Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உயர்தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளவர்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் காண்பிப்பதற்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதே கல்வி அமைச்சின் நோக்கம். மாணவர்களின் தரத்துக்கு கல்வியை கீழ் மட்டத்துக்கு கொண்டு வருவது எமது நோக்கமல்ல என்று கூறிய அமைச்சர், கடந்த காலங்களில் கணித பாடத்தில் சித்தியடையும் 35 புள்ளிகள் அடைவு மட்டத்தை சுமார் 18 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக அறிகிறோம். இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பரீட்சை திணைக்களம் என்பது சுயாதீனமாக இயங்க வேண்டியது. அதனாலேயே நல்லாட்சி என்ற ரீதியில் சுயாதீன ஆணைக்குழுக்களையும் கொண்டுவர நாம் தீர்மானித்திருக்கிறோம்.

க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதாயின் கணித பாடம் கட்டாயமாக சித்தியடைதல் வேண்டும். உயர்தர பரீட்சைக்கு கணித பாடம் தேவையில்லை என கடந்த அரசு கொண்டு வந்த திட்டம் முற்றாக ஒழிக்கப்படும்.

இதேவேளை நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகளும் ஒழுங்குபடுத்தப்படுவதற்கென தனியான பிரிவொன்று கல்வி அமைச்சில் ஏற்படுத்தப்படவுள்ளது.

அனைத்து சர்வதேச பாடசாலைகளும் முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர கல்வி அமைச்சுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையிலேயே உள்ளன. இவை வர்த்தக ரீதியாக செயற்படுகின்றன. இதனை முழுமையாக கண்காணிக்க தனியான பிரிவு ஏற்படுத்தப்படும்.

வருடம் தோறும் சர்வதேச பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அனுமதிப்பத்திரம் வழங்கும். பாடசாலையின் தரம் மற்றும் மாணவர்களின் கல்வித் தரம், கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் தரம், தகுதி என்பன தொடர்பாகவும் இந்த விசேட பிரிவு ஆய்வுகளை மேற்கொள்ளும்.

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இதுதொடர்பாக நேரடியாக சென்று ஆராய்ந்து அதனடிப்படையிலேயே வருடாந்தம் அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ஆட்சிக்காலத்தில் கணித பாட சித்தி மட்டத்தை 35 புள்ளிகளில் இருந்து 18 ஆக குறைத்து முறைகேடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com