Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவம் பொருளாதார ரீதியில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுவது தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்  உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகளை இராணுவத்தினர்  பொருளாதார வலயமாக பயன்படுத்துகின்றனர். வலிகாமம் வடக்கிலுள்ள 1,100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த ஒரு பிரிவில் மாத்திரம் மீளகுடியமர மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட இடங்களில் மக்களை முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். பலாலி, மயிலிட்டி பகுதி மீனவர்களின் மீள்குடியேற்றமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இராணுவத்திடம் கோரினால் 1 கிலோமீற்றர், 2 கிலோமீற்றர் தூரம் பாதுகாப்பு வேலியை பின்நகர்த்துகின்றோம் என்று கூறுகின்றனர். எமக்கு இராணுவத் தீர்வு தேவையில்லை. அரசியல் தீர்வுதான் தேவை. இராணுவம் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் விடுதி, பண்ணை நடத்துவதுடன் விவசாயம் செய்கின்றனர். உயர்பாதுகாப்பு வலயம் என்பது பொருளாதார வலயமாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மக்களுக்குரிய காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கையில் இரகசிய முகாம் இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த இரகசிய முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன்மூலம் கடத்தப்பட்டோர், காணாமற்போனோர் தொடர்பில் பல விடயங்கள் வெளிப்படுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 'உயர்பாதுகாப்பு வலயத்தை பொருளாதார வலயமாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக சனிக்கிழமை (28) இராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது கதைப்பேன். இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை. அவ்வாறு இருப்பதாக நான் அறியவில்லை. இது தொடர்பாக நாம் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டும்' என்றார்.

இலங்கைப் பிரச்சினையை தீர்ப்பதற்கான தென்னாபிரிக்க குழு செயற்படுகின்றது. அந்தக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் இவ்வாற பிரச்சினைகளுக்கு தீர்வை முன்னெடுத்துச் செல்லலாம். காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் நாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கை ஒரு பொருளாதார வலயமாக மாற்றுவதற்காக செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும். அதற்கான நிதியை பெற்றுத்தரமுடியும். யாழ்ப்பாணம் மாற்றமடைந்தால் நாடு மாற்றமடையும்' என்று ரணில் தெரிவித்திருந்தார்.

0 Responses to ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் பற்றி ஆமியுடன் பேசப்போகின்றாராம் ரணில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com