Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கும் என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளதாவது, “தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரத்தை யார் பெறுவது என்ற போட்டி நடைபெறுகிறது. எங்களைப் பொறுத்த வரை ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களே ஜனாதிபதியைத் தீர்மானித்தனர். இதனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் செய்து காட்டியுள்ளோம்.

குறிப்பாக முன்னைய ஜனாதிபதி தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதவை பெறாமல் 70 வீதமாகவுள்ள சிங்கள மக்களை வைத்து தாம் வென்றுவிடலாம் என்றே செயற்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.

இதேபோல தான் தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் கடும் போட்டி நிலை நிலவுகிறது. இந்த பாராளுமன்றம் கூட அறுதிப் பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசியக்கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியோ ஆட்சி அமைக்க முடியாத நிலை தான் இன்று தெற்கில் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த மூன்றாவது பெரிய அணியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் வரவேண்டிய தேவையுள்ளது.

குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலுமாக 18 தொடக்கம் 20 வரையான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று நாம் மூன்றாவது அணியாக வேண்டும். அப்படியான ஒரு சந்தர்பத்தில் தேசிய அரசாங்கத்தை அல்லது புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கப் போகிறது.

நூற்றுக்கு நூறு வீதம் வாக்களிக்க வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. காரணம் 2004 ஆம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டமைப்பு பெற்றிருந்தது. ஆனால் 2010 ஆண்டு அப்படி இருக்கவில்லை. காரணம் அப்போது அச்சுறுத்தலான நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது அச்சுறுத்தல் பெரிதாக இல்லை. ஆதலினால் நாம் அனைவரும் முழுமையாக வாக்களித்து மீண்டும் 2004 ஆம் ஆண்டினைப்போல் அதிக ஆசனங்களைப் பெறவேண்டும்.

குறிப்பாக வன்னி மாவட்டத்தில் உள்ள வாக்களர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நாங்கள் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறக் கூடிய நிலை இருக்கிறது. ஆனால் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பு வீதம் 38 ஆக இருந்தது. இதனால் தான் மூன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் என பிரதிநிதித்துவம் பிரிந்து செல்லக் கூடிய நிலை இருந்தது.

அன்றிருந்த நிலைமைகள் முற்றாக மாறியுள்ளது. தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. அந்த வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்த போதும் எமது அடிப்படை பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. காணாமற்போனோர், சரணடைந்தோர், வெள்ளைவானில் கடத்தப்பட்டோர், மீள்குடியேற்றம் என உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சனைகளும் இருக்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் பேச வேண்டியுள்ளது.

இதற்கு எமக்கு இருக்கின்ற பலம் மக்களின் ஆதரவு தான். ஆகவே மக்களின் தேவைகளையும் இந்த பிரச்சனைகளையும் தீர்க்க ஜனநாயக ரீதியாக நீங்கள் வாக்களிப்பது பலம். ஒவ்வொரு தேர்தலும் வருகின்ற போது பல சுயேட்சை குழுக்களும் கட்சிகளும் போட்டியிட்டு வாக்கை சிதறடிக்கின்றன. இன்றும் கூட வன்னியில் கட்சிகளும் சுயேட்சைகளுமாக 28 குழுக்கள் போட்டியிடுகின்றன. இந்த நிலையை உணர்ந்து வாக்குகள் சிதறாமல் தடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு விளங்கும்: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com