Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இங்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், வடக்கு மாகாணசபை அது தொடர்பான தனது தீர்மானத்தை (பிரேரணையை) கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடத்திவருகின்ற விசாரணைகள் இந்த மாதம் 31 ஆம் திகதியுடன் முற்றுப்பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் “இந்தத் தீர்மானம்“ முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அவர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கத்தின் தீர்மானமானது தேசிய அளவில் முக்கியத்துவம் மிக்கது என்பதால் தன்னால் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இது தொடர்பாக அதன் இணைப்புக்குழு கூட்டத்திலும் உயர்மட்டக் கூட்டத்திலும் ஆராய்ந்து 11 விடயங்களை உள்ளடக்கி முதலமைச்சருக்குத் தெரிவித்திருந்ததாகவும் சி.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில், இனப்படுகொலை என்ற சொற்பதம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருந்த தலைவர் இரா.சம்பந்தன், இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான சமயம் இதுவல்ல என கூறியிருந்தார். இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை வடக்கு மாகாண சபை ஏற்க மறுக்கிறது: சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com