பூரண மது விலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை பா.ம.க. இன்று (17.07.2012) நடத்தியது. சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களை காப்பதா? மதுவை விற்று மக்களை கொல்வதா? என்ற என்னுடைய 22 ஆண்டுகால கேள்விக்கு திராவிட கட்சிகள் இன்னும் பதில் சொல்லவில்லை. அரசியல் சட்டத்தில் கூட உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகள், போதை பொருட்களை, மருத்து தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று உள்ளது. அந்த அரசியல் சட்டத்தையும் திராவிட கட்சிகள் மதிக்கவில்லை.
எல்லா மதங்களும் மது கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது. அதையும் கேட்கவில்லை. வழிகாட்டிய அரசியல் தலைவர்கள் சொன்னதையும் கேட்க வில்லை. வருவாய் நோக்கிலேயே வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு மதுக்கடைகள் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இதன் மூலம் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்புகளாலும், நோய் தாக்குதல்களிலும் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
மதுவால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரேயடியாக மதுக்கடைகளை மூட முடியாது என்கிறார்கள். அப்படியானால் படிப்படியாக மூடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். மும்பையில் ஒரு பகுதியை சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்து போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். அதே சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமுல்படுத்தவேண்டும்.
இன்னும் 6 மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோல் வீதிக்கு வரமாட்டோம். வருகிற டிசம்பர் மாதம் இரவோடு இரவாக மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
மக்களை காப்பதா? மதுவை விற்று மக்களை கொல்வதா? எனது கேள்விக்கு பதில் சொல்லவில்லை: ராமதாஸ்
பதிந்தவர்:
தம்பியன்
17 July 2012



0 Responses to மக்களை காப்பதா? மதுவை விற்று மக்களை கொல்வதா? எனது கேள்விக்கு பதில் சொல்லவில்லை: ராமதாஸ்