Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் கடந்த ஒரு மாதத்திற்குள் இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் மக்கள் மீண்டும் இராணுவச் சுற்றிவளைப்புக்கள் மற்றும் தேடுதல்களினால் நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான நிலைமைகளை நாட்டின் முப்படைகளின் தளபதி என்கிற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியச் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

கோபி என்பவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் அணி சேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

அதனை முன்னிறுத்தி, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், வன்னிப் பிரதேச்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இராணுவத்தினர் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் இறைக்கச் செல்லும் தோட்டச் செய்கையாளர்களாகிய வயோதிபர்களும் தங்களுடன் தேசிய அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று இராணுவத்தினர் வற்புறுத்தியிருக்கின்றார்கள். இதனால், மீண்டும் ஒரு மோதல் நிலைமை ஏற்பட்டுவிட்டதோ என்று தமிழ் மக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். இந்த நிலைமையை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இளம் பெண்களை இராணுவத்தில் சேர வேண்டும் என்று இராணுவத்தினர் தொடர்ந்தும் வன்னியில் வற்புறுத்தி வருகின்றனர். மோதல்களில் பெற்றோரை இழந்து தனிமையில் அண்ணனுடன் வாழ்ந்து வருகின்ற தங்கை, இராணுவத்தில் சேர மறுத்ததையடுத்து அண்ணனை இராணுவத்தினர் கைது செய்ததாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்கமுடியாது. இது பற்றியும் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் முடிவடைந்த பின்பும், விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கிறார்கள் எனக் கூறி, தமிழ் மக்கள் அனைவரையும் கெடுபிடிக்குள் உள்ளாக்கியிருக்கின்ற நெருக்கடியான சூழலை இல்லாமல் செய்து, அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய சூழலை உருவாக்குவதே தற்போது முக்கியமானதாகும். வடக்கின் தற்போதைய நிலைமைகளை எடுத்துக் கூறி பேச்சு நடத்துவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு நாளை புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கில் இராணுவக் கெடுபிடி அதிகரிப்பு: கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com