Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்னை பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆலந்தூர் கூட்டத்தில் நான் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசும்போது, தயவு செய்து உங்கள் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒரு முதல்வர் நாட்டிற்கு, மக்களுக்கு ரகசியமானவராக இருக்கக்கூடாது. அவர் பகிரங்கமானவராக இருக்க வேண்டும்; வெளிப்படையானவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முதல்வரை நாம் பெற்றிருக்கிறோமா? இல்லை. நிச்சயமாக இல்லை, நான் இதை மிகுந்த துயரத்தோடு, வேதனையோடு சொல்கிறேன். முதல்வருக்குண்டான வேலையைச் செய்ய அவருக்கு உடல் நலம் இல்லை. அப்படிப்பட்ட காரணத்தினால்தான் எந்த நிகழ்ச்சியும் முதல்வர் பெயரால் அறிவிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்று பேசினேன்.

என்னுடைய இந்த பேச்சிற்குத் தான் பன்னீர்செல்வம் எச்சரிக்கை செய்திருக்கிறார். நான் அப்படி என்ன தவறாகப் பேசிவிட்டேன்? உடல் நலம் குன்றியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படும் முதல்வரை உடல் நலம் பேணுவதற்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியது தவறா?.

ஒரு முதல்வர் என்றால் அவருக்கு எத்தனை எத்தனை வகைவகையான பணிகள் இருக்கும்?. எத்தனை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்?. நான் ஜெயலலிதா என்ற தனி நபரைப் பற்றியா பேசினேன்?. தமிழகத்தின் முதல்வர் மாநில மக்களின் நலனுக்காக எப்படியெப்படி எல்லாம் பணியாற்றிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்க பன்னீர்செல்வம் போன்றவர்கள் வாழ்கின்ற தமிழகத்தில் எனக்கு உரிமை இல்லையா?.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி செய்தி வெளியிடாத பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் இருக்கின்றனவா?. அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்காத அரசியல் தலைவர்கள் உண்டா?. அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கருதினால், அமைச்சர் பன்னீர்செல்வம் தன் பெயரிலேயே, ‘‘முதல்வருக்கு உடல் நலம் நன்றாகத்தான் இருக்கிறது, அன்றாடம் அலுவலகம் வராததற்கு மட்டும் காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை’’ என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவது தானே?.

இன்னும் சொல்லப் போனால் 1.7.2015 அன்று நடைபெற்ற, முதல்வர் ஜெயலலிதாவே ஏற்பாடு செய்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இதே நிதியமைச்சர் பன்னீர்செல்வம் படித்த ஜெயலலிதாவின் உரையில், “திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை’‘ என்று தெரிவிக்கவில்லையா?. ஒரு முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வருவதே அகில இந்திய அதிசயங்களில் ஒன்றாகி விட்டதே; எப்படி?. ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக 4.7.2015 அன்று பதவியேற்ற பிறகு எத்தனை நாட்கள் ஆகின்றன?. இந்த இடைவெளியில் அவர் தலைமைச்செயலகத்திற்கு எத்தனை நாட்கள் வந்து அரசுப் பணிகளை மேற்கொண்டார்?.

பெங்களூரு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு எத்தனை நாட்கள் ஆகி இருக்கின்றன?. கடந்த 9 மாதங்களில் ஒரு அமைச்சரவை கூட்டமாவது நடந்தது உண்டா?. இந்த ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படாததால் புதிய திட்டங்கள் எதுவும் எடுத்துக் கொள்ளப்படவில்லையே?. வழக்கமாக நடைபெற வேண்டிய மாவட்ட ஆட்சியர்-காவல் துறை கண்காணிப்பாளர் மாநாடு 2014-ம் ஆண்டிலும், 2015-ம் ஆண்டு இதுவரையிலும் நடைபெறவில்லையே?.

மத்திய அரசு நிதி, கல்வித் துறையில் 4,400 கோடி ரூபாய்; காவல் துறையில் 1,500 கோடி ரூபாய்; செலவிடப்பட முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதற்கு அரசின் செயலற்ற தன்மை தானே காரணம்?. 110-வது விதியின் கீழ் முதல்வர் பேரவையில் செய்த அறிவிப்புகளுக்கான திட்டங்களில் இன்னும் 70 சதவீத அறிவிப்புகள், அறிவிப்பு நிலையிலேயே ஆழ்ந்த உறக்கம் கொண்டு விட்டனவே; என்ன காரணம்?. முதல்வர் அலுவலகத்தில் கோப்புகள் குன்றுபோல் குவிந்து கிடப்பதாக செய்தி வருகிறதே, ஏன்?.

14,600 கோடி ரூபாய் மதிப்பிலான மிக முக்கியமான ‘‘மெட்ரோ’’ ரெயில் திட்டத் துவக்க விழாவைக் கூட “வீடியோ’’ கான்பரன்ஸ் மூலம் நடத்தக் காரணம் என்ன?. சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்க முதலில் ஒரு தேதி அறிவித்து, பின்னர் அது ரத்து செய்யப்படக் காரணம் என்ன?. அதுபோலவே அதானி நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதாக அறிவித்து, அந்த நிறுவனத்தினரும் குஜராத்தில் இருந்து வருகை தந்து காத்திருந்தார்களே, குறிப்பிட்ட நாளன்று அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இந்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படக் காரணம் என்ன?.

முதல்வர் தினந்தோறும் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டுமா?, வேண்டாமா?. அன்றாடம் அலுவலகம் வராமல், ‘‘அத்தி பூத்ததற்கு ஒப்ப’’ என்பார்களே, அதைப்போல என்றோ ஒரு நாள் “வராத அரிய விருந்தாளி’’ போல தலைமைச் செயலகம் வந்துவிட்டு, அவசரம் அவசரமாக ‘‘வீடியோ கான்பரன்ஸ்’’ மூலமாகச் சில நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு, அரை மணி நேரத்தில் இல்லம் திரும்ப என்ன காரணம்?.

தொடர்ந்து மக்கள் மனதில் எழுந்துள்ள இந்த கேள்விகளுக்கு எல்லாம் என்ன பதில் என்று வாக்களித்து விட்டோமே என்ற ஜனநாயக உரிமையில் முதல்வரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்?. ‘‘கருணாநிதி, ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்’’ என்று நிதியமைச்சர் எனக்குத் தடை விதித்து எச்சரிக்கை செய்வது; மக்களை நிந்திப்பதாகாதா?. மக்களாட்சி என்பதை இழிவுபடுத்துவதாகாதா?. இன்னும் சொல்ல வேண்டுமானால், ஆலந்தூர் கூட்டத்தில் நான் அமைச்சர் பன்னீர்செல்வத்தை பாராட்டித்தான் பேசினேன். பரிதாபப்பட்டுத்தான் பேசுவதாகக் குறிப்பிட்டேன். அவரைப் பாராட்டுவதும், பச்சாதாபப்படுவதும் தவறு என்று அமைச்சர் எனக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறாரா? அல்லது தனக்கு வேண்டிய பதவி உயர்வு வராமல் போய்விடுமே என்று வாய்ச் சவடால் காட்டுகிறாரா?.

வாக்களித்த மக்களுக்கு ஆற்றிட வேண்டிய பணிகளை மறந்து, வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்கி, எல்லாத் துறைகளையும் செயலற்றதாக ஆக்கி, மாநில நிர்வாகத்தை கடன் என்னும் கடலுக்குள் தள்ளி சட்டம் ஒழுங்கை சாக்காட்டுக்கு அனுப்பி, தமிழகத்தின் பொது நலத்தை முழுதும் புறக்கணித்து, தமது சுயநலத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு வாக்களித்த மக்களின் சார்பில் கேள்விகளை எழுப்பினால், ஓ.பன்னீர்செல்வம் என்னை பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதா ஜனநாயகம்? என்று கூறியுள்ளார்.

0 Responses to ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார் - கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com