Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று சனிக்கிழமை காலை தெற்கு எகிப்தில் ஒரு பள்ளிப் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 40 சிறுவர்கள் உட்பட 50 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தும் 17 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இந்த மோசமான விபத்தில் பல பள்ளிச் சிறுவர்கள் கொல்லப் பட்டதையடுத்து அங்கு பல பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் சில இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டுள்ளன.

மேலும் எகிப்தின் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துள்ளார். 4 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 60 நர்சரி  சிறுவர்களுடன் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து கெய்ரோவிலிருந்து தெற்கே 356 Km தூரத்தில் மன்ஃபலுட் எனும் இடத்திலுள்ள ரயில்வே குறுக்குச் சந்திப்பில் புகையிரதத்துடன் நேரடியாக மோதியுள்ளது.

இதில் காயமடைந்த சிறுவர்கள் அருகிலுள்ள அஸியுட் பல்கலைக் கழக வைத்திய சாலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். அவர்களுக்கு சுமார் 45 மருத்துவர்கள் அவசர  சிகிச்சை மேற்கொள்வதாகவும் எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் விபத்து நிகழும் போது ரயில்வே சந்திப்பில் பணியாற்றும் ஊழியர் வாயிற் கதவைத் திறந்து விட்டு உறக்கத்தில் இருந்ததாக அம்மாநில ஆளுநர் கெஷ்க் கூறியுள்ளார். மேலும் அந்த ஊழியர் மேலதிக விசாரணைக்காகத் தற்போது கைது செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

இதேவேளை எகிப்தின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனமான MENA செய்தி அளிக்கையில் விபத்துக்கான காரணம் பேருந்து ஓட்டுநர் தான் எனவும் புகையிரதம் அண்மிப்பதை கண்ணால் கவனித்த போதும் ரயிவே சந்திப்பில் பிடிவாதமாகப் பேருந்தைக் கடக்க விட்டதாக இந்த ஊடகம் கூறியுள்ளது.

இம் மாதத் தொடக்கத்தில் ஃபய்யும் மாகாணத்தில் இரு ரயில் வண்டிகள் தமக்கிடையே மோதிக் கொண்டதில் 5 பேர் கொல்லப் பட்டிருந்தனர். மேலும் ஒரு மாதத்துக்கு முன்னர் சினாய் தீபகற்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 போலிசார் பலியாகியிருந்தனர்.

இதேவேளை 150 வருட கால பழமையான் எகிப்தின் ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக 2002 பெப்ரவரியில் நிகழ்ந்த ரயில்வே தீ விபத்தில் 300 பேர் கொல்லப் பட்டிருந்தமை கூறப்படுகின்றது. எகிப்தில் ரயில் வண்டிகளில் அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றிச் செல்வது அங்கு ரயில் பயணத்தின் பாதுகாப்புக்கு முக்கிய ஒரு அச்சுறுத்தலாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to எகிப்தில் பள்ளிப் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து - 50 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com