Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் அரசியலில் நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பிற்பகலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது, “இது ஒரு புதிய அரசாங்கம் ஆகவே நீங்கள் அவர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலில் மிக நீண்ட கால அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள புதிய சூழலில் நிறையவே பொறுமை தேவை.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பு முன்னர் ஏனைய அரசாங்கங்களோடு அணுகியதைப் போல இந்த அரசாங்கத்தோடு அவசர அவசரமாக எவ்விடயத்தையும் சிந்திக்காது அணுகக்கூடாது. ஏனெனில், இது ஒரு புதிய அரசாங்கம். பல நம்பிக்கை தரும் மாற்றமான கருத்துக்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது.

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பின் மூலோபாயக் குழு இவை தொடர்பில் விரிவாக ஆலோசித்து புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும்.” என்றுள்ளார்.

அத்தோடு, “இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா?” என்று நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், “ஆம்” என பதில் அளித்தனர். அப்படியாயின், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்து காரியத்தை வென்றெடுங்கள் எனவும் மோடி தெரிவித்துள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இணைந்த வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம். இணைந்த வடக்கு கிழக்கிலேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இந்திய இலங்கை ஒப்பந்தமும் இதனையே வலியுறுத்துகிறது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறினர்.

இனப்பிரச்சினைக்காக தீர்வு ஏற்படுகின்ற போது வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விடயம். வடக்கு, கிழக்கு இணைப்பு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. எனினும் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அந்த ஒப்பந்தம் இல்லாமல் செய்யப்பட்டது. தவிர வடக்கு, கிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்று பூர்வமான தாயகப் பிரதேசம் ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது முக்கியம்.

சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியேற்றப்பட வேண்டும். ஆனால் சொற்ப அளவிலேயே மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இன்றுதான் (வளலாயில்) அதுவும் தொடங்கப்பட்டுள்ளது. மிகுதி எப்போது நடக்கும் என்பது தெரியாது. இந்த விடயங்களையே இந்தியப் பிரதமருக்கு எடுத்துக் கூறினோம். தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கைகளை செவிமடுத்த பிரதமர் மோடி அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதியை சந்தித்தேன். அவர் காணி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார். அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன். ஆனால் இவை தொடர்பில் ஜனாதிபதி ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருக்கிறார் என நான் உணர்கிறேன். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும் என்றார். “இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே” என்று கேட்டார். இதற்குக் கூட்டமைப்பினர் “ஆம்” என பதில் அளித்தனர்.

0 Responses to இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்குங்கள்: கூட்டமைப்புவிடம் மோடி வலியுறுத்தல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com