Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்பிரிக்காவின் அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் இனி எபோலா ஆட்கொல்லி வைரஸ் ஆபத்து இல்லை என உலக சுகாதாரத் தாபனமான WHO அறிவித்துள்ளது.

ஜூலையில் எபோலாவால் தாக்கப் பட்ட வான் பயணி ஒருவரால் லாகோஸில் இந்த வைரஸ் தொற்று பரவியது. இதனால் 21 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நகரில் எபோலா பீதி தொடங்கியது.

ஆயினும் இறுதியில் நைஜீரியாவில் மொத்தம் 19 எபோலா நோயாளிகள் இனம் காணப்பட்டும் அதில் 7 பேர் கொல்லப் பட்டிருப்பதும் உறுதி செய்யப் பட்டது. மேலும் நைஜீரிய அரசின் தீவிர நடவடிக்கைகளால் இது தொற்றியிருக்கக் கூடிய நபர்கள் தேடப்பட்டு சந்தேகத்துக்குரிய அனைத்து நபர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதா என்பது பரிசோதிக்கப் பட்டதுடன் திங்கட்கிழமை நைஜீரியாவில் எபோலா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டது என WHO உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வெற்றியானது உலகில் எபோலா அச்சம் நிலவும் நாடுகளுக்கும் ஓர் முன்னோடி எனவும் திறமையான சுகாதாரப் பொறிமுறையினைக் கொண்டுள்ள நாடுகளுக்கு நிச்சயம் எபோலா தாக்கத்தை முற்றாகக் கட்டுக்குக் கொண்டு வர முடியும் என்பதற்கு சான்றாகவும் இது திகழ்கின்றது எனவும் WHO தெரிவித்துள்ளது.

நைஜீரிய சுகாதார அதிகாரிகளின் கருத்துப் படி தலைநகர் லாகோஸில் எபோலாவுடன் தொடர்பு கொண்டவர்கள் எனச் சந்தேகிக்கப் பட்ட அனைத்து நபர்களையும் (100%) இரண்டாவது இடமான போர்ட் ஹார்கௌர்ட் இல் 99.8% வீதமான நபர்களுக்கும் எபோலா பரிசோதனை நிறைவேற்றப் பட்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எபோலா தீவிரமாக தாக்கியுள்ள ஏனைய நாடுகளான கினியா, லிபேரியா, சியெர்ரா லெயோனே ஆகிய நாடுகளைப் போன்றல்லாது நைஜீரியாவில் குறித்த நபர்களின் உடல்நிலை 21 நாட்களுக்கு தினசரி கண்காணிக்கப் பட்டதாகவும் பரிசோதனைக்குப் பயந்து தப்ப நினைத்தவர்களையும் விடாது பின்பற்றி வலுக்கட்டாயமாகப் பரிசோதிக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலும் எபோலா நோய் புதிதாக யாருக்கும் பரவவில்லை என உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அதாவது டல்லாஸ் நகரில் எபோலாவுக்குப் பலியான தோமஸ் எரிக் டுன்கனுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகிக்கப் பட்ட 43 பேருக்கு தொடர்ந்து 21 நாட்களுக்கு தினசரி பரிசோதிக்கப் பட்டு நோய் அறிகுறி எதுவும் இல்லை என ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. எபோலாவால் உலகம் முழுதும் பலி எண்ணிக்கை 4447 ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நைஜீரியாவில் எபோலா ஆபத்து இனி இல்லை!:உலக சுகாதாரத் தாபனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com