புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இவ் நடவடிக்கைக்கு எதிராக கடந்த நாட்கள் யேர்மனியில் பேர்லின் மற்றும் பிராங்க்போர்ட் நகரிலும் பிரான்ஸ் நாட்டிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
யேர்மனியில் பேர்லினில் மலேசியா தூதரகத்துக்கு முன்னரும் பிராங்க்போர்ட் நகரில் மலேசியா துணைத்தூதரகத்துக்கு முன்னரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டது.
நிகழ்வில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பதாகைகள் மக்களால் ஏந்திய வண்ணம் மலேசியா பாதுகாப்பு தேடி புகலிடம் தேடி வருபவர்களை சிங்கள பேரினவாத அரசிடம் திருப்பி அனுப்ப கூடாது எனவும் கோரப்பட்டு மனு கையளிக்கப்பட்டது.
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையால் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனதுக்கு முன்னரும் கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.இக் கவனயீர்ப்பில் மலேசியா தமிழ் மக்களை சிங்கள கொலைக்களத்துக்கு திருப்பி அனுப்ப கூடாது என்றும் மனு கையளிக்கப்பட்டது.
சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக அப்பாவித் தமிழர்களை நாடுகடத்தி, சித்திரவதைக்கும் கடூழியச் சிறைக்கும் இனவழிப்புக்கும் துணைபோகும் தமிழர் விரோதப் போக்குடைய நாடுகளுக்கு எதிராக நியாயக் குரல்களை எழுப்பி, உலகத் தமிழர்கள் போராடவேண்டியது மிகவும் அவசியமாகும்.
தகவல்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
0 Responses to யேர்மனி மற்றும் பிரான்சில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு