப்பாவில் தகுதி குறைந்த தலைவர்கள் ஆட்சிக்கு வரும் காலமாக உள்ளது.

இவர்கள் மாரித் தவளைகள் போல கத்த முடியுமே அல்லாது இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு செயற்பாட்டு திட்டங்களை முன் வைத்து வெற்றி பெறுவார்கள் என்று கருத முடியவில்லை..

அலைகள்

0 Responses to பிரான்சிய அதிபர் ஸார்கோஸி | பிரான்சியோ கொலன்ட கடும் மோதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com