Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெலிகடைச் சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக நாம் பல செய்திகளைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாம் அறிந்திராத ஒரு உண்மைச் சம்பவமும் இங்கே புதைந்து கிடக்கிறது. பரிதாபமான இச் சம்பவம் இடம்பெற இலங்கை அரசே முழுக்காரணமாக அமைந்துள்ளது. உலகில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் சிறைச்சாலையும் ஒன்று என்பார்கள். எதிரிகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்களில் பலர் ஏதேனும் ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு சிறையில் போய் அமர்ந்து கொள்வது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடப்பதுதான். ஆனால் இங்கே நடந்துள்ள விடையத்தை வாசியுங்கள் !

நடந்து முடிந்த வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரத்தில் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 27கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 40க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். காயமடைந்தோரில் கைதிகளும் சிறைக் காவலர்களும் பொலிசாரும் இராணுவத்தினரும் அடங்குகின்றனர். உயிரிழந்த கைதிகளில் இரண்டு முஸ்லிம்களும் அடங்குகிறார்கள். ஒருவர் கொழும்பு 12பீர்சாஹிப் வீதியைச் சேர்ந்த ஸலாஹுதீன் முகமட் அஸ்வர்தீன். மற்றவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ரம்சதீன் முகமட் நெளபர். அஸ்வர்தீனின் ஜனாஸா அவரது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இக் கைதியின் பின்னால் உள்ளது ஒரு உண்மைக் கதை.

1972ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த அஸ்வர்தீனுக்கு தற்போது 40வயதாகிறது. மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள். கொழும்பு 12புதுக்கடை பீர்சாஹிப் வீதி மத்ரஸதுர் ரஹ்மானியா அருகாமையில் அமர்ந்திருக்கிறது அவரது மிகச் சிறிய வீடு. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவரை கடந்த 04.11.2012ஞாயிற்றுக்கிழமைதான் பொலிசார் கைது செய்திருக்கிறார்கள். மறுநாள் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிவான் 1500ரூபா அபராதம் விதித்திருக்கிறார். அப்பணத்தைக் கட்டியிருந்தால் அவர் வெளியே வந்திருக்கலாம். இல்லையேல் வெலிகடைச் சிறைக்கு சென்றிருக்கவேண்டியது இல்லை. இருப்பினும் அந்தத் தொகையைச் செலுத்துவதற்கான பணம் அஸ்வர்தீனிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ இருக்கவில்லை. முயற்சித்திருந்தால் பணத்தைக் கட்டி எடுத்திருக்கலாம்தான், ஆனாலும் கொஞ்ச நாட்களுக்காவது ஜெயிலில் இருந்தால்தான் அவர் திருந்துவார் என்று எனது மகள் சொன்னார் என்கிறார் அவரது மனைவி.

ஆனால் அதற்கு முதல் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கலவரத்தில் ஈடுபட்டது யாரோ, ஆனால் இறுதியில் வந்தவர் போனவர் எல்லோர் மீதும் இராணுவம் கண் மூடித்தனமாகச் சுட்டனர். சம்பவம் நடந்த மறுநாள் உயிரிழந்த கைதிகளின் பெயர் விபரங்களை ரீ.வி.யில் சொன்னபோது அதில் அஸ்வர்தீனின் பெயர் சரியாக உச்சரிக்கப்பட்டதால் எனது மகன்தான் என்று முடிவு செய்தேன். எனினும் ஏனையவர்கள் அது அஸ்வர்தீனாக இருக்க முடியாது என என்னை சமாதானப் படுத்தினர் என்றார் அவரது தாயார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் 6.20மணியிருக்கும். எனது வீட்டுக்கு வந்த பொலிசார் உங்கள் மகன் சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது சடலத்தைப் பொறுப்பெடுக்க வாருங்கள் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்’’ என்கிறார் அழுது அழுது கண்கள் வீங்கிப் போயிருந்த பாத்திமா கனி(தாயார்). உடனடியாக பொலிஸ் பிரேத அறைக்குச் சென்று பார்த்தேன்.எனக்கு தலை சுற்றியது. இறைச்சிக்கடையில் வெட்டிப் போட்ட மாடுகள் போல சடலங்கள் தரையில் கிடந்தன.

(அஸ்வர்தீன்) உடலைப் பார்த்தபோது என்னால் அழுகையைத் தாங்க முடியவில்லை. துப்பாக்கிச் சன்னம் பின்புறமாக தலையைத் துளைத்து வாயினால் வெளியாகியிருந்தது. அவரது தலையில் ஒரே ஒரு சூடுதான். ஆனால் மற்றவர்களின் உடல்களெல்லாம் கன ரக ஆயுதங்களால் துளைக்கப்பட்டிருந்தன’’ என்றார் மைத்துனர் சப்ராஸ். இதனைத் தான் இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் செய்தார்கள். தப்பியோடும் கைதிகளை காலுக்கு கீழ் ஏன் சுடவில்லை ? தலையில் தான் சுடவேண்டுமா ? இரக்கமற்ற இந்த அரக்கர்கள் எப்போது தான் திருந்துவார்கள் ? கொழும்பில் இப்படியான அராஜகத்தை முஸ்லீம் சகோதரர்களுக்குச் செய்த இலங்கை இராணுவம் 250 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வன்னியில் என்ன அட்டகாசம் செய்திருப்பார்கள் என்று இப்போது கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

0 Responses to அப்பா கொஞ்ச நாளாவது ஜெயிலில் இருந்தால் தான் திருந்துவார் என்றாள் மகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com