Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவழிப்பு பற்றிய பிரேரணையை மாகாண சபை உறுப்பினர்கள் கொண்டுவருவதை நான் தடுத்துள்ளேன் என என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இந்தப் பிரேரணைகள் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று நாம் மனித்ததுவத்ததை பறிகொடுத்தவர்களாகவே வாழ்கிறோம். போரின் பின்விளைவுகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு நிற்கும் பரிதாபத்துக்குரியவர்களே நாம் என்பதை மறக்கக்கூடாது.

இலங்கையில் போர் முடிவுற்றாலும் அதன் பாதிப்புக்கள் இன்றளவும் தொடர்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. போரின் பாதிப்புக்கள் பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன என்பதே உண்மை.

சர்வதேச நிறுவனங்கள் பல போரின் பாதிப்புக்கள் தொடர்பில் கூறியுள்ளன. குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் நிலைமைகள் தொடர்பில் கூறியுள்ளனர். போர் முடிவுற்ற பின்னரும் அவர்கள் கவனிப்பாரற்றுள்ளனர் என்பது கவலைக்குரியது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேணடும். அப்போதுதான் அவர்கள் படிபடியாக பாதிப்புக்களில் இருந்துவிடுபட்டு யதார்த்த வாழ்க்கைக்கு வரமுடியும்.

வடக்கில் முழுவதும் இராணுவத்தினரின் கையில்தான் இருக்கிறது. போரின் போதான சூழ்நிலையில்தான் நாங்கள் இப்போதும் வாழ்கிறோம். அதிஉயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பெருமளவான காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இதனால் சொந்த இடங்களை விட்டு முகாம்களில் வாழ்கிறார்கள் மக்கள். இவர்களின் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. அங்குள்ள வீடுகளைத் தரைமட்டமாக்கி காணிகள், வேலிகள், எல்லைகள் என தடயமில்லாமல் அழித்தொழிக்கின்றனர். இதைப் பார்க்க நான் சென்றபோது 'பாதுகாப்பு செயலாளரிடம் போய் பாஸ் எடுத்து வாருங்கள்' என்றனர் இராணுவத்தினர்.

என் சிங்கள நண்பரொருவர் அடுத்த சில நாள்களில் நான் சென்ற வழியாகவே தல்செவன உணவகத்திற்கு சென்றுவந்தார். அவருக்கு எவ்வித அனுமதிப் பத்திரமும் இல்லை. வடக்கு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால் காணிச் சொந்தக்காரரால் என்னதான் செய்யமுடியும்? தற்போது கண்ணுக்குத் தெரியாமலே இராணுவக் கட்டுப்பாட்டுடன் சேர்ந்த உள்ளூர் ஆட்சி வடக்கு மாகாணத்தில் வேரூன்றிவருகின்றது. இதை அனைவரும் உணர வேண்டும்.

வடக்கில் போரின் பின்னரும் இயல்பு நிலை திரும்பவில்லை. வடக்கை அபிவிருத்தி செய்கிறோம் எனக் கூறும் அரசு அதன் பின்னணியில் பல அந்தரங்கங்களை மறைத்துவைத்துள்ளது. இனவழிப்பு பற்றிய பிரேரணையை மாகாண சபை உறுப்பினர்கள் கொண்டுவருவதை நான் தடுத்துள்ளேன் என என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இந்தப் பிரேரணைகள் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதே.

சுதந்திரம் என்பது உடலிலும் பார்க்க மனதில் உறையும் ஒரு மனோ நிலை. உங்கள் ஒன்றுகூடல் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களுக்கு ஓர் ஆறுதலைக் கொடுக்கட்டும். வரும் காலத்தில் பேதமின்றி எமது இளைஞர் சமுதாயம் வீறு நடை போடவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இனவழிப்பு பிரேரணை நெருக்கடிகளை அதிகரிக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com