Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒருவழியாக கடந்த வாரம் பீல்ட் மார்ஷல் என்ற பதவி நிலையைப் பெற்றுக்கொண்டு விட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் நடந்த நிகழ்வில் வைத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கடந்த 22ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில், அரசியல் நெருக்கடிகளால் வேறுவழியின்றி இரண்டு நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார் என்றே கூறலாம்.

அதில் ஒன்று சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷல் பதவி நிலைக்கு உயர்த்தும் நிகழ்வு.

அடுத்தது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேருக்கு அமைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து வைத்த நிகழ்வு.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த மன உளைச்சலுமின்றி சுயவிருப்புடன் நடத்தி வைத்தாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

ஏனென்றால் இந்த இரண்டு நிகழ்வுகளுமே அரசியல் பேரம் பேசலின் ஊடாக நடத்தப்பட்டவை.

அரசாங்கத்தின் தீர்மானமாக இல்லாமல், சம்பந்தப்பட்ட தரப்புகளாலேயே எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும், ஒரு கருவியாக மட்டுமே செயற்பட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதனால்தான் முன்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று குறை கூறியவர்கள், இப்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் அதிகரித்து விட்டதாக குறை கூறுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் பழைய கௌரவம் அளிக்கப்பட்ட வேண்டும் என்பது ஒன்றே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

தேர்தலுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்ரமசிங்க கூட்டணி, சரத் பொன்சேகாவுக்கும், சிராணி பண்டாரநாயக்கவுக்கும் பழைய கௌரவங்களைப் பெற்றுக் கொடுப்போம் என்று தாம் கூறியிருந்ததே தவிர அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவியைக் கொடுத்து உயர்ந்த நிலையில் வைப்போம் என்று கூறவில்லை.

ஆனால் பொது வேட்டபாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க கடைசி நேரத்தில் முடிவெடுத்த சரத் பொன்சேகா அதற்கான விலையாக தனக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் பீல்ட் மார்ஷல் பதவி நிலையையும் கோரியிருந்தார்.

இந்தப் பேரம் பேசல் அப்போதே ஊடகங்களில் கசிந்திருந்தது.

சரத் பொன்சேகாவின் நிபந்தனைக்கு பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன இணங்கியிருந்தார்.

அந்த இணக்கப்பாட்டின் அடிப்டையில் தான் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதே தவிர, இது இந்த அரசாங்கம் சுயமாக எடுத்த முடிவு அல்ல.

இலங்கையில் பீல்ட் மார்ஷல் பதவி நிலையை உருவாக்குவது குறித்து சரத் பொன்சேகாவைப் பற்றி எவருமே சிநிதித்திருக்கவில்லை. அதற்கான தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை.

சரத் பொன்சேகாவுக்குக் கூட தனக்கு நிகராக ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்ட போது தான் பீல்ட் மார்ஷல் கனவு தோன்றியது.

அதற்கு முன்னர் அவருக்கு அப்படியொரு கனவு இருந்ததாகவே தெரியவில்லை.

அதுபோலவே முன்னைய அரசாங்கத்துக்கோ, தற்போதைய அரசாங்கத்துக்கோ, பீல்ட் மார்ஷல் என்ற கௌரவம் மிக்க பதவியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கவில்லை.

ஆனால் சரத் பொன்சேகாவிடமிருந்து ஜெனரல் பட்டமும், அவரது இராணுவ விருதுகளும் பறிக்கப்பட்ட பின்னர், சில காலம் வெறுமையாக இருந்த போதும், போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததற்காக தனக்கு மட்டுமே அளிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட ஜெனரல் பதவி ஏனையவர்களுக்கும் வழங்கப்பட்ட போதும் தான், சரத் பொன்சேகாவுக்கு அதற்கும் அப்பால் கௌரவத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

2009ம் ஆண்டு சரத் பொன்சேகா ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்ட போது அவர், ஒருவர் மட்டும் தான் இலங்கை இராணுவத்தில் சேவையிலிருந்த போதே ஜெனரல் தர நிலையைப் பெற்றவராக இருந்தார்.

ஆனால், பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்ட போது சரத் பொன்சேகாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே, இராணுவத் தளபதியாக இருந்த லெப் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு முன்னைய அரசாங்கம் ஜெனரல் பதவி நிலையை வழங்கியது. அத்தோடு பதவியிலிருக்கும் போதே ஜெனரல் பதவியைப் பெற்ற ஒரே ஒருவர் என்ற கௌரவம் சரத் பொன்சேகாவை விட்டுப் போனது.

அதைவிட இறுதிக்கட்டப் போரில் வன்னிப்படைகளின் தளபதியாக இருந்தாலும், சரத் பொன்சேகாவினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெகத் ஜெயசூரியவுக்கும் ஜெனரல் பதவி நிலையை முன்னைய அரசாங்கம் அளித்ததை தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே சரத் பொன்சேகாவினால் பார்க்கப்பட்டது.

அதுமட்டுமன்றி இப்போதைய அரசாங்கமும் கூட முன்னாள் இராணுவத் தளபதியான தயா ரட்நாயக்கவுக்கும் கடைசி நேரத்தில் ஜெனரல் பதவியைக் கொடுத்தது.

இவர்கள் இருவருமே சரத் பொன்சேகாவின் கடுமையாக வெறுப்பைச் சம்பாதித்தவர்கள்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளில் இவர்கள் முக்கிய பங்காற்றியவர்கள். இதனால் அவர்களுக்கு இணையான ஜெனரல் பதவி நிலையை மீண்டும் புதிய அரசாங்கம் வழங்கிய போது அதையிட்டு சரத் பொன்சேகாவினால் திருப்தி கொள்ள முடியவில்லை.

அதனால்தான் தேர்தலுக்கு முன்னர், பீல்ட் மார்ஷல் பதவி நிலையை வைத்து பேச்ப்பட்ட பேரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்திருந்தார்.

ஆனால் தான் பீல்ட் மார்ஷல் பதவி நிலையைக் கோரவில்லை என்றும், தரப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வேன் என்றும் சரத் பொன்சேகா முன்னொரு தடவை ஊடகம் ஒன்றிடம் கூறியிருந்தார். எவ்வாறாயினும்“ சரத் பொன்சேகாவுக்கு இப்போது பீல்ட் மார்ஷல் பதவி நிலை அளிக்கப்பட்டு விட்டது.

இதன்மூலம் இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்ற கௌரவம் மட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.

தெற்காசியாவில் இந்தப் பதவி நிலையைப் பெற்ற 4வது இராணுவத் தளபதி என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

தெற்காசியாவில் இதற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதிகளான பீல்ட் மார்ஷல் சாம் மானெக்சா, பீல்ட் மார்ஷல் கரியப்பா ஆகிய இருவரும், பாகிஸ்தானில் பீல்ட் மார்ஷல் அயூப் கானும் இந்தப் பதவி நிலையைப் பெற்றுள்ளனர். உலகளவில் கூட இந்தப் பதவியை அபூர்வமாகத் தான் சிலர் பெற்றுள்ளனர். இந்தவகையில் சரத் பொன்சேகா தானும் அந்த வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதையிட்டு பெருமைப்பட முடியும். அதைத்தான் அவர் எதிர்பார்த்திருந்தார்.

உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதிகளில் சிலராக பெயரெடுத்து விட வேண்டும் என்பதே அவரது கனவு. அது நிறைவேறிவிட்டது.

ஆனால் அவர் இந்தப் பதவியை அடைந்த முறையோ,  பதவியேற்பின் போது நடந்துகொண்ட முறையோ அவருக்கான மதிப்பைக் குறைத்து விட்டதாகவே தோன்றுகிறது.

இந்தப் பதவிநிலை சரத் பொன்சேகாவுக்கு தானாகத் தேடி வந்திருந்தால் அது பெரும் கௌரவத்தை அளித்திருக்கும்.

ஆனால் அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பேரம் பேசலின் ஊடாக இதனை அடைந்துள்ளதால், அவருக்கு உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி பெரியளவில் மதிப்பைக் கொடுக்கப் போவதில்லை.

உள்நாட்டில் அவருக்கு அமைச்சர் ஒருவருக்கு இணையான கௌரவம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் அவருக்கான கௌரவமாக இருக்கும் என்பதை விட வெறும் அலங்காரமாகவே இருக்கும் போலத் தெரிகிறது.

பீல்ட் மார்ஷல் பதவிக்கான பேரம் பேசல், அவரதும் அந்த நிகழ்வினதும் முக்கியத்தைப் பெரிதும் ககுறைத்து விட்டதாகவே தோன்றுகிறது. ஏன் பாதுகாப்புததுறைக்குள் கூட சரத் பொன்சேகாவுக்கு இந்தப் பதவி நிலை வழங்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. பீல்ட் மார்ஷலாக சரத் பொன்சேகா 22ம் திகதி பதவி உயர்த்தப்படவுள்ளதான அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தினால் சில தினங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்ட போதும், இராணுவத்தின் இணையத்தளம் அதுபற்றி மூச்சே விடவில்லை.

பீல்ட மார்ஷல் பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர்தான் அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அதைவிட சரத் பொன்சேகாவுக்கு இந்தப் பதவிநிலை அறிவிக்கப்பட்ட போது முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கும் இந்தக் கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. அத்தகைய கோரிக்கைகளுக்கு சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, வேறு எவருக்கும் இந்தப் பதவி அளிக்கப்பட்க் கூடாது என்று அளித்த பதில் மிகவும் கீழ்த்தரமானதாகவே பார்க்கப்பட்டது.

சரத் பொன்சேகாவும், அவரைச் சுற்றியுள்ளவர்களும், பீல்ட்  மார்ஷல் பதவி விவகாரத்தில் தம்மைத் தாமே தரம் தாழ்த்தி விட்டனர் என்று தான் கூற வேண்டும்.

அதைவிட ஜெனரல் ஜகத் ஜெயசூரியவும், ஜெனரல் தயா ரட்நாயக்கவும் பங்கேற்றதால் தான் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்ததாக குறிப்பிட்டிருந்த சரத் பொன்சேகா அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் தாம் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் விதிவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பீல்ட் மார்ஷலுக்குரிய பற்றனை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைத்த போது அவருக்குப் பக்கத்தில் கூட்டுப்படைத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்காக சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.

அதேவேளை, அந்த நிகழ்வில் கைகுலுக்கு வாழ்த்துக் கூற முற்பட்ட ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு கைகுலுக்க மறுத்து, இராணுவ சம்பிரதாயங்களையும் சரத் பொன்சேகா மீறிவிட்டார். ஆக, சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக பதவிநிலையைப் பெற்றிருந்தாலும் அது அவரது பதவி, அதிகாரம், புகழ் மீதான மோகத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறதே தவிர, அவரது போராற்றலை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை.

சுபத்ரா

0 Responses to பொன்சேகாவும் பீல்ட் மார்ஷல் பதவியும்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com