எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட சகல கருத்துக் கணிப்புக்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 113ற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலின் பின்னர் தான் பிரதமராக நியமிக்கப்படுவேனா என்பதைப் பொறுத்திருந்து பார்க்குமாறும் தெரிவித்துள்ளார்.
வெற்றிபெற்றதும் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை விட்டு வெளியேறவிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அவ்வாறு செய்வதற்கான எந்தவித காரணமும் இல்லையென்றும், அவ்வாறான நோக்கங்களுடன் செயற்படுபவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
சமஷ்டி முறையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்குத் தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லையெனவும், பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கம் தனியார் மற்றும் அரச ஊடகங்களை வசியப்படுத்தியிருப்பதுடன், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களை தமது தேவைக்கு ஏற்றவாறு செயற்படச் செய்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
தான் எப்பொழுதும் சிறுபான்மை மக்களின் பின்னால் நிற்பதாகவும், சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என தன்னைச் சித்தரிப்பதற்கு எதிர்த்தரப்பினர் முயற்சிப்பதாகவும் கூறினார். மக்களை முட்டாள்களாக்க முடியாது என்பதுடன், நடைபெறவிருக்கும் தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




0 Responses to ஐ.ம.சு.கூ 117 ஆசனங்களை வென்று ஆட்சியமைக்கும்: மஹிந்த