Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


உலகில் இதுவரை நடந்த பெரும்பாலான இனப்படுகொலைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டு பின்னர் உலகத்தின் பார்வைக்கு தெரிய வந்து பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தும் எல்லோரும் தங்கள் கண்களை இறுக மூடிக்கொண்டார்கள்.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை மிக வெளிப்படையாக ஆதரித்து நின்றன என்றால் இந்திய அரசாங்கம் மறைமுகமாக அதற்கு எல்லா உதவிகளையும் செய்துகொண்டே நடுநிலை நாடகமாடியது. மேற்கு நாடுகள் தங்கள் அரசியல் கணக்குகளுக்கு ஏற்ப மனித உரிமை உத்திகளை வகுப்பதற்குள் ராஜபக்ஷே படுவேகமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்.

உண்மையில் இவ்வளவு வெளிப் படையான ஒரு படுகொலையை நடத்துவதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்குக்கூட தைரியம் கிடையாது, அவர்கள் எண்ணற்ற காரணங்களை உருவாக்கியே அதைச் செய்ய வேண்டும். ஆனால் ராஜபக்ஷே ஐ.நா.வின் அறிக்கையின் படியே யுத்தத்தின் இறுதி நாட்களில் நாற்பதாயிரம் பேரை (உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம்) அனைவரும் பார்க்க படுகொலை செய்தபோது உலகின் நீதியின் சுண்டுவிரல்கூட அசையவில்லை.

இந்தப் படுகொலைக்கு நீதி வழங்கும்படி உலகத் தமிழர்கள் ஐ.நா. மன்றத்திடம் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஐ.நா.மன்றமே ராஜபக்ஷே நடத்திய இந்த கொடுமைக்கு மவுன சாட்சியாய் எவ்வாறு உடந்தையாய் இருந்தது என்பது குறித்து இப்போது வெளிவந்திருக்கும் அறிக்கை மனம் உடையச் செய்வதாய் இருக்கிறது.
"இலங்கையில் மூன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா. மன்றம் மோசமாகத் தவறியுள்ளது' என்று ஐ.நா.வுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஐ.நா.வுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் சில பகுதிகளை ரகசியமாகப் பெற்று லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில் "யுத்தத்தின்போது ஐ.நா. மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி ஆராயப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்த அமைப்பின் மூத்த அதிகாரியான சார்லஸ் பெட்ரி இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளார். இந்த அறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள், "போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டிய, அவற்றை தடுத்து நிறுத்தவேண்டிய ஐ.நா. மன்றம் எந்த அளவு கையாலாகாத்தனத்துடன் ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்களுக்கு ஒத்துழைத்தது' என்பதை கடுமையாக விமர்சிக்கிறது. "அரசுகளின், அதிகார அமைப்புகளின் கைப்பாவையாக ஐ.நா. செயல்படுகிறது' என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை மெய்ப்பிக்கிறது.

இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை அடைந்தபோது "அங்கு கடுமையான மனித உரிமை மீறல்களும் படு கொலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன' என்று பல்வேறு அமைப்புகள் ஐ.நா . மன்றத்திடம் திரும்பத் திரும்ப முறையிட்டன. ஆனால் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் போலவே பட்டும் படாமல் நடந்துகொண்டார்.

இது அப்போதே கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் இப்போது வெளி வந்திருக்கும் அறிக்கை ஈழத்தமிழர்களுக்கு ஐ.நா. மன்றம் இழைத்த கடும் அநீதியை தெள்ளத் தெளிவாக முன்வைக்கிறது.

செப்டம்பர் 2008-ல், "ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்திரவாதம் வழங்க முடியாது' என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து ஐ.நா. தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டது.

ஒரு படுகொலையை நடத்துவதற்காக ராஜபக்ஷே இட்ட இந்த உத்தரவை ஐ.நா.சபை எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதை அறிக்கை கடுமையாக விமர்சிக்கிறது. சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களின்படி ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் ராஜபக்ஷே வெளிப்படையாக இந்த நெறியை மீறியபோது, அதை ஐ.நா. சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் சிங்கள ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த யுத்தத்தின் நடுவே பல்லாயிரக்கணக்கான மக்களை அப்படியே கைவிட்டுச் சென்றதுடன் அது தனது கடமையை முடித் துக்கொண்டது. யுத்தப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களுக்கு இதனால் எந்த மனிதாபிமான உதவியும் நீதியும் கிடைக் காமல் போனது. "சர்வதேச சமூகத்தின் பார்வையிலிருந்து இந்த படுகொலையை மறைப்பதற்காக ராஜபக்ஷே வெளிப்படையாக எடுத்த இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. ஒத்துழைத்தது' என்பதுதான் உண்மை.

மேலும் இந்த அறிக்கையில், ’இலங்கையில் ஐ.நா. ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பதல்ல, மாறாக மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐ.நா. பணியாளர்கள் அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ அற்றவர்கள். மேலும் இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை’ என்றும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளைப் பார்க்கும்போது ஐ.நா. மன்றம் எவ்வளவு உளுத்துபோன பலவீனமான கட்டமைப்பாக மாறிவிட்டது என்பதை உணர முடிகிறது. இதுபோல உலகில் இன்னும் எத்தனை நாடுகளில் தகுதியற்ற ஊழியர்களைக் கொண்டு ஐ.நா. சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்று தெரியவில்லை.

இந்த அறிக்கை முன்வைக்கும் மிகக்கடுமையான குற்றச்சாட்டு "எவ்வாறு போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை ஐ.நா.வின் ஊழியர்கள் மூடிமறைத்தார்கள் என்பதுதான். ’பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுக்க முயற்சிப்பதில் தங்களுக்கு பொறுப்பு இருப்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐ.நா. அதிகாரிகள் உணர வே இல்லை. அதோடு மட்டுமல்ல, நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமை யக அதிகாரிகளும் அவர் களுக்கு இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத் தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை. யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. கணக்கிட்டு வந்தபோதும் அந்தத் தகவலை அது வெளியிடவே இல்லை. மேலும் ராணுவத்தினரின் ஷெல் தாக்குதல் காரணமாகவே பெரும்பாலானோர் இறந்தனர் என்பதை யும் இலங்கை அரசின் நிர்ப்பந்தங்கள் காரணமாக ஐ.நா. மன்றம் மூடி மறைத்தது'’என்று கடுமையாக விமர்சிக்கிறது இந்த அறிக்கை.

"இலங்கை இறுதி யுத்தத்தின்போது இனப் படு கொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறை கூட அதிகாரபூர்வமாக கூடவில்லை. ஐ.நா. தன் உறுப்பு நாடுகளுக்கு சொல்ல வேண்டிய உண்மைகள் எதையும் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார் களோ அதனைத்தான் ஐ.நா. வெளியில் சொன்னது' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை முன்வைக்கிறது. சர்வதேச நாடுகள் இந்த கொடூரமான பேரழிவைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு ஐ.நா.வின் இந்தச் செயல்பாடுகளே முக்கியக் காரணமாக அமைந்துவிட்டன.
கம்யூனிஸ நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் நிகழும் வன்முறை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. எத்தனையோ அவசரக் கூட்டங்களை நடத்தியிருக்கிறது.

தடைகளை விதித்திருக்கிறது. சர்வதேச அமைதிப்படைகளை அனுப்பியிருக்கிறது. இதெல்லாம் ஏகாதிபத்திய அரசுகளின் விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் ஏற்ப ஐ.நா. எடுத்த நடவடிக்கைகளே தவிர நீதியின்பால் அதற்கு உண்மையான விருப்பம் எதுவும் இல்லை என்கிற சந்தேகத்தையே இந்த விவகாரம் காட்டுகிறது.

லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்கள் தொடர்பான செய்திகளை அவ்வளவு முனைப்புடன் வெளியிட்ட ஐ.நா.வும் மேற்கத்திய ஊடகங்களும் இலங்கை யுத்த காலத்தில் ஏன் மௌனம் சாதித்தன? மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை ஈழப் போராட்டம் அழிக்கப்பட வேண்டும், அதே சமயம் சீனாவுடன் கூட்டு வைத்திருக்கும் இலங்கை அரசிற்கு மனித உரிமை மீறல்கள் சார்ந்த நிர்ப்பந்தங்களை அளிக்கவேண்டும்.

இதுதான் இலங்கைத் தமிழர்களை வைத்து அவர்கள் ஆடிய சூதாட்டம். அதற்கு ஐ.நா. மன்றம் ஒத்துழைத்திருக்கிறது என்பதுதான் இந்த அறிக்கை நமக்குத் தரும் பாடம். இப்போது மேற்கு நாடுகள் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக வடிக்கும் முதலைக் கண்ணீரும் இந்த சூதாட்டத்தின் ஒரு தொடர்ச்சிதான்.

ஐ.நா. அதிகாரிகள் ஏன் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்கள்? அவர்கள் விலை பேசப்பட்டார்களா? அச்சுறுத்தப்பட்டார்களா? இலங்கை விவகாரத்தை தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திய இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் கைப்பாவைகளாக செயல்பட்டார்களா? எதற்காக பல்லாயிரம் மக்களின் ரத்தத்தில் அவர்கள் மை நனைத்தார்கள்? சொல்லுங்கள், ஏன் இந்த துரோகம்?

ஓராண்டிற்கு முன்பு, சேனல்-4 வீடியோ வெளிவந்த போது எப்படி மனமுடைந்து போனேனோ அதே போலத்தான் இந்த அறிக்கை வெளிவந்த இன்றும் மனமுடைந்து போயிருக்கிறேன். இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட இனமாக, கைவிடப்பட்ட இனமாக, ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோராலும் கைவிடப்பட்ட இனமாக தமிழினம் இருந்திருக்கிறது.

போர்க்குற்ற விசாரணைகள், நீதி கோரல்கள் அனைத்தின் மீதும் ஒரு கணம் அவநம்பிக்கையின் கண்ணீர் பட்டுத் தெறிக்கிறது.
ஈழப் படுகொலை, ராஜபக்ஷே மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் சேர்ந்து நடத்திய ஒரு மானுடப் பேரழிவு. நாம் இப்போது யாரிடம் நீதி கேட்கவேண்டும் என்று தெரியவில்லை.

நன்றி
நக்கீரன்

0 Responses to இனப்படுகொலையின் இன்னொரு அத்தியாயம்: ஐ.நா.வின் துரோகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com