இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் இவ்வாறு பேச்சு நடைபெற்றால் அதன்போது தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கு கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளதென அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் இந்தத் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து மக்களின் கருத்தறியத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. எனவே இந்த மாத இறுதிக்குள், பொது மக்கள்,பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களைக் கூட்டமைப்பினரிடம் சமர்ப்பிக்கமுடியுமென அவர் தெரிவித்தார்.
இன்று முற்பகல், அச்சுவேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பல்வேறு முயற்சிகளை நாம் முன்னெடுத்தோம். அவை காலத்துக்குக் காலம் இலங்கை அரசுத் தரப்பால் நிராகரிக்கப்பட்டும், தவறாக அர்த்தப்படுத்தப்பட்டும் பார்க்கப்பட்டதால் இழுபறியாகவே அவை முடிவடைந்தன. தற்போது தென்னாபிரிக்க அரசின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுக்கள் நடைபெறுவதற்கான ஏதுக்கள் தோன்றியுள்ளன. இதன்போது எல்லாத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட - தமிழ்மக்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கூடியதாக - தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து முன்வைக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. அவற்றைத் தவிர்க்கும் வகையில் நாம் இப்போது தயாரிக்கவுள்ள தீர்வுததிட்டத்தில் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை உள்ளவாங்கத் திட்டமிட்டுள்ளோம். எனவே, பொதுமக்கள், பொது அமைப்புக்கள் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள் தமது கருத்துக்களை இந்த மாத இறுதிக்குள் எம்மிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அச்சுவேலிக்கிளையிலும், மார்ட்டின் வீதியிலுள்ள தலைமையகத்திலும் அபிப்பிராயங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Responses to தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை சாத்தியம்! தீர்வுத்திட்டத்தையும் சமர்ப்பிக்க கூட்டமைப்பு முடிவு!