Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிவசேனா தலைவர் பால்தாக்கரே 17.11.2012 சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது, மும்பையின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பார்க் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பால் தாக்கரே மரணத்துக்காக கடைகள் அடைக்கப்பட்டதை கண்டித்து விமர்சனம் செய்து மராட்டிய மாநிலம் பல்கர் நகரில் வசிக்கும் கல்லூரி மாணவி ஷகீன்ததா என்பவர் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 'பால் தாக்கரேவை போன்ற பலர் தினமும் பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். இதற்கெல்லாம் கடையடைப்பு செய்யக்கூடாது' என அவர் கூறியிருந்தார். 

இந்த கருத்தை அவரது கல்லூரி தோழி ரினி சீனிவாசன் ஆமோதித்திருந்தார். பேஸ்புக்கில் ஷகீன் வெளியிட்ட கருத்து பற்றி தகவல் அறிந்ததும் பல்கர் நகர சிவசேனா தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஷகீனின் மாமா கிளீனிக்கை அடித்து நொறுக்கினார்கள். 

இதையடுத்து ஷகீன் மன்னிப்பு கோரி மீண்டும் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். என்றாலும் சிவசேனா கட்சியினர் கொந்தளிப்பு அடங்கவில்லை. பல்கர் போலீசில் புகார் செய்தனர். மும்பையில் நடந்த முழு அடைப்பை சிவசேனா ஆதரிக்கவில்லை. எனவே ஷகீன் கருத்து மத உணர்வை தூண்டுவதாக உள்ளது என்று சிவசேனா கட்சியினர் புகாரில் கூறி இருந்தனர். 

இதைத்தொடர்ந்து பால் தாக்கரே பற்றி விமர்சித்து கருத்து வெளியிட்ட கல்லூரி மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் பல்கர் போலீசார் மாணவிகள் ஷகீன்ததா, ரினி சீனிவாசன் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

பல்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இரு மாணவிகளையும் 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பிறகு 2 மாணவிகளும் ரூ.15 ஆயிரம் செலுத்தி ஜாமீனில் செல்ல அனுமதித்தார். இதையடுத்து இரு மாணவிகளும் விடுதலை ஆனார்கள். 

இதற்கிடையே மராட்டியத்தில் 2 மாணவிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில் மாணவிகளை கைது செய்த போலீசாரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜுவும் மாணவிகள் கைதை கண்டித்துள்ளார். 

இதற்கிடையே மாணவி ஷகீனின் மாமா கிளினீக்கை நொறுக்கியவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக இதுவரை சிவசேனா கட்சியினர் யாரும் கைது செய்யப்படவில்லை. 

மத்திய மந்திரி கபில் சிபில் கூறுகையில், மும்பை போலீசார் 2 பெண்களை கைது செய்தது சட்ட விரோதம். போலீசார் சட்டத்தை தவறாக கையாண்டு இருக்கிறார்கள். மராட்டிய அரசும், போலீசாரும் நிலைமையை காப்பாற்ற வேண்டும், இதுபோன்ற காரணங்களுக்காக கைது நடவடிக்கை எடுத்து இருப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றார். 

கிரண்பெடி கருத்து தெரிவிக்கையில், தவறான புகாரின் பேரில் 2 பெண்களை கைது செய்திருப்பது தவறு. அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதும் தவறு. போலீசார் பெரும் தவறு செய்து விட்டார்கள் என்றார்.

0 Responses to பால்தாக்கரே மரணம் பற்றி விமர்சனம்: மாணவிகள் கைது சட்டவிரோதம்: கபில் சிபல் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com