Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதில் தமக்குள்ள உறுதிப்பாட்டை தமிழ் மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். அத்தோடு, வன்முறைப் பாதைக்கு மீண்டும் செல்வதை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இந்த நிலைப்பாடானது; கடந்த நான்கு ஆண்டுகளில், ஜனநாயக ஆணைகள் மூலமாகத் தெளிவாக நிறுவப்பட்டுவிட்டது. 2010ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல், 2012ஆம் ஆண்டின் கிழக்கு மாகாண சபைத் தேர்தல், 2013ஆம் ஆண்டின் வடக்கு மாகாண சபைத் தேர்தல், கடந்த ஆண்டுகளில் நடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் என்பவற்றில் தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணைகள் மூலம் தமிழ் மக்களின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தந்தை செல்வாவின் 37வது சிரார்த்த தின சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வினைக் காண்பது தொடர்பான பல வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கியிருக்கின்றது. போர் நடந்த காலத்திலும், போர் முடிந்த பின்னும் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை மீறுகின்றது.

போர் முடிவுக்கு வந்தவுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்த போதும், திட்டவட்டமான வாக்குறுதிகைளை இலங்கை அரசாங்கம் அவரிடம் வழங்கியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாகச் செயற்படுவதிலிருந்தும் அது தவறிவிட்டது.

இலங்கை உச்சநீதிமன்றத்திற்கும் இலங்கை பாராளுமன்றத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளையும் கூட இலங்கை அரசாங்கம் மீறுகின்றது. இந்தக் காரியங்கள் ஆயுதப் படைகளின் உதவியுடன் கூடச் செய்யப்படுகின்றன. அந்த நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப்பரம்பல் வடிவத்தை மாற்றியமைக்கின்றன. அந்தப் பிரதேசங்களின் கலாசார மற்றும் மொழி அடையாளங்களிலும் மாற்றங்களைச் செய்கின்றன.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் இந்த நாட்டில் இயல்புநிலை திரும்புவதற்கும் நேர்மையான நல்லிணக்கம் நிகழ்வதற்கும் தடையாக அமைந்துவிட்டன. அத்தோடு, தான் வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றி போர் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்தும் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது. இனப்பிரச்சினை விவகாரம் மேலும் மேலும் சர்வதேச மயப்படுவதற்கு இந்த விடயங்களே காரணமாக அமைந்தன. இன்று தனக்குத் தோன்றியுள்ள இந்த நெருக்கடியான நிலைக்கு இலங்கை அரசாங்கம் தன்னையே தான் குற்றம்சாட்ட வேண்டும்.

உள்நாட்டில் தான் வழங்கிய வாக்குறுதிகளை மீறிப் பழகிவிட்டதைப் போல, உலக சமூகத்திற்குத் தான் வழங்கிய வாக்குறுதிகளையும் மீறுவதுடன், தனக்கான கடமைப்பாட்டிலிருந்தும் விலகி விடலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுவது புத்திசலித்தனமானது அல்ல. உலக மட்டத்தில் ஏற்கப்பட்டிருக்கும் நியாயக் கோட்பாடுகளுக்கு அமைவாகவும், உயர் தரத்துடனும் தனது வாக்குறுதிகளையும் தனது கடமைப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும். நீதியானதும், சமத்துவமானதும், ஏற்கத்தக்கதுமான வழிமுறைகளுக்கு ஊடாக அதனைச் செய்ய வேண்டும்.

இன்றைய நெருக்கடி நிலையிலிருந்து வெளியில் வருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு வேறு மார்க்கங்கள் எதுவும் கிடையாது. சாதுரியமான ஏமாற்றங்களைச் செய்வதற்கு இனி இடமும் இல்லை. இத்தகைய பின்னணியில், பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காரியங்களில் இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com